இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரொம் மூடி, இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளதாக கிரிக் இன்போ தகவல் வெளியிட்டுள்ளது. அவர், மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் கிரிக்கெட் கட்டமைப்புகளுக்குள் பணியாற்றிய மூடியின் அனுபவத்தைப் பயன்படுத்தி இலங்கையின் கிரிக்கெட்டிற்கு புத்துயிரளிக்கும் முயற்சியாக இந்த நியமனம் அமைந்துள்ளது. விளையாட்டில் சிறந்த நடைமுறைகள் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை மூடி இலங்கை கிரிக்கெட்டுக்கு கொண்டு வருவார் என கிரிக்கெட் நிர்வாகம் கருதுகிறது.
2005-2007 வரை இலங்கை தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக மூடி பணியாற்றினார். இந்த காலப்பகுதியில் இலங்கை 2007 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் மூடி, இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு பணியை ஏற்றுக்கொள்வார்.
அவர் இலங்கை கிரிக்கெட் இயக்குனராகவும், ஹைதராபாத்தில் கிரிக்கெட் இயக்குனராகவும் சமநேரத்தில் பணியாற்ற ஒப்பந்தத்தில் வசதியேற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் விளையாட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிற்கு அரவிந்த டி சில்வா தலைமை தாங்குகிறார். ரொஷன் மஹானாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் குழுவில் உள்ளனர்.
இந்த குழுவின் முதல் பரிந்துரையாக மூடியின் நியமனம் உள்ளது.