மட்டக்களப்பு- வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கட்டுமுறிவுக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்த நபர் கட்டுமுறிவுக்குளத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய பாக்கியராசா நாகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வயல் நிலத்தை பார்வையிட இரவு 7.30 மணியளவில் கட்டுமுறிவுக்குளம் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றிருந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் வயல் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ந்துகாட்டு யானைகளின் தாக்கம் காணப்பட்டு வருகின்ற போதிலும் மக்கள் வாழும் இடங்களில் மாத்திரம் யானை பாதுகாப்பு வேலி போடப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதி மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதியில் எதுவித பாதுகாப்பும் இல்லாமல் விவசாயிகள் இரவு நேர காவலில் ஈடுபட்டுள்ளதனால் இவ்வாறான உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு அவசர தேவைக்காக நோயாளிகளை இரவு நேரங்களில் கொண்டு செல்ல முடியாதவாறு பாதுகாப்பு அற்ற வீதிகளும் காட்டு யானைகளின் நடமாட்டமும் உள்ளதோடு அப்பகுதி மாணவர்கள் கல்வி செயற்பாட்டுக்காக பாடசாலைக்கு குறித்த வீதிகளினூடாக உரிய நேரத்தில் சமூகமளிக்க முடியாத நிலையம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குறித்த பகுதியிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காட்டு யானைகளின் தாக்குதலில் இருந்து விவசாயிகளையும் கிராம மக்களையும் பாதுகாக்க பாதுகாப்பான மின்சார வேலிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.