கொழும்பு டாம் வீதியில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலையின் பிரதான சூத்திரதாரியான 50 வயதான உபபொலிஸ் பரிசோதகர் தப்பியோடி காட்டிற்குள் மறைந்துள்ளார்.
பதுளை, வெஹரகட, படல்கும்புரவில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு நேற்று பொலிசார் சென்றபோது சந்தேக நபர் வீட்டின் பின்புற கதவு வழியாக தப்பியோடி, காட்டிற்குள் மறைந்துள்ளார்.
கொல்லப்பட்ட யுவதி குருவிட்ட, படோகம, தெப்பகம பகுதியை சேர்ந்த லினியகுமார துலானிகே திலினி யசோதா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.யுவதியின் சகோதரர் உள்ளூர் அரசியல்வாதி. சந்தேக நபர் திருமணமானவர்.
கடந்த 1ஆம் திகதி டாம் வீதியில் சூட்கேஸிலிருந்து யுவதியின் தலையில்லாத உடல் கண்டுபிடிக்கப்ட்டது.
பொலிசார் நடத்திய விசாரணையில், புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 50 வயதான உபபொலிஸ் பரிசோதகரே சூத்திரதாரியென்பது தெரிய வந்தது. அவர் திருமணமாகி படல்கும்புரவில் வசிக்கிறார். 18 வயதான மகனும் உள்ளார்.
சந்தேகநபர் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி விடுப்பு பெற்று சென்றார். அன்றிரவு 10.00 மணியளவில் ஹன்வெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த பெண்ணுடன் அறை 106 ஐ வாடகைக்கு எடுத்திருந்தார்.
ஹோட்டலில் தங்கியிருந்தபோது அவர் மூன்று முறை அந்தப் பெண்ணுடன் வெளியே சென்று வந்தார். மறுநாள் (01) காலை 10.00 மணியளவில் ஹோட்டலில் இருந்து புறப்பட்டார். அதற்கு முன்னர் அந்தப் பெண் கொல்லப்பட்டு, பொலித்தீனில் சுற்றப்பட்டு, சூட்கேஸிற்குள் வைக்கப்பட்டார்.
கழுத்தை நெரித்ததால் மரணம் நிகழ்ந்திருக்கலாமென விசாரணையாளர்கள் நம்புகிறார்கள். பின்னர் சில மணி நேரங்களின் பின்னர் கழுத்து வெட்டப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
ஹொட்டல் அறை முழுவதையும் சுத்தம் செய்துள்ளார்.
சந்தேக நபர் ஹோட்டல் பில் ரூ .4100 செலுத்தி முச்சக்கர வண்டியில் சென்றுவிட்டார். பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்த சூட்கேசுடன் பேருந்தில் கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.
டாம் வீதியில் சடலத்துடனான சூட்கேஸை விட்டு விட்டு தலைமறைவானார்.
பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பெண்ணின் உள்ளாடைகள் அடங்கிய பொதி, ஹன்வெல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டாம் வீதியில் தலையற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சந்தேக நபர் என நம்பக்கூடிய ஒருவர் ஹோட்டல் உரிமையாளரை அழைத்து அவரது தகவல்களை கசியவிட்டால் கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண், சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகரின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் வீட்டின் பின்பகுதியால் காட்டிற்குள் தப்பியோடி விட்டார். அவர் தப்பியோட முன்னர் மனைவியிடம் மன்னிப்பு கேட்கும் கடிதமொன்றை வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
அந்த கடிதத்தில், ”நான் ஒரு பெரிய தவறு செய்தேது விட்டேன். நீங்கள் அவமானப்படுவீர்கள். அவற்றை பொறுத்துக் கொண்டு வாழுங்கள். அம்மாவிற்கு மூன்று மாத நன்கொடை கொடுங்கள். எனது இறந்த உடலையே பொலிசார் கண்டுபிடிப்பார்கள் ” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு 18 வயது குழந்தை மற்றும் 10 வயது பிள்ளைகள் உள்ளனர். குழந்தைகளும் அவரது மனைவியும் நேற்று இரவு (02) பொலிசாருடன் காட்டுப் பகுதிக்குச் சென்று கத்திக் கூப்பிட்டனர். ஆனால் அவர் வரவில்லை.