♦சியா
‘இவளும் ஒரு தாயா?’, ‘இப்படியும் ஒரு பெண்ணா?’- இப்படி பல கேள்விகளுடன் நேற்று முன்தினம் இரவு முதல் சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் வீடியோ, இனம், மதம், மொழி கடந்து பலராலும் பார்க்கப்படுகிறது.
“தந்தையை பணம் அனுப்ப வைக்க அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது“ என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தந்தையை பணம் அனுப்ப வைக்க ஏன் குழந்தையை அடிக்க வேண்டும்?, என்ற கேள்வி எழ, இந்த சம்பவத்தின் பின்னாலுள்ள குடும்ப, சமூக, உள, மருத்துவ காரணங்கள் என்ன என அறிந்து கொள்வதற்காக தமிழ் பக்கம் அந்த குடுத்தினரிடம் சென்றோம்.
அந்த பெண்ணிற்காக முன்னிலையாகுவதற்கு சட்டத்தரணி வைஷ்ணவி ஆர்வமாக இருந்தார். அவருடன் பேசி, இருவரும் அந்த சம்பவத்தை தேடிச் சென்றோம்.
முதலில் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையிலுள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றோம். வீட்டிற்கு அருகில் சில அயலவர்களுடன் பேசினோம். அந்த குடும்பத்தை பற்றி தமக்கு ஒன்றும் தெரியாது என சொல்லி விட்டார்கள். பேசிக் கொண்டிருந்த போதே, ஒரு இளைஞன் வந்தார். அவர்தான் குழந்தையின் தாயின் சகோதரன் என அவர்கள் அறிமுகம் செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரியின் ஆவணங்களை கொடுப்பதற்காக, சகோதரன் புறப்பட்டிருந்தார். அயலவர்களும், அவரும் பேசியதை வைத்து பார்த்த போது, அவர்கள் ஆரம்பத்தில் பொய் சொல்லியிருக்கலாமென தோன்றியது.
அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டுக்கு சென்றோம்.
அவர்தான் அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவு செய்தவர்.
வீட்டில் தந்தை, சகோதரி இருந்தார்கள்.
அந்த குடும்பம் ஒரு வருடமாக கொழும்புத்துறையில் வசித்து வந்தார்கள். மீன்பிடி தொழிலுடன் தொடர்புடைய வேலையொன்றை தனியார் முதலாளியொருவரின் கீழ் தந்தை செய்து வந்தார். சிறிய வேலைகளிற்கு 17 வயதான சகோதரன் சென்று வந்தார்.
“அக்கா குழந்தையை அடித்த சமயங்களில், அடிக்காதே என சொல்லி வந்தேன். சில நாட்களின் முன்னர், அவரது கணவர் பணம் அனுப்பாததை சுட்டிக்காட்டி பகிடியாக கதைத்தோம். நாம் சிரிப்பதை பார்த்து குழந்தையும் சிரித்தது. அப்பாவை கிண்டலடிக்கிறார்கள், நீ சிரிக்கிறாயா என குழந்தையை அடித்தார். குழந்தையை அடிக்காதே என நான் அவருக்கு அடித்து விட்டேன். அவர் அப்பாவிடம் சொன்னார். அக்காவிற்கு அடிக்கக்கூடாது என அப்பா சொல்லிவிட்டார். இதனால், அவர் குழந்தையை அடிப்பதை அப்பாவிடம் காட்டுவதற்காக வீடியோ எடுத்தேன். அப்பாவிற்கு காட்டிவிட்டு, திருகோணமலையிலுள்ள இரண்டு அக்காக்களிற்கு அனுப்பினேன்.
வீடியோவை தா, குழந்தையின் அப்பாவிற்கு அனுப்புவோம், அதை பார்த்து விட்டாவது பணம் அனுப்பட்டும் என அக்கா கேட்டு, வீடியோவை வாங்கி அனுப்பினார். குழந்தையின் தந்தைதான் அந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டார்“ என்றார்.
எனினும், குழந்தையின் தாய் அதை மறுக்கிறார். தனது கணவன் வீடியோவை பகிரவில்லையென்றார்.
