26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
ஆன்மிகம்

தற்கொலை கிரகத்துக்கான ஜோதிட சூட்சுமங்களும், அதற்கான பரிகாரங்களும்

நாம் வாழும் அனைவரது வாழ்க்கையிலும் அதிக பிரச்னைகள், வருத்தங்கள், மனதில் பனி போலக் குழப்பங்கள் அனைத்தும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவரவர் ஊழ்வினைகளின் விகிதச்சாராங்கள் மட்டும் மாறுபடும். நம் பிறவி எடுப்பதே கடவுள் நமக்கு விதித்த கர்ம வினை என்று சொல்லலாம். இந்த கர்மாவிலிருந்து தப்பித்து மற்றொரு ஊழ்வினையான தற்கொலையைத் தேடிச் செல்லக் கூடாது. அது நம் கர்மாவின் அளவை அதிகப்படுத்துமே தவிரக் குறைக்காது என்று அனைவரும் மறந்துவிட கூடாது. ஜோதிடம் சூட்சமத்தில் தற்கொலை பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

முதலில் துர்மரணம் பல்வேறு விதியில் சொன்னாலும், “லக்கினதிபதியும் எட்டடுக்குடையவனும் இணைந்து கேந்திர திரிகோண ஸ்தானத்தில் அமர்ந்திருக்க, எட்டாமிடத்தில் நின்றிருக்கின்ற கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் அந்த ஜாதகனுக்கு அகால மரணம் ஏற்படும்” என்று ஜாதக பாரிஜாதக நூலில் (பாடல் 362) கூறப்பட்டுள்ளது.

தற்கொலை என்ற எண்ணம் இருவகை நிலைகள். ஒருவருக்கு மரபு ரீதியாக எதிர்கொள்ள முடியாத பயம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும் இது ஒரு வகை நிலை. இவர்களுக்கு அவ்வப்பொழுது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு தற்கொலை எண்ணம் மனதில் ஒரு துளிகூட இல்லாமல் தைரியமாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு சில நாழிகை போதும் அந்த தைரியத்தை முறியடித்து, நீண்ட நாள்களாக திட்டம் தீட்டாமல் திடீர் என்று தற்கொலையில் ஈடுபடுவார்கள். இவர்களின் தைரியம் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதுதான். இதுவும் மனம் சார்ந்த பிரதிபலிப்பு. இந்த மாதிரி எண்ணங்கள் ஜாதகருக்கு ஏற்பட பல்வேறு கிரகங்களின் கூட்டு மற்றும் காலசக்கரத்தின் சூழ்ச்சி ஆகும்.

ஜாதகருக்கு இந்த கீழ்த் தரமான எண்ணம் வலுத்து உள்ளது என்று சொல்லிவிட முடியாது, அது ஒரு உப்பு சப்பு அற்ற ஒன்று என்றும் சொல்லவும் கூடாது. அந்தந்த ஜாதகரின் எதிர்ப்புத் திறனைப் பொறுத்தே அமையும். ஆனால் தற்கொலை ஒரு முடிவோ தீர்வோ கிடையாது என்று உணர வேண்டும். ஜாதகரின் மன எண்ணங்களின் பிரதிபலிப்பு சந்திரன் ஆவர். இவரை முடிந்தவரை நம் கட்டுக்கோப்பில் கொண்டு வர வேண்டும். சந்திரனோடு முழு பாவிகள் சேரும்பொழுது மனதைத் தவறான வழியில் கொண்டு செல்லுவார்.

ஜாதகருக்கு மறைவு ஸ்தனாதிபதி அல்லது பாதகாதிபதியின் தசாபுத்தி அந்தரம் நடைபெறும் காலங்களில் தற்கொலை சூழ்நிலையை ஏற்படுத்தும். இவற்றோடு லக்கினத்திற்கு மாரகர் அல்லது கர்மாதிபதி அல்லது அஷ்டமாதிபதிகள் சேர்ந்து ஜாதகரின் உயிரையும் எடுக்கவும் செய்வார்கள் அல்லது பிறவி காயங்களுடன் ஏன் வாழ்கிறோம் என்ற கெட்ட நோக்கையும் தூண்டுவார்கள். இந்த எண்ணங்களை நம்முடைய கிரகங்களின் வாயிலாக பஞ்சபூதங்களின் ஒருவித தாக்கமாகும்.

