வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும்.
சிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள்
நபிகள் நாயகம் அவர்கள் நல்ல நட்புக்கு உதாரணம் கூறும்போது கஸ்தூரி (வாசனைப் பொருள்) விற்பவருக்கு ஒப்பாகக் கூறியுள்ளார்கள். ‘அவன் உனக்கு வாசனைப் பொருளைத் தராவிட்டாலும் அவரிடமிருந்து நல்ல வாசனையையாவது பெற்றுக்கொண்டே இருப்பாய்’.
தீய நட்புக்கு உதாரணம் கூறும்போது, உலை ஊதும் கொல்லனுக்கு உதாரணமாகக் கூறுகிறார்கள். ‘அவன் உலை ஊதும்போது நெருப்புப்பொறி உன் மீது படாவிட்டாலும் அங்கு ஏற்படும் புகையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது’.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது நல்லவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள் அழகு, குலப்பெருமை, செல்வம், மார்க்கப்பற்று.
மார்க்கப்பற்றுள்ள பெண்ணுக்கு முன்னுரிமை அளிப்பாயாக. மற்றவை அழிந்துவிடும் அல்லது அவளது செருக்குக்கு காரணமாக அமைந்து விடும். ஆனால் மார்க்கப்பற்று, மிகச் சிறந்த வாழ்க்கை துணையாக அமைவதற்கு உதவும்.
அதேபோல மார்க்கப்பற்றுள்ள நல்லொழுக்கமுள்ள மணமகன் பெண் கேட்டு வந்தால் அவருக்கு முன்னுரிமை அளிக்கும்படி கூறியுள்ளார்கள். எளிமையான திருமணமே மிகச்சிறந்த திருமணம். ஆடம்பரம், வீண்விரயம் தவிர்க்கப்பட வேண்டும்.
கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து தியாக மனப்பான்மையுடன் வாழ்வது நிலையான மண வாழ்விற்கு வழிவகுக்கும்.
இன்றைய சூழ்நிலையில் அத்தகைய புரிந்துணர்வும் ஒற்றுமையும் இல்லாமையால் குடும்பங்களில் குழப்பம், வன்முறை எனத்தொடங்கி பெருகிவரும் தற்கொலைகளும், விவாகரத்துகளும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி, ஆற்றுப்படுத்தி அத்தகைய கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் தலையீடு, பிணக்கை தீர்ப்பதாக அமைய வேண்டுமேயல்லாது, மேலும் பிரச்சினை அதிகமாகக் காரணமாக அமைந்து விடக்கூடாது.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்த பிறகு ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்ளக் கூடாது. இருவரின் வாழ்வும் திறந்த புத்தகமாக, ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் கூடிய அன்போடு நடந்து கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் வாழ்க்கை வீணாகிவிடும். சந்தேகம் என்பது கொடிய நோயாகும்.
நபிகள் நாயகம் அவர்கள் ஒருமுறை முன்னிரவு நேரத்தில் தனது மனைவியுடன் பேசிக்கொண்டு நின்றார்கள் . அவ்வழியே இரண்டு தோழர்கள் கடந்து சென்றார்கள். நபிகள் நாயகம் அவர்கள் சற்று உரத்த குரலில், ‘நான் எனது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
உடனே அந்தத் தோழர்கள், ‘நபியவர்களே, உங்கள் மீது சந்தேகப்படுவோமா?’ என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள், ‘சைத்தான் மனிதனின் உள்ளத்தில் தவறான எண்ணங்களை விதைக்கக் கூடியவன்’ என்றார்கள்.
சந்தேகப்படக் கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் கணவன், மனைவி எவராக இருந்தாலும் அந்த விஷயத்தில் உண்மை நிலையைத் தெளிவு படுத்தி விட வேண்டும். அதன் மூலம் சந்தேகம் என்ற நோயை அறவே ஒழிக்க முடியும்.
தெளிந்து தெரிந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுத்தவர் மீது சந்தேகம் கொள்வது தீராத துன்பத்தை தரும் என்கிறார் வள்ளுவர்.
நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் ஒரு தம்பதியர் வந்தனர். எனக்கு பிறந்த பிள்ளை என் சாயலில் இல்லையே என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்தார் அந்தக் கணவர்.
உங்களுடைய தாய் தந்தை, அவர்களின் தாய் தந்தை அல்லது அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரின் ஏதாவது ஒரு வகையில் உமது குழந்தையின் சாயல் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூற அவர் சமாதானம் அடைந்தார்.
சந்தேகம் ஏற்பட்டால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். சரியாக வராத சூழலில் வேறு வழியே இல்லை என்றால் பிரிந்து விடுவதே நல்லது. சந்தேகத்தால் கொலை செய்து அவ்வாறு சந்தேகப்பட்டதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தால் உயிரை திரும்பத் தர முடியுமா? தக்க காரணமின்றி ஒரு உயிரைக் கொலை செய்வது மனித இனத்தையே கொன்றதற்கு சமம். ஒரு உயிரை வாழ வைப்பது மனித இனத்தையே வாழ வைப்பதற்கு சமம்.
சிறுவர்கள் மீது அன்பும், பெரியவர்கள் மீது கண்ணியமும் கொண்ட குடும்ப சூழல் உருவாக வேண்டும்.
இவ்வாறாக வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும்.