ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரையே எடப்பாடி அரசு இப்படி நடத்தும் என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன? என்று எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த 70 ஆண்டுகால பழமையான காந்தி சிலை ஒன்று இருந்தது. இது பூங்கா அமைப்பிற்காக முன்னறிவிப்பின்றி திடீரென அகற்றப்பட்டது. இதையடுத்து பனியன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திடீரென ரவுண்டானாவில் புதிய காந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தரமற்ற பீடத்தில் அவசர கதியில் காந்தி சிலை வைக்கப்பட்டதாக கரூர் எம்.பி. ஜோதிமணி புகார் தெரிவித்தார். அத்துடன் அவர் கரூரில் அவர் இன்று காங்கிரஸ்காரர்களுடன் இணைந்து போராட்டம் மேற்கொண்டார். அப்போது தடையை மீறி போராட்டம் செய்ததாக எம்.பி. ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிலையில் எம்.பி. ஜோதிமணி வேனில் இருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு தமிழனும் எழுந்து நிற்க வேண்டும். அதற்கான உரிமை குரலை கொடுக்கவேண்டும். அதற்கான முன்னெடுப்பை நாங்கள் எடுப்போம். இந்த அரசின் அடக்குமுறைக்கும், அராஜகத்திற்கு அஞ்சமாட்டோம். எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்றார்.
அத்துடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரையே எடப்பாடி அரசு இப்படி நடத்தும் என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன? இந்த அரசின் அடக்குமுறைக்கும், அராஜகத்திற்கு அஞ்சமாட்டோம். எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன.ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரையே இவ்வளவு கண்ணியமற்று நடத்தும் இந்த எடப்பாடி அரசில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது? ஊழலும், அராஜகமும் தலைவிரித்து ஆடுகிற எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது. அந்த இடத்தில், அஸ்திவாரம் இல்லாமல் தரமற்ற, கையால் உரசினாலே பொரிந்து விழுகிற ஒரு திடீர் கட்டுமானத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த தரமற்ற கட்டுமானம் சிதைந்து விழுந்தால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதை தட்டிக் கேட்ட எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கிறது அதிமுக அரசு” என்றும் பதிவிட்டுள்ளார்.