இதற்கு ஜோதிட ரீதியாக யாரெல்லாம் காரணம் என்று பார்ப்போம். ஒரு சிலருக்கு சூரியன் வலுத்து இருப்பவர்களுக்கு அவர்களின் தோல்விகளையும் சறுக்கல்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜாதகரை முக்கியமாக, ஆட்டும் கிரகம் நீர் தத்துவங்கள் அடங்கிய சந்திரன், சுக்கிரன். இந்த சந்திரனோடு சேரும் ராகு மன ஆசையை அதிகப்படுத்துவார் அது அசையும் அசையா சொத்தாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், பணம், புகழாக இருக்கலாம். ஆனால் இவற்றினை அதிகம் கொடுத்து இல்லாதவனாக மாற்றும் ஒரு முக்கிய காரணகர்த்தா கேது ஆவர். இவற்றில் ஒரு சில நேரங்களில் தேவகுருவின் வழிக்கு ஏற்ப தர்மங்களோடு நடப்பவன் குரு ஆசியோடு இந்த துர் எண்ணங்களிலிருந்து தப்பிப்பான். அது குரு பார்வை என்றும் சொல்லலாம்.

மனிதனுக்கு பணம், புகழ், காமம் அனைத்தும் மாயை என்று நினைக்கவைக்கும். அந்த மாய உலகை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தற்கொலையைச் சந்திப்பார்கள். ஒரு மனிதன் ஆசைப்படலாம் அதுவே பேராசையாக முடியக்கூடாது. முக்கியமாக சுக்கிரன் தன்மைகொண்ட பொருள் சேர்க்கை என்பது முக்கிய தேவை அவற்றின் தேவையை வைத்துகொண்டு முடிந்தவரை இல்லாதவர்களுக்கு உதவலாம். இதுவும் நல்ல கர்மாவின் சேமிப்பு, குருவின் தர்மம் வங்கியில் சேர்க்கப்படும். என்றாவது ஆபத்துக் காலத்தில் கடவுளின் இந்த தர்ம வங்கியிலிருந்து உங்களுக்கு தர்ம-மாலையாக விழும். அங்குத் தர்மம் வேறு வழியில் உங்களைக் காக்கும்.

கோட்சரப்படி சனியோடு ஜென்ம சந்திரன் சேரும்பொழுது அல்லது தொடர்பு பெரும்பொழுது கீழ்த்தரமான மன நிலையில் தற்கொலையின் வாயிலாக ஆயுளை எடுப்பார் சனீஸ்வரன். கோட்சரம் என்பது 35% என்று எடுத்துக்கொண்டாலும் மீதி உள்ள 65% தசாபுத்தியும் செயல் இருந்தால் மட்டுமே தற்கொலை மரணம் ஏற்படும்.

தேய்பிறை சனிகுசன் எட்டில்
தரணி அறிய பாச பந் தத்தால்
தன்னுயிர் மாய்ப்பன்என் றுரைப்பர்! (ஜா. அ :746)

தேய்பிறை சந்திரன், சனி, செவ்வாய் ஆகிய மூவரும் 8ல் கூடிநின்றால், அவன் பிரபஞ்சம் எல்லாம் தெரியும் படி கயிற்றில் முடித்துக்கொண்டு தன் ஆவியை மாய்ப்பான் என்று ஜாதக அலங்காரத்தில் கூறப்படுகிறது.

முக்கியமாக துலாம், மகரம், கடகம், கன்னி தொடர்பு பெற்றவர்கள் மனதை ஓர் நிலைப்படுத்த முடியாது, தவறான எண்ணங்களை அல்லது முடிவுகளை ஏற்படுத்துவார்கள். ஜோதிடர்கள் ஆபத்தை ஜாதகரீதியாக கூறலாம் ஆனால் கடவுள் எழுதிய மரண ஓலையில் உள்ள ஆயுளைக் கணிக்கக் கூடாது.

மரணம் யாரால் என்று பார்த்தால் ஏழ்மை, பொருள் பேராசை, கூடா உறவு, இச்சை என்று பிரித்துச் சொல்லலாம். இவற்றிக்கு முக்கிய காரணகர்த்தா சுக்கிரன் ஆவர். சுக்ரன் காரகத்துவங்களான களத்திரம், ஆடம்பர வாழ்க்கை, கட்டியவீடு, காமம் அனைத்தையும் ஒரு கட்டுக்கோப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். சுக்கிரன் துர்நிலையில், அசுப சேர்க்கையில் இருக்கும்பொழுது, ஒரு மனிதனை பேராசை படகில் ஏறவைத்து பின்பு கடலில் தள்ளியும் விடுவார். இவற்றோடு போகத்தைத் தூண்டும் ராகு கேது சேர்ந்தால் முடிந்தவரை அந்த மனிதனை மாய வலையில் வீழ்த்திவிடுவார்.

ஜாதக ரீதியாக 6,8,12 தொடர்பு கெடு பலன்களைத் தரும், ஆனால் நான் ஆராய்ந்ததில் 12வது பாவத்தில் அமரும் கிரகங்கள் மற்றும் அந்த கிரகத்தின் நட்சத்திராதிபதி, 12ம் அதிபதி, அஷ்டமாதிபதி தூண்டுதல் அதிகம் ஏற்படுத்தும்பொழுது மீளமுடியா சூழ்நிலையிலிருந்து தப்பவே முடியாமல் போகலாம். ஒரு சிலசமயம் 12ல் இருக்கும் சனி, துர்மரண வாயிலாக உடலின் ஒரு பகுதியை எடுக்கவும் செய்வார்.

