கிளிநொச்சியில் 7 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான். அவரை தாக்கி சந்தேகத்திற்குரிய 17 வயதான ஒன்றுவிட்ட அண்ணன் தலைமறைவாகியுள்ளான்.
இந்த கொடூர சம்பவம் கிளிநொச்சி, கச்சேரி வீதியில் நடந்தது.
அப்துல் ரகுமான் தயா (7) என்ற சிறுவன் அடிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் தாய் மட்டக்களப்பிற்கு சென்றதையடுத்து, தந்தை தனது 9 வயது 7 வயது மற்றும் 4 வயது மகன்களை அழைத்துக்கொண்டு சென்று, அண்ணன் வீட்டில் தங்கியுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி அதிகாலை முதல் தந்தை காணாமல் போயிருந்தார். அத்துடன், அண்ணன் வீட்டிலிருந்த மாடும் காணாமல் போயிருந்தது. சிறுவர்களின் தந்தையே அந்த மாட்டை திருடிக் கொண்டு சென்று இருக்கலாம் என அண்ணன் வீட்டில் சந்தேகப்பட்டுள்ளனர். தலைமறைவானவர் மீது ஏற்கனவே திருட்டு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அவர் காணாமல் போனதை அடுத்து 9 வயது, 4 வயது சிறார்களை, அண்ணனின் மகனான 17 வயது சிறுவன் கடுமையாக தாக்கியுள்ளான்.
பின்னர், 7 வயது சிறுவனை மாங்காய் பிடுங்க என அழைத்து சென்றுள்ளார். எனினும், 17 வயது சிறுவன் மாத்திரமே வீடு திரும்பியுள்ளான்.
சிறுவனை காணாததால், அண்ணனின் மனைவி மற்றும் 2 சிறுவர்கள் இணைந்து தேடியுள்ளனர். இதன்போது, அண்ணனிற்கு சொந்தமான இன்னொரு வீட்டில் சிறுவன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டான்.
உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டார். தாக்குதலிற்குள்ளான 4 வயது சிறுவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
4 வயது சிறுவன் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினான். எனினும், 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (27) உயிரிழந்தான்.
தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவே மரணத்திற்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியிருக்கலாமென சந்தேகிக்கப்படும் 17 வயது சிறுவன் தலைமறைவாகியுள்ளான்.