26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

புலிகள் செய்ததும், நாங்கள் செய்ததும் ஒன்றா?: ஐ.நா அறிக்கையை நிராகரித்தது இலங்கை!

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதாகும். நாட்டின் ஒருமைப்பாடு, மக்களின் வாழ்க்கை உரிமையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன என தெரிவித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கைக அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் அம்மையார் தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து இடம்பெற்ற ஊடாடும் உரையாடலில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இதனை தெரிவித்தார்.

அவரது உரை வருமாறு-

இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது, கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது.

எந்தவொரு சுயமரியாதை, இறையாண்மை கொண்ட நாட்டிற்கும், முக்கியமாக ஆட்சி தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி மேலும் ஆணையிட்டுள்ள உயர் ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது. இது ஐ.நா. சாசனத்தின் 2 (7) வது பிரிவான ‘தற்போதைய சாசனத்தில் உள்ள எதுவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவொரு அரசினதும் உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்காது…’ ஐ முழுமையாக மீறும் செயலாகும்.

பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் தொடர்பாக வெளிவந்த பாதையானது, இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல் மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது. இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவை.

உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.

முப்பது ஆண்டுகளாக வெளியிடப்படாத மற்றும் அவற்றுள் சில உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் தக்கவைக்கப்பட்டு, அணுகுவதற்கு மறுக்கப்பட்டிருந்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக ஐ.நா மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு வரும் இலங்கை போன்ற ஒரு நாடு தொடர்பாக, சொத்து முடக்கம், பயணத் தடைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய குறிப்புக்கள் மற்றும் தனிப்பட்ட அரசுகள் உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான அழைப்பானது, சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றது. சில நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையும், மற்றும் இயற்கை நீதியின் கொள்கைகளை மீறுவதுமாகும்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்திற்கும் மேலதிகமாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவல்கள், தவறான கருத்துக்கள் மற்றும் தன்னிச்சையான மதிப்பீடுகள் குறித்து இலங்கை எழுத்துபூர்வ கருத்துக்களை வழங்கியுள்ளது. உயர் ஸ்தானிகர் அலுவலகம் தனது அறிக்கையை முன்னெப்போதும் இல்லாத பிரச்சாரத்துடன் இணைந்து வெளியிட்டமை மற்றும் குறித்த அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களை ஒரு துணை நிரலாக வெளியிட மறுத்தமை ஆகியன வருத்தமளிக்கின்றது. இது இலங்கையையும், அறிக்கை குறித்த இலங்கையின் கருத்துக்களை சமமாகக் காணும் உறுப்பினர்களையும் இழந்துள்ளது.

இந்த சபைக்கு முன்னர் விளக்கப்பட்ட காரணங்களுக்காக இலங்கையால் நிராகரிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான நிபுணர் குழுவின் மிகவும் சர்ச்சைக்குரிய அறிக்கை மற்றும் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலக விசாரணை அறிக்கை ஆகியவற்றிலிருந்தான உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை மறுக்கின்றது. கூறப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கைகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்கள், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் எமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன.

இந்த சபை மற்றும் அனைத்து ஐ.நா. அமைப்புக்களுடனான எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடுகள் இருந்தபோதிலும், வெளிப்புறமாக இயக்கப்படும் சக்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதானது பல சவால்களை ஏற்படுத்துவதாக அமைவதுடன், இதுபோன்ற செயன்முறைகள் ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும்.

அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இந்த சபை உட்பட ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்துடன் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில், அரசியலமைப்பிற்கு இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்த சில குழுக்கள் முயற்சி!

Pagetamil

Leave a Comment