கைது செய்யப்பட்ட மேரி கனிஸ்டாவின் தந்தை ஜோன்சனும் சில விடயங்களை பேசினார்.
அவர் திருகோணமலையை சேர்ந்தவர். மனைவியும் திருகோணமலை. அவர்களுக்கு 11 பிள்ளைகள். 3 பிள்ளைகள் இறந்து விட்டனர். எஞ்சியவர்களில் நான்கு பேர் திருமணம் செய்து விட்டனர். கொழும்புத்துறையில் தந்தையுடன் மூவர் இருக்கிறார்கள். ஒரு சகோதரன் திருகோணமலையில் வசிக்கிறார்.
“மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்ணான சென்ற தனது மகள், ஒரு குழந்தையுடன் திரும்பி வந்ததால், சொந்த இடத்திற்கு கூட்டிச் செல்ல விரும்பவில்லை. எனதும் மனைவியினதும் உறவுகள் அங்கு இருக்கிறார்கள். தந்தையில்லாமல் தாயையும், பிள்ளையையும் கூட்டிச் செல்வது எமது கௌரவத்திற்கு பாதிப்பாகும். அதனால் யாழ்ப்பாணம் கூட்டி வந்தேன்.
வரும் 8ஆம் மாதம் கணவன் இங்கு வந்து விடுவார் என மகள் கூறுகிறார். அதன் பின்னர் இருவரையும் திருகோணமலைக்கு கூட்டிச் செல்லலாம் என இருக்கிறேன்.“ என்றார்.
குடும்பத்தினருடன் பேசியதில், மேரி கனிஸ்டாவின் குவைத்திலுள்ள கணவர் பணம் அனுப்புவதில்லையென்பது தெரிந்தது. கணவர் குறித்து விசாரித்தோம்.
“இரண்டு மாதங்களாக பிள்ளை இங்கிருக்கிறார். கணவன் பணம் அனுப்பவில்லை. அவர் ஒரு முஸ்லிம் நபர். பிள்ளையில் பாசமாகத்தான் இருக்கிறார். தினமும் பிள்ளையின் முகத்தை பார்க்கிறார்.
கொரோனா காரணங்களினால் தொழில் முடக்கம், இங்கு வர முடியவில்லையென மகளிடம் கூறுகிறாராம். அவருக்கு தமிழ் தெரியாது. அதனால் அவர்கள் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை“ என்றார்.
யார் அந்த கணவன்?
மேரி கனிஸ்டா 1997ஆம் ஆண்டு ஜனவரியில் பிறந்தவர். குடும்ப சூழல் காரணமாக, ஒரு அப்பாவி- உலகம் அறியாத சிறுமியாக 2015 ஆம் ஆண்டு டுபாய் சென்றார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது, பேஸ்புக் ஊடாக ஒரு காதல் மலர்ந்தது. காதலன் இந்தியாவை சேர்ந்தவர், குவைத்தில் பணியாற்றுகிறார் என்கிறார்.
கனிஸ்டாவை குவைத் வருமாறு வலியுறுத்திக் கொண்டிருந்தார். காதலனிடம் செல்வதற்காக 2018 டிசம்பரில் மீண்டும் இலங்கை வந்தார்.
குவைத்திலுள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக பணியாற்றும் விசா ஏற்பாடுகளை பேஸ்புக் காதலனே மேற்கொள்ள, 2019 ஜனவரியில் குவைத் சென்றார்.
குவைத்தில் பணியாற்றிய வீட்டில் விபரிக்க முடியாத சித்திரவதைகளிற்கு உள்ளாகியுள்ளார். அவற்றை பற்றி பேசிய போது, கனிஸ்டாவின் தாயார் கண்ணீர் விட்டு அழுதார். அந்த வீட்டில் தொடர்ந்து தங்கியிருக்க முடியாத நிலையில், காதலனின் உதவியுடன் ஒரு சாகச முயற்சியின் மூலம் வீட்டிலிருந்து வெளியேறினார்.
பின்னர் இருவரும் அறையொன்றில் தங்கியிருந்துள்ளனர். 2020 ஜூன் 7ஆம் திகதி குழந்தை பிரசவித்தார்.
