தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (4) விருப்ப மனுத் தாக்கல் செய்தார்.
தமிழகத்திற்கு ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளதாக, தேமுதிக அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பிப்ரவரி 25 முதல் தேமுதிக விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. பொதுத்தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும், தனித்தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விருப்ப மனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருப்ப மனுத் தாக்கல் செய்தார். தொகுதிப் பங்கீடு நிறைவடையாத நிலையில், எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பதை விருப்ப மனுவில் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், தேமுதிக சார்பாகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேர்காணல் நடத்த உள்ளார்.