புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைபில் சுகாதார சேவையை அத்தியவசிய சேவையாக உள்ளடக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (01) ஆலோசனை வழங்கினார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய முன்வைத்த கோரிக்கைக்கு பிரதமர் இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவை மற்றும் வைத்தியர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வு காணல் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்வைத்த யோசனைகள் இப்பேச்சுவார்த்தையின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
அரச வைத்திய பீடத்தில் இருந்து 28 தொடக்கம் 30 வரையிலான வயதினையுடையவர்கள் வைத்திய சேவையில் ஈடுபடுகிறார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய சுட்டிக்காட்டினார்.
இவ்விடயம் தொடர்பான யோசனையை கவனத்திற் கொண்ட பிரதமர் அரச வைத்திய பீடத்துக்கு தெரிவாகும் வைத்தியர்களின் வயதெல்லையை 22 தொடக்கம் 23 ஆக குறைக்க கல்வி அமைச்சுடன் இணைந்து ஒன்றினைந்த செயற்திட்டத்தை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்தும் புதிய யோசனைக்கு அனுமதியை பெற எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும். இதனால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக செலவிடும் 9 மாத காலத்தை குறைத்துக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கை வைத்திய சபை தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள நிலைமை குறித்து வினவிய பிரதமர், வைத்திய சபை சுயாதீனமான முறையில் செயற்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கினார்.
விசேட வைத்தியர்களுக்கு மேலதிகமாக அனைத்து வைத்தியர்கள் சேவையில் இருந்து ஓய்வுபெறும் வயதை 62 தொடக்கம் 63 வரை நீடிப்பது குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கமைய எதிர்காலத்தில் அதற்கான திருத்தங்களை முன்னெடுக்க பேச்சுவார்த்தை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களினதும், வைத்தியர்களினதும் சிற்றுண்டிசாலைகளை சுகாதாரப்படுத்தல், பாடசாலை மாணவர்கள் மத்தியில் துரிதமாக பரவும் தொற்றா நோய் வைரஸ்களை அழிப்பது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கல்வி அமைச்சுக்கு வழங்கிய யோசனை குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பவித்ரா வன்னியாராச்சி, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, தேசிய சம்பள நிர்ணய சபையின் செயலாளர் சந்ரானி சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் என்.பி.கே ரணவீர, தேசிய வரவு-செலவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூடி நிலுக்ஸான், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய, செயலாளர் வைத்தியர் எம்.எச். ஜே.எஸ்.பிரனாந்து, உப தலைவர் வைத்தியர் சந்திக ஹெபிடிகடுவ, அறுவைசிகிச்சை வைத்தியர் எச் பி. அளுத்கே, உள்ளிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு