கங்குபாய் கத்தியாவடி (Gangubai Kathiawadi) பாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர்களில் முக்கியமானவரான சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகங்களைக் கொண்ட இவரின் சமீபத்திய படம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய ‘பத்மாவத்’ என்பது நினைவிருக்கலாம். அலியா பட் நாயகியாக நடிக்க ஹுசைன் ஸைதி (Hussain Zaidi) எழுதிய ‘Mafia Queens of Mumbai’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த பயோகிராபி படம் எடுக்கப்படுகிறது.
1960-களில் பம்பாயின் காமத்திபுராவில் பாலியல் தொழில் நடத்திவந்த கங்குபாய் என்ற பெண்மணியின் கதையை இது பேசுகிறது. இளம்வயதில் தன் காதலனால் பாலியல் விடுதியில் விற்கப்பட்ட கங்குபாய் எப்படி காமத்திபுராவுக்கே பின்னாளில் ராணியானார் என்பதுதான் ஒன்லைன். இம்ரான் ஹாஸ்மி மற்றும் அஜய் தேவ்கான் ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடிக்கின்றனர். வழக்கம்போல சஞ்சய் லீலா பன்சாலியே படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கிறார். செப்டம்பர் 2020-ல் வெளியாக வேண்டிய படம், கொரோனாவால் தள்ளிப்போயிருக்கிறது.