நவகிரகங்களில் சாயா புத்திரனான சனி பகவான் தர்மத்தை நிலைநாட்டும் மூர்த்தியாகத் திகழ்கிறார். முன்வினைகளுக்கு ஏற்ற பலாபலன்கள் அவரால் செயல்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலும் ஒருவரின் ஆயுளில் மூன்று முறை ஏழரைச் சனி காலத்தைச் சந்திப்பார்கள்.
இதுகுறித்து நடைமுறை வழக்கத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது இளமை யில் சந்திப்பது மங்கு சனி; மத்திம வயதில் சந்திப்பது பொங்கு சனி; கடைசிக் காலத்தில் சந்திப்பது மரணச் சனி என்பார்கள்.
இதையொட்டி மங்கு சனி மற்றும் மரணச் சனி குறித்து அதீத பயம் கொள்ளும் அன்பர்களும் உண்டு. ஆனால் சனி பகவான் குறித்து வீண் பயமோ கலக்கமோ தேவையில்லை. ஜோதிட நூல்கள் இதுகுறித்து விளக்கம் தருகின்றன.
சனி பகவான் அருளும் மூன்று பருவங்கள்…
சனி பகவான் விண்வெளியில் பயணிக்கும் பாதை எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர் இவர். ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது ஒருவரது வாழ்நாளில் சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார்.
முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை,60 வருடத்துக்குள் இரண்டாவது முறை ,90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதைப் போக்கு சனி என்பார்கள்!
இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கௌமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர்.
அடுத்து யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட் பட்டு அலசி ஆராயும் திறனுடன்இ நல்லது- கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் இது.
மங்கு சனியும் பொங்கு சனியும்!
துன்பங்களைத் தாங்கி அதனை அலட்சியப் படுத்தி மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது!
மூன்றாவது முதுமை. தேக ஆரோக்கியமும் மனோ பலமும் குறைகிற இறுதிப்பகுதி. கௌமாரம் யௌவனம் வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம்.
சிறு வயதில் மங்கு சனி இளமையில் பொங்கு சனி!
சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில் சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனத்தில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர்.
இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர்.
இன்ப-துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும் பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர்.
முதுமையில் சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால் வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக் காட்டி போக்கு சனி என்றனர்.
ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கிற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.
இரண்டு வீடுகளுக்கு அதிபதி!
சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடனும் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற தமோ குணம் அவரிடம் உண்டு.
சூரியனில் (ஆன்மா) இருந்து உருப் பெற்றது சந்திரன் (மனம்). ஆன்மா ஒன்று மனமும் ஒன்று. ஆகவேஇ 12 ராசிகளில் இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால், மற்ற ஐந்து கிரகங் களுக்கு இரண்டு வீடுகள் இருக்கும்.
ஆன்மா மற்றும் மனத்துடன் புலன்களுக்குத் தொடர்பு உண்டு. ஆதலால் ராசிச் சக்கரத்தில், சிம்மத்தில் உள்ள சூரியனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும்.
அதேபோல்,கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும்.
சூரியனுக்கு சிம்மராசி. அதற்கு அடுத்த ராசியில், புதன். அதையடுத்து, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள்.
சந்திரனுக்குப் பின் ராசியில், மிதுனத்தில் புதன்; அடுத்து சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். இருவருக்கும் கடைசியில் சனி தென்படுவதால், மகரத்துக்கும் கும்பத்துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார்.
மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை. அடுத்து பொருளாதாரம், செயல்பாடு, தெளிவு பெற்று மகிழ்தல், கடைசியில் மறைதல் என அவனது வாழ்க்கை நிறைவுறுகிறது.
இந்த வரிசையில் புதன், சுக்கிரன், செவ்வாய்,குரு, சனி எனத் தென்படுகிறது. இறுதியில் உள்ள சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப் படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர்.
நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப-துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான்.
நம் உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார்.
சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றினால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை.
வழிபட விரும்புவோர், சனிக் கிழமைகளில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று எள் முடிச்சு தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுங்கள்.
வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச்செயல்பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனிபகவானை மனதாரப் பிரார்த்தித்து வாருங்கள்.