உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசீம் குழுவினர், முதலில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற எசல பெரஹராவையே தாக்க திட்டமிட்டிருந்தனர். எனினும், அது முடியாமல் போன பின்னரே, தேவாலயங்கள் மற்றும் ஹொட்டல்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் குழுவினர் முதலில் கண்டி எசல பெரஹராவையே தாக்க திட்டமிட்டிருந்தனர். எனினும், அப்பொழுது- 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று- வனாத்தவில்லு பிரதேசத்தில் பெருந்தொகையில் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான வெடிபொருட்கள் அவை.
வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டமை, அதேநேரத்தில் சிரியா, ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் சக்தி சிதறடிக்கப்பட்டு வந்ததால், உலகெங்கிலுமிருந்து ஆதரவாளர்களை வரவழைத்திருந்தனர். இந்த காரணங்களினால் சஹ்ரான் குழுவினரால் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்த முடியவில்லை.
ஏப்ரல் 4, 2019 அன்று, சஹாரன் மற்றும் பிற உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் சாத்தியமான தாக்குதல் தகவல்கள் உட்பட ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த தகவல்களை இந்திய அதிகாரிகள் புலனாய்வு சேவைக்கு வழங்கினர், ஆனால் பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வு சேவைகள் பணிப்பாளர், அரச புலனாய்வு சேவை பணிப்பாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் முறையாக நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல் 20, 2019 அன்று தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை, தாக்குதல் குறித்து கூடுதல் துல்லியமான தகவல்களை உளவுத்துறை பணிப்பாளர் பெற்றிருந்த போதிலும், அனர்த்தத்தை தடுக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் தவறிவிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரானும் மற்ற ஏழு தற்கொலை குண்டுதாரிகளும் 2019 ஏப்ரல் 20 அன்று ஸ்பொட் டவர் தங்குமிடத்தில், தாக்குதலிற்கு முதல் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
மட்டக்களப்புக்கு 4 கி.மீ தெற்கே உள்ள காத்தான்குடி நகரம் நாட்டில் உள்ள ஒரே தனி முஸ்லீம் நகரம். காத்தான்குடியில் முஸ்லிமல்லாதவர்கள் வாழ, சொத்து வாங்க அல்லது ஒரு தொழிலை நடத்த முடியாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 65 மசூதிகள் இருப்பதாகவும், இப்பகுதியில் சுமார் 50,000 முஸ்லிம்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மற்ற நகரங்களிலிருந்து வேறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ளது. பெண்கள் வீதிகளில் காணப்படுவதில்லை.
மாவனெல்லையில் புத்தர் சிலைகளை தேதப்படுத்தியமைக்காக கைதான முக்கிய சந்தேக நபர்களான ஷாஹீத் மற்றும் சாதிக் ஆகியோர், க.பொ.த. சா.த பரீட்சைக்கு தோற்றவிருந்த 30 மாணவர்களுக்கு வதிவிட பயிற்சி முகாம் ஒன்றை 130/9, டெல்கஹகொட, ஹிங்குலவில் உள்ள இஸ்லாமிய மசூதியில் நடத்தினர். இதன்போது, குழந்தை கொல்லப்பட்ட காட்சி உள்ளிட்ட ஐ.எஸ் அமைப்பின் காட்சிகள் காண்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.