வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த பலருக்கு அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலையில் சவுதி பட்டத்து இளவரசரின் பங்கு இருப்பதாக தெரிவிக்கும் சி.ஐ.ஏ அறிக்கை வெளியானதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி விதிக்க்பட்டுள்ள அமெரிக்க தடையில், சவுதி அரேபியாவை சேர்ந்த 76 நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளின்கென் வெளியிட்ட அறிக்கையில், “எதிர்க்கருத்துக்கள் உடையவர்கள், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல் போன்றவை கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இது போன்ற செயல்கள் அமெரிக்காவால் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என ஜோ பைடன் உறுதிபட தெரிவித்துள்ளார்“ எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான சி.ஐ.ஏ அறிக்கையில், சவுதி பட்டத்து இளவரசரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அணியால் கொலை நடந்தது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.