ஓமனிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் தூதரகத்தின் உதவியைப் பயன்படுத்தி அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நேரத்தில் இடதுசாரிகள் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சுங்கத்துறையினர் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் எனக் குற்றம் சாட்டி இடதுசாரி கூட்டணிக் கட்சியினர் இன்று சுங்கத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஓமனிலிருந்து அந்நியச் செலாவணியை அதாவது 1.90 லட்சம் அமெரிக்க டாலர்களை (ரூ.1.30 கோடி) கடத்திய குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஓமன் நாட்டுத் தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகளின் உதவியுடன், மஸ்கட்டிலிருந்து டாலர்களை ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரத்துக்குக் கடத்தியாக சுங்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சுங்கத்துறையினர் ஸ்வப்னா சுரேஷைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது, சிஆர்பிசி 180 மற்றும் 164-ன் கீழ் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சுங்கத்துறையினர் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்தனர்.
அதில், “ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில் சில அதிர்ச்சிக்குரிய தகவல்களை அளித்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், சில அமைச்சர்கள் ஆகியோருக்கு டாலர் கடத்தலில் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் தூதருடன், முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்களுக்கு இடையேதான் சட்டவிரோதமாக அந்நியச் செலாவணி பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஆகியோர் தூதரகத்தின் உதவியுடன் அந்நியச் செலாவணியைக் கடத்தியுள்ளதைத் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டனர்.
சுங்கத்துறையினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த பிரமாணப் பத்திரத்துக்கு இடதுசாரி ஜனநாயக முன்னணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இருக்கும் சுங்கத்துறை அலுவலகங்களை நோக்கி இன்று பேரணியாகச் சென்ற இடதுசாரி அமைப்பினர், அரசியல் நோக்கோடு சுங்கத்துறையினர், மத்தியில் ஆளும் பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த சுங்கத்துறை ஆணையர் சுமித் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஒரு அரசியல் கட்சி எங்களை மிரட்டப் பார்க்கிறது. அந்த மிரட்டல் பலிக்காது” எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இடதுசாரி ஜனநாயகக் கட்சியினர் சுங்கத்துறை அலுவகம் நோக்கி பேரணியாகச் சென்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், டாலர் கடத்தல் வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் வரும் 12-ம் தேதி கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சுங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் துணைத் தனிச்செயலாளர் கே.ஐயப்பனிடம் , டாலர் கடத்தல் தொடர்பாக 9 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.