தமிழ் தேசிய கட்சிகள், மத தலைவர்கள், சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கி வரும் நபர்களிற்கிடையிலான சந்திப்பு இன்று (26) வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
வடக்கு கிழக்கிலுள்ள கிறிஸ்தவ ஆயர்கள், சைவ சமய தலைவர்கள், தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் பிரதான ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிகிறது.
வவுனியா, இறம்மைக்குளத்திலுள்ள மண்டபமொன்றில் நடக்கும் இந்த கலந்துரையாடல் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கிறது.
இன்றைய கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில்-
1.பௌத்த சிங்கள பேராண்மை அரசு அதன் இராணுவ மய நிர்வாக ஆட்சியின் கீழ் ,தமிழ்த் தேச மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகள்:
2.அரசின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒன்று பட்ட தீர்வு:
3.ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான புதிய தீர்மானம் :
4.தமிழ்த் தேசத்தின் தமிழ் மக்களின் விடுதலைக்கான கட்டமைப்பை உருவாக்குதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட மறை மாவட்டங்களின் புதிய ஆயர்கள் அண்மைக்காலத்தில் தமிழ் தேசிய அரசியல் பரப்பிற்குள் நுழையாமல் செயற்பட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.