மார்ச் 1 ஆம் திகதி டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட யுவதியின் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான உபபொலிஸ் பரிசோதகரின் பிரேத பரிசோதனை இன்று (4) நடத்தப்படும்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி.என்.ஏ பரிசோதனையை நடத்திய பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொல்லப்பட்ட பெண்ணின் தாய், சகோதரனின் டி.என்.ஏ மாதிரிகள் பெறப்படும் என்று அவர் கூறினார்.
இதேவேளை, பெண்ணின் சகோதரனான குருவிட்ட பிரதேசசபை உறுப்பினர், நேற்று பெண்ணின் உடலை அடையாளம் காட்டினார். அவரது கால் நகத்தில் இருந்த அடையாளம், வயிற்றில் இருந்த வடுவின் அடிப்படையில், தலையற்ற நிலையில் மீட்கப்பட்ட சடலம் தனது சகோதரியிடையது என அடையாளம் காட்டினார்.
ஹன்வெல்லயில் யுவதி கொல்லப்பட்ட தங்குமிடத்தில் இரத்த கறைகள் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், தங்குமிடம் 3 நாட்களிற்கு சீல் வைக்கப்பட்டு தடயவியல் பொலிசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த ஜோடி தங்கியிருந்த அறையின் கழிப்பறையில் இரத்த கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வோஷ் பேசின் மற்றும் கொமட் பகுதிகளில் இரத்த கறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
யுவதியின் தலை துண்டிக்கப்பட்ட பின்னர் கழிப்பறை குழிக்குள் இரத்தம் வடிவ விடப்பட்டிருககலாமென பொலிசார் கூறுகின்றனர்.
சந்தேகநபரான உபபொலிஸ் பரிசோதகர் பிரேமசிறி, ஹன்வெல்லவில் உள்ள ஒரு கடைக்கு 1 ஆம் திகதி காலை 9.00 மணிக்குச் சென்று, ரூ .6,250 செலுத்தி, அந்த பயணப்பையை வாங்கியிருப்பது சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
யுவதியின் கழுத்தை வெட்டப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் ஹன்வெல்லவில் உள்ள ஒரு கத்தி கடையிலிருந்து வாங்கப்பட்டது. விசாரணையில் சந்தேகநபர் ஒரு கயிற்றை வாங்க விரும்பியதும் தெரியவந்துள்ளது, ஆனால் கயிறை வாங்கவில்லை.
யுவதியின் உடலை பயணப்பையில் வைத்து எடுத்து சென்றபோது, அவரது முதுகில் சிறிய பை காணப்பட்டது. அதில் யுவதியின் தலை இருந்திருக்கலாமென கருதப்படுகிறது. டாம் வீதியில் உடல் அடங்கிய சூட்கேஸை விட்டுச் சென்ற போதும், அவரது முதுகில் அந்த பொதி காணப்பட்டது.
இருப்பினும், அதே நாளில் அவர் படல்கும்புரவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றபோது, அவரிடம் அந்த பொதி இருக்கவில்லை என்பது தெரியவந்தது. அவர் வழியில் பொதியை வீசியதாக சந்தேகிக்கப்படுகிறது.
வீடு திரும்பும் போது, படல்கும்புர நகரத்தில் பல கடைகளில் விசப் போத்தலை வாங்க முயன்றுள்ளார். இறுதியில் ஒரு கடையில் விசப்போத்தலை வாங்கியதுடன், தனது பிள்ளைகளிற்கு ஐஸ்கிறீமும் வாங்கிக் கொண்டு வீடு சென்றார்.
வீடு சென்று மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்தார். அன்று மாலை பொலிசார் அவரது வீட்டுக்கு சென்றபோது, பின்பகுதியால் தப்பியோடினார்.