நாட்டில் இறக்குமதியை இடைநிறுத்தாது விட்டிருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 300 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமாக கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்.
இந்த கலந்துரையாடல் இன்று (27) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரூபாயின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்திருந்தால் நாட்டில் பெரும்பாலான இறக்குமதியாளர்கள் இறக்குமதியைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
வடக்கு மாகாணத்திலிருந்து தங்கம் கடத்தலைத் தடுக்க தங்கம் மீதான வரியை இந்தியா போன்று பராமரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காக்களை அமைக்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் 15 தொடக்கம் 20 ஏக்கர் காணியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், அமைச்சின செயலாளர், மத்திய வங்கி அதிகாரிகள், பிரதேச அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், முதலீட்டாளர்கள், பனை அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்வாகத்தினர் மற்றும் அரசியல்வாதிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.