முன்னாள் இலங்கையணி தலைவர் சனத் ஜயசூரிய, செல்வாக்கின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பெற்ற குற்றச்சாட்டையடுத்து, ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா வேறு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சனத் ஜெயசூரியவுக்கு தடுப்பூசி செசலுத்தியதில் அவர் தலையிட்டதாகக் கூறப்படுவதால் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இடமாற்றம் குறித்த செய்திகளைக் கேட்டதாகக் கூறினார். எவ்வாறாயினும், இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், இதனால் இடமாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படுவது குறித்து அவருக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட முடிவை பரிசீலித்து வருவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியவர்களில் ஜெயசூரிய எவ்வாறு சேர்க்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், பாதிக்கப்படக்கூடியவர் என்று வரையறுக்கப்பட்ட பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டிருந்தால் அவர் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்துள்ள கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய, தான் செல்வாக்கை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார்.
தனது பகுதியில் தடுப்பூசி மையம் இல்லாததால் தான் சுகாதார அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷா டி சில்வாவை தொடர்பு கொண்டதாகவும், திம்பிரிகஸ்யாயாவில் தடுப்பூசி மையம் இல்லாததால் உதவி கோரியதாகவும் அவர் கூறினார்.
தடுப்பூசி செலுத்தியதற்காக தான் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாக ஜெயசூரியா கூறியுள்ளார்.