28.6 C
Jaffna
September 22, 2023
முக்கியச் செய்திகள்

புலிகளிற்கு உணவு கொடுத்தது நானே; உசுப்பேற்றி அழிய வைத்த சம்பந்தனே முதலாவது யுத்த குற்றவாளி: ஆனந்தசங்கரி ‘அதகளம்’!

யுத்தத்தன் இறுதிக்கட்டத்தில் வன்னியில் 80,000 பேருக்குத்தான உணவு அனுப்ப முடியுமென மஹிந்த அரசு கூறிய போது, அவருடன் சண்டை பிடித்து 300,000 பேருக்கு உணவு அனுப்ப வைத்தேன். ஆனால், புலிகளை உசுப்பேற்றி, செய் அல்லது செத்து மடியென கூறவைத்து அழித்தது இரா.சம்பந்தனே. அவரும் கூட்டமைப்பின் இன்னொருவருமே முதலாவது யுத்த குற்றவாளிகள். அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என அதகளப்படுத்தியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி.

அவர் இன்று (5) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பின் அறிக்கை சர்வதேச சமூகத்தை ஈர்க்குமென, திரு.இரா.சம்பந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை.

அவர் நினைத்திருந்தால் யுத்தத்தையும் தடுத்து நிறுத்தி, விடுதலைப் புலிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுபட வைத்திருக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை அந்த காலகட்டத்தில் இருந்தது. விடுதலைப் புலிகள் அரசியலுக்கு வந்தால் தன்னுடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற நினைப்பில், விடுதலைப் புலிகளை உசுப்பேத்தி அவர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி செய்! அல்லது செத்துமடி! என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்.

அதுமட்டுமல்ல விடுதலைப் புலிகளை அழித்த சரத் பொன்சேகா அவர்களை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து நன்றிக்கடனை தீர்த்துக் கொண்டார். விடுதலைப் புலிகள் அழிந்தால் தமிழ் மக்களும் அழிவார்கள் என்ற விடயம் திரு.சம்பந்தன் அவர்களுக்கு தெரியாதா? தமிழ் மக்கள் எவ்வளவு பேர் அழிந்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் அழிந்தால் போதும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, செயற்பட்ட திரு.சம்பந்தன் அவர்கள் இன்று ஐ.நா விற்கு அறிக்கை சமர்பிக்க முயற்ச்சிக்கின்றார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை அழிவுகளிற்கும் முக்கியமாக திரு.சம்பந்தனும் மற்றும் ஒருவரும் பொறுப்புக் கூற வேண்டும். யுத்த குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டிய முதல் குற்றவாளிகளும் இவர்களே.

ஏனெனில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளோடும், இலங்கை அரசோடும், நடுநிலை நாடுகளோடும் சமரசத்திற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்காது, விடுதலைப் புலிகள் மூலம் வெற்றி பெற்ற 22 பாரளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, யுத்த அழிவுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்வகட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாது தவிர்த்தார்.

விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் தோல்வியடைந்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் இல்லையேல் தங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை துறக்க வேண்டும் என 11.01.2009ம் திகதிய எனது கடிதத்திற்கிணங்க ஏன் மக்களை காப்பாற்ற முன்வரவில்லை? எமது மக்களைக் காப்பாற்ற கடைசி சந்தரப்பம் என்று 16.03.2009ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனுக்கு நான் எழுதிய கடிதத்திற்கிணங்க அவர்களிடம் அணுகி நிலைமைகளை கூறி ஏன் யுத்தத்தை தடுக்க முன்வரவில்லை?

10.04.2009ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. சிவசங்கர் மேனன் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்த போது, யுத்தத்தை நிறுத்துங்கள் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்று, திரு.மாவை சேனாதிராஜா மூலம் மேதாவித்தனமான அறிக்கை விடுத்து தட்டிக்கழித்தார். 02.05.2009ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்~விற்கு பல்வேறு ஆலோசனைகளுடன் அரசுக்கு ஏற்புடைய ஒரு சர்வதேச அமைப்பை தெரிவு செய்து விடுதலைப் புலிகளுடன் ஆலோசித்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவுமாறு எழுதிய எனது கடிதத்திற்கு ஏற்றவாறு திரு. சம்பந்தன் அன்றைய ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசனை செய்து மக்களை பாதுகாக்க ஏன் முன்வரவில்லை?

