உடற்பயிற்சி செய்வதையும் உணவுக் கட்டுப்பாட்டையும் பற்றி திடீரென ஞானோதயம் பிறக்க, அவை தொடர்பான விஷயங்கள் பற்றித் தேடுவோம். உடற்பயிற்சி செய்கிறோமோ இல்லையோ… அது குறித்து ஆயிரம் சந்தேகங்கள் கிளம்பும். உடற்பயிற்சி விஷயத்தில் பலருக்கும் இருக்கும் பொதுவான சந்தேகங்களிற்கு விளக்கங்களை தருகிறோம்.
மாதவிடாய் நாள்களில் உடற்பயிற்சி செய்யலாமா?
கண்டிப்பாகச் செய்யலாம். அந்த நாள்களில் உங்கள் உடல் ஒத்துழைத்தால் உடற்பயிற்சிகளை நிறுத்த வேண்டியதில்லை. இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் நாள்களில் இடுப்புக்குக் கீழுள்ள உடலுக்கான பயிற்சிகளைத் தவிர்த்துவிட்டு, இடுப்புக்கு மேலான பகுதிகளுக்கான பயிற்ச களை மட்டும் செய்யலாம்.
நாப்கின் உபயோகத்தை நிறுத்திவிட்டு, மென்ஸ்ட்ருவல் கப்புக்கு மாறினால், உடற்பயிற்சி செய்யும்போது எந்த அசௌகர்யத்தையும் உணரமாட்டீர்கள்.
உங்களுக்கும் மென்ஸ்ட்ருவல் கப் ஓகே என்றால் அதை உபயோகித்தபடி உடற்பயிற்சிகளைத் தொடரலாம். அதைத் தாண்டி உடல் அசதியாக இருக்கிறது, ஓய்வு கேட்கிறது என்றால் உடற்பயிற்சியைத் தவிர்த்துவிட்டு உடலுக்கு ரெஸ்ட் கொடுப்பதே சரி.
உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டால் மீண்டும் எடை அதிகரிக்குமா?
நாம் சாப்பிடுகிற உணவிலுள்ள கலோரிகளை எரிக்கும் அளவுக்கு உடலியக்கம் இருக்கும்வரை பிரச்னையில்லை. அப்படியில்லாமல் அந்த கலோரிகளை எரிக்கும் அளவுக்குக்கூட உடலியக்கம் இல்லாமல் குறைவாக இருக்கும்பட்சத்தில் எடை ஏறும்.
அதிக கலோரிகள் எரிக்கப்படும்போது எடை குறையும். உடற்பயிற்சி என்பது தனி வேலையாகப் பார்க்கப்படக் கூடாது. தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, குளிப்பதுபோல உடற்பயிற்சி செய்வதும் அன்றாட வழக்கமாக மாற வேண்டும்.
ஆக்டிவ்வாக இல்லாமல், உடற்பயிற்சிகள் ஏதுமின்றி உங்கள் வாழ்க்கை ஒரே மாதிரி போய்க்கொண்டிருந்தால் உங்கள் உணவின் மீதும் கவனம் இருக்காது. அதன் விளைவாக எடை ஏறும். எந்த வயதினராக இருந்தாலும் ஏதோ ஒருவகையான உடற் பயிற்சியைச் செய்வதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். நினைத்தபோது செய்வேன், திடீரென நிறுத்தி விடுவேன் என்றால் எடை குறையாது.
வோக்கிங் செய்தால் எடை குறையுமா?
வோக்கிங் என்பது சிறந்த பயிற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வோக்கிங் மட்டுமே செய்து எடையைக் குறைக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. உங்கள் உணவிலுள்ள கலோரிகளில் கவனம் செலுத்த வேண்டும். கலோரி குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வோக்கிங் செய்வது அன்றாட வாழ்க்கையில் உங்கள் செயல்திறனை மேம்படுத்த உதவுமே தவிர, அது மட்டும் எடை குறைய உதவாது.
