அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதையடுத்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் 520 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
அதுமட்டுமல்லாமல் ஜூன் 18ஆம் திகதி லண்டனில் நடைபெறும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு போட்டியை சமன் செய்து 72.2 சதவீதப் புள்ளிகளுடன், 520 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நியூஸிலாந்து அணி 70 சதவீதத்துடன் 420 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 332 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி 3வது இடத்திலும் 442 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 61.4 சதவீதப் புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன.
இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து ஐசிசி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 4,505 புள்ளிகளுடன், 122 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்று இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நியூஸிலாந்த்து அணி 118 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அவுஸ்திரேலிய அணி 113 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.