ஐந்தாம் பாவம் கெட்டு இருந்தால் நண்பர்கள் பாவிகளாகவும், கேளிக்கை நிலையில் தடுமாறுபவராகவும் இருப்பார்கள். கூடா நட்பு அல்லது கூடா உறவு பற்றி திருவள்ளுவர் கூறியது..

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.(824)

விளக்கம்: முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசினபோதும், அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை, விளையும் தீமைக்கு அஞ்சி, அவர்களை விட்டு விலக விட வேண்டும்.

மனமே ரிலாக்ஸ் – ஜோதிட பரிகாரம்:

1. குருவிற்குப் பிடித்த தர்ம நெறிகளோடு உள்ள விதிமுறையைப் பின்பற்றினால் போதுமானது. குருவின் அனுக்கிரகம் உங்களுக்குக் கிட்டும்.

2. நீர் தத்துவம் கொண்ட சந்திரன், யோகம் இல்லாத நிலையில் ஜாதகருக்கு இருந்தால். மனநிலை ஓட்டத்தைச் சரிசெய்ய யோகா முறையைக் கையாள வேண்டும். உயரப் பறந்தாலும், வீழ்ந்தாலும் முகத்திலும் மனதிலும் ஒரே நிலையை ஏற்படுத்தும். அது தவிர மற்ற நல்ல வழிகளில் கவனத்தைச் செயல்படுத்த வேண்டும்.

2. வாஸ்துவின் அடிப்படையில் துளசியை வடகிழக்கு மூலையில் கீழ்மட்டமாகத் தரையில், நீர்த் தொட்டி முன்பு அல்லது கன்னி மூலையில் அதாவது தென்மேற்கில் கொஞ்சம் உயர மாடத்தில் வைத்து வளர்க்கலாம். அந்த துளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய் வேத்தியத்துடன் வணங்கலாம். காலை முதலே உங்களுக்கு ஒரு நேர்மறை ஆற்றல் பெருகும்.

3. துர்சக்திகள் நம்மை விட்டு விலகக் கையில் துளசி, கடவுளின் அபிஷேக மஞ்சள் அல்லது வேப்பிலை கைப்பைகளில் வைத்துக்கொள்ளலாம்.

4. விஷ்ணு ஒரு பொறுமையான தீர்க்கமான முடிவு எடுக்க வல்லவர் அதனால் அவரை போற்றும் வண்ணம் விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஸ்லோகம் சொல்லலாம். இவற்றால் எல்லா விஷயங்களிலும் தெளிவு பிறக்கும்.

5. நேர்மறை ஆற்றலைப் பெருக்க நல்ல உறவுகளும் நல்ல நட்புகளும் தேவை. உறவுகள் மீது நம்பிக்கை குறைவு என்று எண்ணினால் செல்ல பிராணிகள் அல்லது மரம், செடிகளை வளர்க்கலாம் அவற்றோடு தினமும் உங்களுக்கு ஏற்படும் சுகதுக்கங்களைப் பேசலாம். இதனால் மனமே ரிலாக்ஸ் நிலையை அடையும்.

6. இந்த பிரபஞ்சத்தில் குண்டும் குழியும் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நம் மனதில் அழுக்காகச் சேரும், இதனால் தெளிவு பிறக்காது. ஜாதகத்திற்கு ஏற்ப அந்த தெளிவு நம் பிஞ்சு குழந்தைகளுக்கு அவர்களின் கலாசாரத்தை மாற்ற முற்படவேண்டும்.

7. சிறுவயதிலிருந்து குழந்தைகளைச் சொகுசான வாழ்க்கை தவிர எல்லா ஏற்ற இறக்க சூழ்நிலையில் வாழக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் ஜாதகத்தில் ஏற்படும் சந்திரன் சுக்கிரன் உடன் சேரும் பாவிகளின் தாக்கம் ஜாதகரை தவறான கோணத்தில் செல்லவிடாமல் ஓரளவு தவிற்கும். இங்கு விதியை கொஞ்சம் மதியால் (சந்திரன்) மரணத்திலிருந்து தள்ளிவைக்க முயற்சிக்கலாம் என்பது ஆராய்ச்சியின் முடிவு.

குருவே சரணம்!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.02.2025 – திங்கட்கிழமை

east tamil

இன்றைய ராசி பலன் – 16.02.2025 – ஞாயிற்றுக்கிழமை

east tamil

இன்றைய ராசி பலன் – 15.02.2025

east tamil

இன்றைய ராசி பலன் – 14.02.2025

east tamil

இன்றைய ராசி பலன் (14.02.2025)

east tamil

Leave a Comment