வோக்கிங் செய்வதோடு வேறு ஏதாவது ஒரு பயிற்சியையும் நீங்கள் தவறாமல் செய்ய வேண்டும். புதிதாக வோக்கிங் போக ஆரம்பிக்கிறீர்கள், உணவுப் பழக்கத்தையும் மாற்றியிருக்கிறீர்கள் என்றால் எடை குறையும். ஆனால், அதை நீங்கள் தொடரும் பட்சத்தில், அதாவது தினமும் குறிப்பிட்ட கிலோ மீட்டர் நடக்கிறீர்கள் என்றால் உங்கள் உடல் அதற்குப் பழகிவிடும். தொடர்ந்து எடை குறையாது. அதனால்தான் உடலுக்கு வேறு சவாலான ஆக்டிவிட்டி எதையாவது கொடுக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, ஒரே மாதிரியான பாதையில் வோக்கிங் போகாமல் மேடான பகுதியில் நடப்பது, ஜாகிங் போவது போன்றவற்றைச் செய்யும்போது எடை குறையும்.
ஒட்டுமொத்த உடலுக்குமான பயிற்சிகள்… குறிப்பிட்ட பகுதியை மட்டும் இளைக்கச் செய்கிற ஸ்பொட் ரிடக்ஷன் பயிற்சிகள்… எது சரி?
ஒட்டுமொத்த உடலுக்குமான பயிற்சிகளை வாரத்தில் மூன்று நாள்கள் செய்யலாம். ஸ்பொட் ரிடக்ஷன் என்பது ஒரு மாயை. உதாரணத்துக்கு, தொப்பையைக் குறைக்க வேண்டும், கைகால்களில் உள்ள எக்ஸ்ட்ரா சதைகளை மட்டும் குறைக்க வேண்டும், முகம் இளைக்காமல் உடலின் மற்ற பகுதிகள் மட்டும் இளைக்க வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்து அந்தந்தப் பகுதி களுக்கான பயிற்சிகளைச் செய்வது சரியானதல்ல.
ஏனெனில், நம் உடலில் ஆல்பா, பீட்டா செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள் எங்கே, எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்துதான் உடலின் கொழுப்பு குறையும். இவற்றை யெல்லாம் தாண்டி வெறும் உடற் பயிற்சிகளின் மூலம் மட்டும் எடை யைக் குறைத்துவிட முடியாது. நீங்கள் உட்கொள்ளும் உணவிலும் கவனம் தேவை.
குழந்தை பெற்ற பெண்கள் ஸ்கிப்பிங் செய்தால் கர்ப்பப்பை இறங்குமா?
ஸ்கிப்பிங் என்பது ஒருவகையான கார்டியோ பயிற்சி. ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பப்பை இறங்கும் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே, குழந்தை பெற்ற பெண்களும் தாராளமாக ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம். ஆனால், நீங்கள் வெறும் ஸ்கிப்பிங்கை மட்டுமே செய்தால் அது உடலின் குறிப்பிட்ட தசைகளை மட்டும்தான் பலப்படுத்தும். ஸ்கிப்பிங்கோடு சேர்த்து வேறு சில பயிற்சிகளையும் சேர்த்துச் செய்வதுதான் சிறந்தது.
குழந்தை பெற்ற பெண்கள், குறிப்பாக சிசேரியன் ஆனவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ஸ்கிப்பிங் செய்ய ஆரம்பிக்க வேண்டும். பிரசவமான உடனேயே அதைத் தொடர வேண்டாம். வெளியே ஜிம்முக்குப் போய் உடற் பயிற்சி செய்ய முடியாதவர்கள், வொர்க் ஃப்ரம் ஹோமில் கம்ப் யூட்டர் முன்னாடி நீண்ட நேரம் செலவிடுபவர்களுக்கு ஸ்கிப்பிங் மிகச் சிறந்த உடற்பயிற்சி. அந்த நாளின் இறுதியில் உங்கள் உடலின் கலோரிகளை எரிக்க அது உதவும்.