நாளைக்கு நல்ல செய்தி வரும் என, கமலைச் சந்தித்த பிறகு சரத்குமார் தெரிவித்தார்.
பல கட்சிகளும் தங்களுடன் கூட்டணிக்காகப் பேசி வருவதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதிமுகவிலிருந்து விலகிய சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, திமுகவிலிருந்து விலகிய ரவி பச்சமுத்துவின் ஐஜேகேவும் இணைந்து ‘மாற்றத்திற்கான கூட்டணி’யை உருவாக்கின. அந்த இரு கட்சிகளும் கமலைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின.
பின்னர், சமீபத்தில் நடைபெற்ற சமக பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் – சமக – ஐஜேகே கூட்டணி உறுதி எனவும், முதல்வர் வேட்பாளர் கமல் எனவும் சரத்குமார் பேசினார். தன்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு நன்றி தெரிவித்த கமல், கூட்டணி குறித்து உறுதியாக ஏதும் கூறவில்லை.
இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன், சரத்குமார், ரவி பச்சமுத்து மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இன்று (6) ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர், சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எல்லாரும் பரஸ்பரம் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைப்பதற்கும், தேர்தலைச் சந்தித்து மாற்றத்தைக் கொண்டு வரவும் பயணிப்போம். தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். நாளைக்கு நல்ல செய்தி வரும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
அப்போது, தொகுதிப் பங்கீடு நாளைக்கு முடியுமா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நாளைக்குள் எல்லாமே முடிந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று சரத்குமார் தெரிவித்தார்.