கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ‘மெட்ரோ ஸ்ரீதரன்’ அறிவிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே பாஜகவில் இணையவுள்ளதாக ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் முதன்முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தி பெரும் புகழ் பெற்றவர் ஸ்ரீதரன். இதுமட்டுமின்றி, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் நிர்வாகியாகவும் இருந்தார். இதனால் அவர் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் என்றே அழைக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஸ்ரீதரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.
கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக விஜய் யாத்திரா நடைபெற்று வருகிறது.
கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தலைமையில் நடைபெறம் இந்த விஜய் யாத்திரையில் முறைப்படி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் ஸ்ரீதரன்.
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவினர் ஸ்ரீதரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேடையில் அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
இந்தநிலையில் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் மெட்ரோ ஸ்ரீதரன் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக கேரள மாநில தலைவர் சுரேந்திரன் கூறுகையில் “மெட்ரோ மேன் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீதரனை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்மொழியவுள்ளோம். அவரது திறமையும், அவர் மீதான நம்பிக்கையும் வெல்ல முடியாத ஒன்று. மோடி அரசு மற்றும் வளர்ச்சி அரசியல் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் மெட்ரோ ஸ்ரீதரனை முதல்வர் பதவியில் அமர வைப்பாளர்கள்“ எனக் கூறினார்.