2021 ஜனவரி 3ஆம் திகதி குழந்தையுடன் நாடு திரும்பினார். 21 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமிலும், பின்னர் வீட்டில் 14 நாட்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
தாய் சொல்வதென்ன?
குழந்தையை தாக்கியதாக கைதான தாயுடனும் பேசினோம். அவர் ஒரு அப்பாவியாக, வெளிநாட்டிலுள்ள காதலனை அதிகம் நம்புபவராக, அதேநேரம் காதலனின் நம்பிக்கையீனத்தை எந்த நேரமும் சுட்டிக்காட்டும் குடும்ப சூழலை எதிர்கொள்ள முடியாதவராக, ஏற்கனவே வறுமையிலுள்ள குடும்பத்தில் புதிதாக கைக்குழந்தையுடன் இணைந்து பெரும் பொருளாதார நெருக்கடியுடன், வெளிநாட்டிற்கு சென்ற இடத்தில் கர்ப்பமானதாக சமூகத்தின் வசைச்சொல்லை எதிர்கொள்ள முடியாதவராக தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“இப்பொழுது முடியாது. சிறிது காலத்தின் பின் பணம் அனுப்புகிறேன், நாட்டிற்கு வருகிறேன்“ என கணவன் சொல்வதை நம்பும் மனைவி கனிஸ்டாவிற்கும்…. பணமும் அனுப்ப மாட்டார், இங்கு வரவும் மாட்டார், அவர் உன்னை ஏமாற்றி விட்டார் என குடும்பத்தினர் உருவாக்கும் அவநம்பிக்கை சூழலில் தத்தளிக்கும் மகளாக, சகோதரியாக கனிஸ்டாவிற்குமான உள மோதல் அவரை பெரும் மனநெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது.
“வெளிநாட்டிலுள்ள கணவன் திரும்பி வர மாட்டார் என்பதை அவர் விளங்கிக் கொள்ளவில்லை. அவர் வருவார் என அதிகமாக நம்புகிறாள். இரண்டு மாதமாக எம்முடன் இருக்கிறாள். அவர், இங்கு வருபவராக இருந்தால் குழந்தையின் பராமரிப்பிற்கிற்காவது பணம் அனுப்பியிருப்பார். ஒருநாள் கூட மகளிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தியதில்லை. மகள் தொலைபேசி அழைப்பேற்படுத்தினால்தான் பேசுவார். எமது தொலைபேசியில்தான் மகள் பேசுவார். கணவர் ஏமாற்றுகிறார் என கூறி இன்னொரு திருமணம் செய்யுமாறு கேட்டாலும் மகள் ஏற்றுக்கொள்ளவில்லை“ என்றார் தாயார்.
அவர் வருவாரா?
கனிஸ்டாவிடமும், பெற்றோரிடமும் பேசியதில் கணவன் குறித்த சில தகவல்கள் கிடைத்தன. அவர் இந்தியாவை சேர்ந்தவர், குவைத்தை சேர்ந்தவர் என கனிஸ்டா கூறுகிறார்.
அவர்களிற்கு குழந்தை பிரசவித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளில், தந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லையென்பது கவனிக்கப்பட வேண்டியது. அப்பாவியான கனிஸ்டாவை அந்த நபர் வசதியாக ஏமாற்றினாரா என்ற சந்தேகமும் உள்ளது.
குழந்தைகளுடன் இருக்கும் பணிப்பெண்கள் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டிற்கு வந்ததாக கனிஸ்டா குறிப்பிடுகிறார். அது உண்மையா, அல்லது அவரை நாடு திரும்ப வைக்க கணவனே சொன்ன தகவலா என்பது ஆராயப்பட வேண்டியது.
“நீ முதலில் போ. கொரோனா காலமென்பதால் இப்பொழுது என்னால் வர முடியாது. 8 மாதங்களின் பின்னர் வருகிறேன்“ என தெரிவித்துள்ளார்.

