எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.
சுண்ணாம்பு சத்து, விட்டமின் டி சத்து குறைவு போன்றவற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு காணப்பட்ட இந்த நோய் தற்போது இளம் வயதினருக்கும் காணப்படுகிறது. பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இளைஞர்களை தாக்கி வருகிறது.
கல்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதும் இந்த நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் விட்டமின் டி குறைபாடினாலும் முதுகெலும்பை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய், பின்னர் கை கால் எலும்புகளையும் பாதிக்க செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பலாம் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர்.
பால் மற்றும் பால் பொருட்கள்
குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிடவேண்டும். சீஸ், யோகர்ட், பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிடலாம். இதனால் எலும்புகள் பலமடையும்.
நட்ஸ்
பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கல்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.
சத்தான காய்கறிகள், பழங்கள்
ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். விட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
ராகி
100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
பேரிச்சை
பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
விட்டமின் டி சத்து
எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம்.
பருப்பு வகைகள்
கருப்பு உளுந்து கல்சியம் சத்து நிறைந்தது. அதேப்போல் சோயா பீன், கொள்ளு போன்றவைகளில் கல்சியம் சத்து காணப்படுகின்றன. அதேப்போல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.