முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெறுகின்ற மணல் அகழ்வு கிரவல் அகழ்வு கருங்கல் அகழ்வு போன்ற கனிய வளங்களை பெற்றுக்கொள்கின்ற இடங்களிலே பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளும் கனியவளங்களை அழிக்கக்கூடிய வகையிலும் பாரிய சூழலியல் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும் அளவிலும் குறித்த பணிகள் இடம்பெறுகின்றன.
அபிவிருத்தி குழுக் கூட்டங்கள் மற்றும் ஏனைய கூட்டங்களில் பல தடவைகள் பொது அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஒரு சீரான ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவரும் முகமாக குறித்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தி அது தொடர்பில் மாவட்டத்தில் ஒரு குழு ஒன்றை அமைத்து அதனுடைய சிபார்சின் அடிப்படையில் இந்த விடயங்களையும் முன்னெடுப்பதாக தீர்மானித்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் காதர் மஸ்தான் அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் முகமாக மாவட்ட குழுவின் கலந்துரையாடலை நேற்றைய தினம்(05) மாலை நடத்தியிருந்தார்.
இங்கே குறித்த சட்டவிரோத அகழ்வு மற்றும் அனுமதிப் பத்திரம் பெற்று அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி இடம்பெறுகின்ற அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து முறைப்பாடு வைக்கப்பட்ட சில இடங்களை நேரில் சென்று அதிகாரிகள் ஆராய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது
இதனை தொடர்ந்து நேற்று மாலை கூட்டத்தை தொடர்ந்து சிலாவத்தை மற்றும் உப்புமாவெளி பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பிலும் அனுமதிப்பத்திரங்கள் பெற்று அனுமதிப்பத்திரத்துக்கு முரணான வகையிழும் இடம்பெறுகின்ற மணல் அகழ்வு தொடர்பில் கிடைக்கப்பெற்ற பாரிய முறைப்பாடுகளை தொடர்ந்து குறித்த பகுதியில் சட்டபூர்வமாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட இடத்தில் எவ்வாறு அகழ்வு இடம் பெறுகின்றது என்பது தொடர்பிலும் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுகின்ற சில இடங்களையும் நேரில் சென்று அதிகாரிகள் ஆராய்ந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், புவிச்சரிதவியல் மற்றும் கனியமணல் சுரங்கங்கள் பணியக பொறியியலாளர், காணி உதித்தியோகத்தர்கள், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த குழுவில் இணைந்திருந்தார்
இதன்போது அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களிலும் அனுமதிப்பத்திர நடைமுறைகளை மீறி பாரிய அளவில் மணல் அகழ்வு இடம் பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் காணப்பட்டதோடு சட்டவிரோதமாக சில இடங்களில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமையும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அபிவிருத்திக் குழு தலைவர் அவர்களால் பொலிசாருக்கு இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இவற்றைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த பகுதிகளில் தனியாரின் காணிகளிலேயே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.