இத்தாலியில் பாம்பேய் நகரில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். கி.பி 79இல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. இதனால் பாம்பேய் நகரத்தை அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடிவிட்டது. இதனால் நகரம் பேரழிவிற்குள்ளானது.
இந்த சாம்பல் படிவம், அங்கு வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் மற்றும் கட்டிடங்களை பாதுகாத்து வருகிறது.
இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது.
இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தத் தேரை திருவிழாக் காலங்கள் மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்த தேர் சிதையாமல், மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அந்தத் தேரில் இரும்புக் கூறுகள், அழகான பித்தளை மற்றும் டின் உலோக வேலைப்பாடுகள், கயிறுகள், மலர் அலங்காரங்கள் என பலதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி 7ஆம் திகதி இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அதை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர பல வார காலம் ஆனது என அகழ்வாய்வாளர்கள் கூறினர்.
இந்த பகுதியில், 2000 வருடங்களிற்கு முந்தைய தெருவோர துரித உணவகம் ஒன்றும் அண்மையில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.