முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில்சார் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வற்கு சுமார் 100 மில்லியன் ரூபாய்களை பயன்படுத்த முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு்ள்ள கடற்றொழில் அமைச்சர், மாவட்டத்தின் பல்வேறு சமூக அமைப்புக்களையும் சந்தித்து மாவட்டத்தின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இந்நிலையில், கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் இன்று (27) நடத்திய கலந்துரையாடலிலேயே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“கடற்றொழிலாளர்களுக்கு கௌரவமான வாழ்கைத் தரத்தினை ஏற்படுத்துவதற்கு நிறைவான வருமான மார்க்கங்களை அதிகரிக்க வேண்டும்.
குறிப்பாக கடற்றொழில் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மீன்பிடிச் செயற்பாடுகளை சட்ட விதி முறைகளுக்கு அமைய ஒழுங்குபடுத்துவதுடன், அதிகளவான வருமானத்தை தரக்கூடிய தொழில் முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கடற்றொழில் சமூகத்தினருக்கு சிறந்த வாழ்கை தரத்தினை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கு கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான தரமான பொருளாதார கட்டமைப்பை ஒருவாக்கும் நோக்கில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு புலம்பெயர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் தொழில்சார் அபிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடியவாறு சுமார் 100 மில்லியன் ரூபாய்களை கொடையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடந்த காலத்தைப் போன்று இல்லாமல் சரியான தரப்புக்களை இனங்கண்டு செயற்படுவார்களாயின், குறித்த தனியார் பங்களிப்புக்களையும் அதேபோன்று அரசாங்க திட்டங்களையும் ஒருமுகப்படுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கடற்றொழில் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.
அதேவேளை, கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசப் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் காணப்படுப் கரைவலைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அளவிற்கு அதிகமான வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு்ள்ளமை, வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களின் சட்ட விரோத நடவடிக்கைகள், கொக்குளாய் களப்பு பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்துதல், நந்திக்கடல் அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
கரைவலைத் தொழிலை மேற்கொள்வதற்கான இடங்களை அடையாளப்படுத்தும் வேலைகளை விரைவில் பூரணப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய கடற்றொழில் அமைச்சர், குறித்த தொழில் தொடர்பான விதிமுறைகளுக்கு அமைய தரவுகளை ஆராய்ந்து உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பதுடன் மேலதிகமானவற்றை விரும்புகின்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேபோன்று, ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் சம்மந்தப்பட்டவர்களுடன் ஆராய்ந்து இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.