முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் முன்வைக்கப்பட்டுவரும் விடயங்களானது அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் கொண்ட கசப்புணர்வும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் சொந்த ஏனைய விடயங்களுமாகும் என்பதுடன் அந்த எம்.பிக்களுக்கு எதிராக போலியான தப்பபிப்பிராயங்களை பரப்புகிறார்கள் என கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் இன்று மாலை அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், உயர்பீட உறுப்பினர் ரவூப் ஹஸிர் போன்றவர்கள் 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு பேசிய அவர், நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு ஆதரவு இருப்பதனால் அரசாங்கத்தில் ஜனநாயகமாக எதுவும் நடைபெறாமல் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இப்போது முஸ்லிம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை சிலர் பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு இந்த அரசாங்கம் கொடுத்த பரிசு போல பேசுகிறார்கள். இந்த விடயம் அவரின் வருகைக்கு முன்னரே நடந்துமுடிந்து வர்த்தமானி அறிவிப்புக்கான இறுதித் தருவாயில் இருந்தது.
ஆளும் தரப்பு, எதிர்தரப்பு எம்.பிக்களின் அழுத்தம், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் வேண்டுகோள்கள், சர்வதேச அழுத்தங்கள், 20க்கு ஆதரவளித்த எம்.பிக்களின் உடன்பாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு 18 முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெறவேண்டிய தேவை, என்பன பலதும் சேர்ந்து அவ்விடயங்களில் ஒன்றாகவே பாகிஸ்தான் பிரதமரின் வருகையும் அமைந்திருந்தது. இப்படி பலவிடயங்களும் ஒன்றிணைந்தே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக சாதகமாக அமைந்தது.
20க்கு ஆதரளவிக்கும் விடயம் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை பாராளுமன்ற குழுவுக்கே கட்சி உயர்பீடம் வழங்கியது. அதனடிப்படையிலையே அவர்கள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். இருந்தாலும் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிராகவே வாக்களித்தார். நாங்கள் அரசாங்கங்களை எதிர்த்து எதையும் பெறவும் இல்லை, பெறவும் முடியாது. எங்களின் சமூகத்திற்கு உரிமைகள், தொழில்வாய்ப்பு, அபிவிருத்திகள் என பல தேவைகள் இருக்கிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கோஷம் எழுப்பினர். இந்த பிரச்சினை பல வருடங்களாக இருக்கிறது. இது தொடர்பில் தீர்க்கமான முடிவை பெற அமைச்சர் சமல் ராஜபக்ச ஒரு ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அந்த குழு சரியான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்.
ஜனாஸாவை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை. இலங்கையில் அதிக முஸ்லிங்களின் அபிமானத்தை பெற்ற நாங்கள் முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் எப்போதும் கரிசனை செலுத்துவோம். அப்போது இணங்கிச்சென்றும், அல்லது எதிர்த்தும் போராடி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முயற்சிப்போம். அதற்காக எங்களின் எம்.பிக்கள் பணம் பெற்றார்கள் என்பது நம்பமுடியாத கட்டுக்கதைகள். ஆதாரமில்லாமல் பேசுகிறார்கள். அரசிடம் நாங்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை எங்களின் கொரோனா தொற்று ஜனாஸாக்களை இரணைமடு தீவில் அடக்காமல் எங்களின் பிரதேசங்களில் நல்லடக்கம் செய்ய முன்வாருங்கள் என்பதே. அதன் மூலம் ஏதாவது பக்கவிளைவுகள் வந்தால் அதை நாங்களே பொறுப்பெடுப்போம் என்றார். இந்த ஊடகசந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.