27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு: கூட்டு சாகசத்தில் இந்தியாவும்!

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு இன்று (02) கொண்டாடுகிறது.

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் வான் சாகசங்கள் கொழும்பு காலி முகத்திடலில் நாளை (03) ஆரம்பமாகவுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ள இந்த நிகழ்வில் இம்முறை இலங்கை விமானப் படையுடன் இந்திய விமானப்படையும் இணைந்து கூட்டாக தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளனர்.

நாளை (03) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை தினமும் மாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள இந்த வான் சாகங்களில் இலங்கை மற்றும் இந்திய விமானக்குச் சொந்தமான 38 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் பங்குபற்றவுள்ளதாக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண தெரிவித்தார்.

இவற்றில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 விமானங்களும் இலங்கை விமானப் படையின் அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 14 விமானங்களும் இணைந்தே கொழும்பு காலி முகத்திடல் வான் பரப்பில் விமான சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சுக்களின் அனுமதியுடன் சுகாதார துறையினரின் வழிகாட்டல்களுடன் சகல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த விமானப் படைத் தளபதி, சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நிலையில் கொழும்பு காலி முகத்திடல் வான் பரப்பில் இடம்பெறவுள்ள வான் சாகசங்களை கண்டுகளிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்வதாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவின் பிரசித்தி பெற்ற சாகச விமானமானங்களான சூரியகிரண் என்ற விமானமும் சாரங் என்ற ஹெலிகொப்டரும்; தேஜஸ் என்ற தாக்குதல் விமானமுமே சாகசங்களை காண்பிக்கவுள்ளன. கொழும்பு காலி முகத்திடலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இது தொடர்பான ஒத்திகையை பார்வையிட வருகை தந்த விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன இலங்கை வந்துள்ள இந்திய விமானப் படை அதிகாரிகளை வரவேற்று கலந்துரையாடியதுடன் சாகசங்களின் ஒத்திகையையும் பார்வையிட்டார்.

இதேவேளை, இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்றைய தினம் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் பிரதான மரியாதை அணிவகுப்பும் மார்ச் 05ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விமானப் படையின் ஜெட் மற்றும் எம் ஐ –17ரக ஹெலிகொப்டர் பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்குகொள்ளவென இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 23 விமானங்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை வருமாறு-

இலங்கை விமானப்படையினர் இன்று- 2021 மார்ச் 2 ஆம் திகதி 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு 2021 மார்ச் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலில் முதற்தடவையாக பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஒன்றும் அதேபோல வேகமாக பறத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் கூட்டொருமைப்பாட்டின் சமிக்ஞையாகவும் இராணுவ ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் தோழமையை குறிப்பிடும் முகமாக சரங் (அதிநவீன இலகுரக ஹெலிகொப்டர்), சூர்ய கிரண் (Hawks), தேஜாஸ் தாக்குதல் விமானம், தேஜாஸ் பயிற்சி மற்றும் டோனியர் சமுத்திர ரோந்து விமானம் ஆகியவற்றுடன் இந்திய விமானப் படையினரும் இந்திய கடற்படையினரும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினரின் 23 விமானங்கள் இந்த பாரிய நிகழ்வில் பங்கேற்க உள்ளன.

இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் 2021 பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளன. இந்திய விமானப்படையின் சி17 குளோப் மாஸ்டர் மற்றும் சி-130ஜே போக்குவரத்து விமானங்களும் இதற்கு ஆதரவாக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல வகையிலான தயாரிப்புக்களும் பாரிய எண்ணிக்கையிலான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பது இந்திய மற்றும் இலங்கை படையினரிடையிலான நட்பு மற்றும் பகிரப்பட்ட இயங்குதிறன் அதேபோல வலுவான பிணைப்புக்களையும் எடுத்தியம்புகின்றது.

இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் சகல இந்திய விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதேநேரம் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சுதேச தொழில்நுட்ப வலிமை மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது. தேஜாஸ் பயிற்சி விமானம் முதற்தடவையாக இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதுடன் இலங்கை விமானப்படையின் விமானிகள் இந்திய விமானிகளுடன் இணைந்து சுதந்திரமான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அமைகின்றது. அதே நேரம் இந்த நிகழ்வுகளின்போது சகல சுகாதார நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையின் சமுத்திர ரோந்து விமானமான டோனியரில் முதற்தடவையாக அனுபவங்களைப்பெற உள்ளனர். இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் இந்திய விமானிகளுடன் இணைந்து விமானங்களில் பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையினருக்காக அரையாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் டோர்னியர் பயிற்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இது அமைகின்றது.

பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவைப் பொறுத்தவரையில் “முதல் முன்னுரிமை” நாடாக இலங்கை அமைகின்றது. 2020 நவம்பர் மாதம் இலங்கையால் நடத்தப்பட்டதும் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கலந்துகொண்டதுமான முத்தரப்பு கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் அவர்களால் இலங்கையின் தலைமைத்துவத்திற்கு பாதுகாப்புதுறை சார்ந்த விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பானது வலியுறுத்தி கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இந்திய விமானப் படையினரும் இந்திய கடற்படையினர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை இரு நாடுகளினதும் ஆயுதப்படைகள் இடையிலான நட்புறவு, தோழமை மற்றும் வளர்ந்துவரும் ஒத்துழைப்பு ஆகியவற்றினை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது..

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரிசி இறக்குமதியில் நெருக்கடி

east pagetamil

கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

2024 வாக்காளர் பதிவின் அடிப்படையிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

Pagetamil

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Leave a Comment