சமூக அழுத்தம்
தன்னால் எங்குமே வெளியில் செல்ல முடியவில்லையென கனிஸ்டா தெரிவித்தார். கடைக்கு சென்றால் கூட, வெளிநாட்டிற்கு சென்று குழந்தையுடன் திரும்பி வந்ததாக கிண்டலடிப்பதாக சொன்னார். அண்மையில் தனியார் ஒருவரிடம் வேலை கேட்டு சென்ற போது, அவரும் கிண்டலடித்ததாகவும், அங்கு வாய்த்தர்க்கம் உருவாகியதாகவும் தெரிவித்தார்.
பெரும் பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடிக்குள் அவர் சிக்கியிருந்தது தெரிகிறது. எனினும், இதனாலேயே அவர் நடந்து கொண்ட முறையை நியாயப்படுத்த முடியாது. அவர் நடந்து கொண்ட விதம் தவறானதே. அவர் தவறாக நடந்து கொண்டதற்கான பின்னணியையே குறிப்பிட்டுள்ளோம்.
யார் செய்த தவறு?
இந்த விடயத்தில் மேரி கனிஸ்டாவை மோசமாக தாக்கி பெருமளவானவர்கள் சமூக ஊடகங்களில் கருத்திட்டு வருகிறார்கள். சிறியளவானவர்கள் அவரை பாதுகாக்க வேண்டுமென கருத்திட்டு வருகிறார்கள்.
இதில் மேரி கனிஸ்டா தவறிழைத்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், மேரி கனிஸ்டாக்களையும், அவர்களது குழந்தைகளையும் இப்படியான சூழ்நிலைக்குள் சிக்காமல் பாதுகாக்க வேண்டும். அது அரசினதும், சமூகத்தினதும் பொறுப்பு .
தவறு செய்யும் சூழ்நிலைகளினாலோ, புறக்காரணங்களினாலோ ஏற்படும் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அரசாங்கம் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பொறிமுறை சீராக இயங்கினால், அனேக குற்றங்கள் நிகழாது.
சிறுவர் விவகாரங்களை கையாள மாவட்ட, பிரதேச செயலக மட்டத்தில் பல கட்டமைப்புக்க, சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தர், இளம் பிள்ளை பராய உத்தியோகத்தர், பெண்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர், சமூக சேவைகள் உத்தியோகத்தர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், இவர்களுக்கு உதவியாக பல பட்டதாரி பயிலுநர்களும் பிரதேச செயலகத்தில் கடமையில் இருக்கிறார்கள்.
மாவட்ட அளவில் சிறுவர் நன்னடத்தை பிரிவு, தேசிய சிறுவர் அதிகார சபை என்பன உள்ளன.
தனிக்குடும்பங்களில் அக்கறையெடுக்க வேண்டியது இந்த துறையினர் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றின் பொறுப்பு. குவைத்திலிருந்து மேரி கனிஸ்டா தனது குழந்தையுடன் அங்கு வந்து தங்கியிருந்தது பிரதேச செயலகத்திற்கு தெரிந்திருந்ததா, அவர்கள் ஏதாவது உதவி செய்தார்களா என்பது இன்னும் தெரியவில்லை. அப்படி நடக்கவில்லையெனில், அதுவும் தவறே.
இந்த துறைகள், முறையான கண்காணிப்பை செய்திருந்தால், ஒருவேளை இப்படியான சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.
அத்துடன், குழந்தை தாக்கப்பட்ட வீடியோ வெளியான அன்று இரவே- 10 மணியளவில் பல அதிகாரிகளிற்கு வீடியோ அனுப்பப்பட்டிருந்தது. பிரதேச, மாவட்ட மட்ட முக்கிய அதிகாரிகள் பெரும்பாலானவர்களிற்கு வீடியோ அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், மறுநாள் காலையில் அலுவலக நேரத்தில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேரி கனிஸ்டா நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போது, குவைத்தில் தூதரக பராமரிப்பில் மற்றும் வேறு இடங்களில் கைக்குழந்தைகளுடன் தங்கியிருந்த 60 பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அங்கு சென்ற பின்னர் குழந்தை பிரசவித்தவர்கள்.
இந்த பெண்களில் ஒருவரே மேரி கனிஸ்டா. அவரை போன்ற ஏனைய 59 பேர் குறித்து அரசும், பெண்கள் அமைப்புக்களும் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல, வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களை அறிவூட்ட வேண்டியது அவசியம்.