சவுதிப் பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக சவுதி மன்னருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக, அமெரிக்க புலனாய்வுத் துறை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மன்னரின் மகன்களின் ஒருவரது பெயரும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் சவுதி மன்னருடனான முதல் தொலைப்பேசியில் உரையாடலில் இரு நாட்டு உறவு குறித்த ஆலோசனையுடன், ஜமாலின் கொலை வழக்கு குறித்து பேச இருக்கிறார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜமால் கஷோகி பின்னணி
ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். ஆரம்பத்தில் சவுதி அரச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர், பின்னர் அமெரிக்காவின் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஓடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது.
ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த சவுதி, பின்னர் ஏற்றுக்கொண்டது. எனினும், அரச குடுபத்திற்கு கொலையுடன் தொடர்பில்லையென மறுத்து, சில புலனாய்வாளர்களிற்கு தண்டனை விதித்ததாக அறிவித்தது.