பிரித்தானிய பாராளுமன்றக் குழு இலங்கை வந்த போது இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக ஒரு மிகப்பெரிய அனர்த்தம் நடக்கப் போகின்றது என்று கூறி, மெதுவாக நழுவிக் கொண்டார். யுத்த காலத்தில் அவரின் குழுவில் குறைந்தது 12 உறுப்பினர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அனுப்பிவிட்டு தற்போது இப்படியான ஒரு செய்தியை வெளியிட வெட்கம் இல்லையா? நான் அவரை கேட்க விரும்புவது யாதெனில் அவரின் உறுப்பினர்கள் அனைவரினதும் தொலைபேசிகள் யுத்த கால இறுதி நாட்களில் இயங்கவில்லை என்ற கூற்று உண்மையா?

இலங்கை அரசின் இறுதி சர்வகட்சிக் கூட்டத்தில் திரு.சம்பந்தன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் நான் கலந்து கொண்டு இன்னும் மூன்று இலட்சத்திற்கு மேல் மக்கள் உணவின்றித் தவிக்கிறார்கள் என்று கூறினேன். அந்த வேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்கள் இன்னும் எண்பத்தையாயிரம் பேர் தான் அங்கே இருக்கிறார்கள் என்று, ஏதோ தரவுகளைக்காட்டி சுட்டிக்காட்ட, என்னால் சுட்டிக்காட்டப்பட்ட கணக்கில் நான் உறுதியாக இருக்க, “விடுதலைப் புலிகள் நன்றாக சாப்பிட்டு சண்டை போடட்டும்” என்று தமிழில் கூறிவிட்டு மூன்று இலட்சம் பேருக்கு உணவை அனுப்புகிறேன் என்று கோவத்துடன் கூறி எழுந்து சென்றார்.

இந்த நேரத்திலாவது திரு.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தால் பலரின் பட்டினி சாவையும் தடுத்திருக்கலாம். எஞ்சியிருந்த போராளிகளையும் பாதுகாத்திருக்கலாம். இத்தனையையும் செய்யத்தவறிய திரு.சம்பந்தன் எவ்வாறு ஐ.நா விற்கான அறிக்கையை தயாரிக்கப் போகின்றார்? எல்லாவற்றிற்கும் மேலாக 2015ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டு வரை நடந்த, எதிர்க்கட்சித் தலைவர் கதிரையை அலங்கரித்த தேசிய அரசாங்கத்தில், யுத்தத்தை நடத்தி முடித்த, வெள்ளைக் கொடி விவகாரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய கௌரவ சரத்பொன்சேகா அவர்களுடன் கூடிக் குலாவித் திரிந்த போது யுத்தத்தில் என்ன நடந்தது என்ற விபரங்களை அவரிடம் கேட்டுப் பெற்று அந்தக்கால கட்டத்தில் நடந்த ஐ.நா மனித உரிமை மாநாட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரு அறிக்கையை ஏன் சமர்ப்பிக்கவில்லை?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறி விட்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் அந்த அறிக்கையை தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திரு. சம்பந்தன் அவர்களினதும் அவரின் உறுப்பினர்களினதும் கடந்த கால முரண்பாடான கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அறியும் போது, வெட்கித் தலைகுனிந்து தான் ஆக வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா? இறுதி யுத்தத்தில் நடந்த குற்றங்களுக்கு முழுவதுமாக பொறுப்பேற்று பதவிகளை இராஜினாமா செய்து விட்டு, வாய்மூடி மௌனமாக இருப்பதே திரு. சம்பந்தன் அவர்களுக்கு நான் கூறும் அறிவுரையாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை வெளிப்படுத்துவோம்’: சஜித் சூளுரை!

Pagetamil

ரணில்- ஐ.நா பொதுச்செயலாளர் சந்திப்பு!

Pagetamil

திலீபன் நினைவு வன்முறை வடிவமெடுக்கிறது: கொழும்பிலிருந்து வந்த பொலிஸ்குழு யாழ் நீதிமன்றத்தில் மீள மனுத்தாக்கல்!

Pagetamil

‘இனி ஆயுதங்கள் வழங்க மாட்டோம்’: முக்கிய நாட்பு நாட்டின் அறிவித்தலால் உக்ரைனுக்கு அதிர்ச்சி!

Pagetamil

உலகக்கிண்ணம் வரை தசுன் ஷானக கப்டனாக செயற்படுவார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!