இறைவன் படைத்த உயிரினங்களில் சிறப்பாக விளங்குபவன் மனிதன். மனிதனின் சிறப்பான அம்சமாக விளங்குவது அவனது கட்டை விரல். கையில் உள்ள மற்ற நான்கு விரல்களின் செயல்களுக்கும் கட்டை விரலே ஆதாரமாக விளங்குகிறது. நான்கு விரல்களிலிருந்து தனித்து விலகி அமைந்துள்ள இந்தக் கட்டை விரலின் சிறப்புகளைக் காணலாம்.
ஏகலைவனின் கட்டை விரலைத் தானமாகப் பெற்று மகாபாரதப் போரின் போக்கையே மாற்றியவர் துரோணர். கட்டை விரலும் சுட்டு விரலும் இணைந்து உருவாகும் சின் முத்திரை ஞானத்தின் வடிவம். இந்த முத்திரையைச் சிவம் சீவனுடன் இணையும் குறியீட்டு அடையாளம் என சைவம் போற்றும்.
டாக்கா நகரத்து நெசவாளர்களின் நெசவுத் திறனில் பொறாமை கொண்ட ஆங்கிலேயர்கள், அவர்களின் கட்டை விரல்களை அறுத்தனர் என்கிறது வரலாறு. கட்டை விரலே நாடி ஜோதிடத்தின் அடிப்படையாக உள்ளது. பத்திரப் பதிவு முதல் தற்கால ஆதார் அட்டை வரையிலும் கட்டை விரலின் தனித்துவம் அதிகம். வெற்றியின் அடையாளமும், தோல்வியின் அடையாளமும் முறையே கட்டை விரலை உயர்த்தியும் கவிழ்த்து காட்டியுமே சுட்டப்படுகின்றன.
ரேகை சாஸ்திரத்திலும் கட்டை விரலுக்குச் சிறப்பிடம் உண்டு. தனி மனிதனின் குணநலன்களைக் கட்டை விரல் அமைப்பின் வழியே அறிந்து கொள்ளலாம் என்கிறது ரேகை சாஸ்திரம்.
கட்டை விரல் கோடுகள்:
கட்டை விரலின் குறுக்கே மூன்று கோடுகள் அமைந்திருப்பதைக் காணலாம். நகத்தைச் சேர்ந்த முதல் பகுதி முதல் அங்குலாஸ்தி எனப்படும். நடுவில் உள்ளது இரண்டாவது அங்குலாஸ்தி. கீழுள்ள பகுதி மூன்றாவது அங்குலாஸ்தி எனப்படும். முதலாவது திடமான முடிவு எடுக்கும் திறனையும், இரண்டாவது எதையும் தீவிரமாக – தெளிவாக அலசி ஆராயும் தன்மையையும், மூன்றாவது ஆசை – அபிலாஷைகள் – காம இச்சைகளையும் குறிப்பன எனலாம்.
முதலாவது அங்குலாஸ்தி ஒருவரது கட்டை விரலில் அதிகமாக இருந்தால் அவர் எதிலும் திடமான முடிவு எடுக்கும் ஆற்றல் கொண்டவர். அதே நேரம், அவருக்குப் பிடிவாத குணமும் அதிகம் இருக்கும்.
இரண்டாவது அங்குலாஸ்தி அதிகம் இருந்தால், எதையும் ஆழ்ந்து அலசி முடிவு எடுப்பார். அதேநேரம் முடிவுகள் எடுக்க அதிக தாமதமும் செய்வார் எனலாம்.
மூன்றாவது அங்குலாஸ்தி அதிகமாக இருப்பவர் அதிக ஆசைகளும், காம இச்சைகளும் கொண்டவர் எனலாம். மூன்று அங்குலாஸ்திகளும் சம அளவாக இருப்பதே நல்லது என்கிறது சாஸ்திரம்.
