பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற செனட் தேர்தலில் நிதி அமைச்சராக இருந்த அப்துல் ஹபீஸ் ஷேக் தோற்கடிக்கப்பட்டார். பாகிஸ்தான் ஜனநாயக இயக்க (பிடிஎம்) கூட்டணி வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான யூசுஃப் ராஸா கிலானி வென்றார். இத்தோல்வி பிரதமா் இம்ரான்கானுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இம்ரான்கான் அரசு மீது 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மைக்கு 172 வாக்குகள் பெற வேண்டி இருந்தது.
இந்நிலையில் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவாக 178 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதனை அதிகாரபூர்வமாக சபாநாயகர் அசாத் கைசர் அறிவித்தார்.
தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரான இம்ரான்கான், பாகிஸ்தான் பிரதமராக 18 ஓகஸ்ட் 2018 முதல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.