மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக இளைஞரணி தலைவர் பமீலா கோஸ்வாமி பொதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டள்ளார்.
இவர் தனது காரில் போதைப்பொருள் கடத்திச் செல்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து தெற்கு கொல்கத்தாவின் நியூ அலிபூரில் சென்றுகொண்டிருந்த பமீலாவின் காரைக் காவல் துறையினர் மறித்தனர். பின்னர் அதைச் சோதனை செய்தபோது 100 கிராம் எடையுள்ள 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பமீலா கோஸ்வாமி, அவரது நண்பர்கள் பிரபீர் குமார், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரைக் கைதுசெய்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திருணாமுல் தரப்பில் இப்படியொரு விஷயம் சிக்கியிருப்பது வெறும் வாயில் அவல் கிடைத்ததைப் போல மாறிவிட்டது. அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் பமீலாவையும் பாஜகவையும் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். சட்டவிரோத செயல் செய்பவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைப் பொருட்படுத்தாமல் சட்டம் அதன் கடைமையைச் செய்ய வேண்டும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பமீலா கோஸ்வாமி விமான பணிப்பெண்ணாகப் பணியாற்றி, டிவி தொடரிலும் நடித்துவந்துள்ளார். 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தனக்கு இருக்கும் செல்வாக்கைக் கொண்டு இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தார். சமூக வலைதளங்களில் செம ஆக்டிவா இருக்கும் இவர் பாஜகவுக்கு ஆதரவாகப் பதிவுகளைப் பதிவிட்டு வந்தார். தற்போது போதைப்பொருளுடன் சிக்கியுள்ளார்.