யாழ்.மாவட்டத்தில் தற்போது 487 குடும்பங்களை சேர்ந்த 955 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் கொவிட் தொற்று நிலமை தற்போது 232 ஆக அதிகரித்திருக்கின்றது. நேற்று 13 நபர்களுக்கு பருத்தித்துறை பகுதியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பிரகாரம் இந்த எண்ணிக்கை உயர்வடைந்து இருக்கின்றது.
அத்தோடு 190 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் 487 குடும்பங்களை சேர்ந்த 955 நபர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
யாழ்.மாவட்டத்தில் ஒரு சில நாட்களாக தொற்று சற்று அதிகரித்து வருவது காவலைக்குரியது. ஆகவே தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.