சில சமூக ஊடக பயனர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தை நாசப்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று புத்தளத்தின் கருவலகஸ்வேயில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோது, ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.
அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை தவறாகப் புரிந்துகொள்வதன் மூலம் சில பிரிவுகள் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
காடழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்காது என்றும், இதுபோன்ற நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொதுமக்களின் பாரம்பரிய விவசாய நிலங்களை விடுவிக்க சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அது மரங்களை தறித்து சுற்றுச்சூழலை அழிக்கவல்ல. அதற்கு எந்தவொரு தரப்புக்கும் அனுமதி அளிக்கவில்லை.
உள்ளூர் விவசாயிகளுக்கு உதவ தெளிவான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் காடழித்து விவசாயம் செய்ய யாருக்கும் உத்தரவிடப்படவில்லை.
கூகிள் வரைபடங்கள் மூலம் பெறப்பட்ட படங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க முடியாது. பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
விவசாயத்திற்கு நிலம் இல்லாதது தொடர்பான பிரச்சினைகளை பொதுமக்கள் எழுப்பி வருவதாகவும், எனவே ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக அவர்கள் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் நாட்டிற்கான தனது கொள்கைகளுக்கு பின்வாங்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.