வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனது தமிழ் மக்கள் கூட்டணியை பதிவு செய்த தேர்தல்கள் திணைக்களத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியை பதிவு செய்ய ஏற்கனவே அவர் விண்ணப்பித்திருந்த போதும், விதிமுறைகளிற்குள் அது உட்படாததால் அப்பொழுது பதிவு செய்யப்படவில்லை.
தற்போது, புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல்கள் திணைக்களம் விடுத்துள்ள நிலையில், மீண்டும் விக்னேஸ்வரன் தரப்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி கட்சிக்காக பொங்கல் பானை சின்னத்தையும் கோரியுள்ளார்.
இம்முறை விக்னேஸ்வரனின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் என தெரிகிறது.
புதிய கட்சியொன்றை அங்கீகரிப்பதற்கான தகைமைகளை விக்னேஸ்வரன் தரப்பு கொண்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைத்து, நாடாளுமன்ற தேர்தலில் இரண்டிற்கும் குறையாத வேட்பாளர்கள் போட்டியிட்டு, ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமையை கொண்டிருக்க வேண்டும் என்ற தகைமையை விக்னேஸ்வரன் தரப்பு கொண்டிருப்பதால், அவரது கட்சி இம்முறை அங்கீகரிக்கப்படும்.
தனது கட்சியை பதிவு செய்ய விக்னேஸ்வரன் விண்ணப்பம் செய்ததை, அவர் புதிய கட்சி ஆரம்பிப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதை பல தமிழ் ஊடகங்களும் பிரதி செய்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.