கட்டை விரல் வளையும் திறனும் பலனும்
கட்டைவிரலின் மேற்பகுதி வளையும் தன்மைக்கு ஏற்ப சில குணநலன்களை வரையறுத்துக் கூறுகிறது ரேகை சாஸ்திரம்.
கட்டை விரல் நன்கு வளையும் நபர் எதைப் பற்றியும் அதிகம் அலட்டிக்கொள்ளமாட்டார். பணம், நேரம் எதிலும் அதிக கவனம் செலுத்த மாட்டார். அதிக செலவாளியும் கூட. வருவதை ஏற்றுக் கொள்ளும் மனமும் புதிய சூழல்களை வரவேற்கும் மனப்பாங்கும் கொண்டவர். இதனால் புதிய ஊர்கள், நாடுகள் சென்று வாழும் தகுதி கொண்டவர் எனலாம்.
வளையாத உறுதியான கட்டை விரல் அமைப்பைக் கொண்டவர்கள், எங்கும் எதிலும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வர்.
தங்களின் கொள்கையிலிருந்து சற்றும் பின்வாங்க மாட்டார்கள். எச்சரிக்கையுடன் செயல்பட்டு தனித்தன்மையோடு இருப்பார்கள். தன் இடத்தை விட்டுப் புதிய சூழலில் வாழ இவர்கள் விரும்புவதில்லை.
ரேகை சாஸ்திரம் சொல்லும் கட்டைவிரல் மகிமைகள்!
சுட்டு விரலும் கட்டை விரலும்
சுட்டு விரலிலிருந்து கட்டை விரல் அதிகம் தள்ளியோ, நெருங்கியோ இருக்கலாம். இந்த அமைப்பைப் பொறுத்தும் பலன்கள் உண்டு.
சுட்டு விரல் கட்டை விரல் இரண்டும் விலகும் தூரம் குறைவு எனில், அந்த அன்பர்கள் எதிலும் தயக்கம் கொண்டவர்களாகவும் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும் இருப்பர். அடிக்கடி உணர்ச்சி வசப்படும் இவர்கள், அடுத்து என்ன நினைப்பார்கள், செய்வார்கள் என்பதைக் கணிக்க இயலாது.
சுட்டுவிரலிலிருந்து கட்டை விரல் மிகவும் விலகி (90 டிகிரி அளவில்) அமைந்திருந்தால் அவர்கள் தங்கள் இஷ்டப்படி வாழும் இயல்பு கொண்டவர்கள். முரட்டுத் தனமும் அடுத்தவரை அலட்சியம் செய்யும் குணமும் கொண்டவர்கள். தன்னிச்சையாக முடிவெடுக்கும் இயல்பு கொண்டவர்கள்.
கட்டை விரல் இயல்புக்கு மாறாக அதிகம் விலகாமலும், சுட்டுவிரலுடன் நெருங்கி இல்லாமலும் இருந்தால், அந்த அன்பர்கள் சிந்தித்துச் செயல்படுவார்கள். மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.
நிறைவாக, இங்கிலாந்து நாட்டு மருத்துவ நம்பிக்கை சார்ந்த ஒரு தகவலை அறிவோம்.
குழந்தை பிறந்து சில நாள்கள் கடந்ததும், குழந்தையின் உள்ளங்கையில் கட்டை விரல் உள்ளடங்கி மற்ற விரல்கள் அதன்மீது மடங்கி இருந்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியக் குறைபாடு கொண்டது.
தொடர்ந்து ஒரு வாரம் அதே நிலை நீடித்தால் குழந்தை மனத்தளவிலும் பாதிக்கப்படும். இப்படியொரு நம்பிக்கை அந்த நாட்டில் உண்டு. விரிந்த நிலையிலிருக்கும் கட்டை விரல் கொண்ட குழந்தைகளே ஆரோக்கி யமானவை என்று நம்பிக்கை அங்கு உண்டு.