24.1 C
Jaffna
February 27, 2021
ஆன்மிகம்

தம்பதியருக்குள் பிரிவினை: ஜோதிடத்தில் முன்னதாகவே தெரியுமா?

தம்பதியருக்குள் பிரிவினை வரும் என்று ஜோதிடத்தின் மூலம் முன்கூட்டியே அறியமுடியா என்பதை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தம்பதியருக்குள் பொதுவாக வரும் பிரச்னைகள்

1. தாய் தந்தையர் பேச்சைக் கேட்டு, அவர்கள் பார்த்த வரனைப் பற்றிய எந்த தகவலும், முக்கியமாக அவரின் / அவளின் சுயரூபம் அறியாமல் இருத்தல்.

இதற்கு, வெறுமனே நட்சத்திர பொருத்தம் மட்டுமே பார்த்து முடிவெடுத்தல்…நன்கு படித்த, வசதியானவர்களிடையே கூட சரியான பொருத்தம் பார்ப்பது தற்போது குறைந்துவிட்டது. சில வசதியானவர்கள் கூட ஜோதிடரிடம் முழுமையான பலனைக் காணவும், அதற்கேற்ற தட்சிணையை அளிக்கவும் மறுக்கிறார்கள். 50க்கும் 100க்கும் பார்க்கிறார்கள், நீங்கள் இவ்வளவு கேட்கிறீர்களே எனச்சென்று விடுகிறார்கள். அதனால் பிரிவினைக்கான சில பொருத்தங்களை, சில ஜோதிடர்களால் மட்டுமே பார்க்கும் உள்ளார்ந்த விஷயங்களைக் கவனிக்கத் தவறுகிறார்கள்.

2. தாமே காதலித்து, பெற்றோரை வற்புறுத்தி, தாம் காதலித்தவரைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும், ஏதோ ஒரு சில ஈர்ப்புகளால் மட்டுமே காதலித்து திருமணம் செய்து கொள்ளுதல்.

ஒரு சிலர், ஏன் நிறைய பேரைக் காதலித்து பின்னர் ஜோதிடரை அணுகுகிறார்கள். எங்கள் வீட்டில், ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்று, அதுவும் 6 மாத காதல், 3 வருடக் காதல் இப்படிக் குறைந்த காலத்தில் ஒருவரை ஒருவர் என்ன புரிந்துகொள்ள முடியும். சரி அதிக காலம் பழகிய பிறகு ஏன், பொருத்தம் பார்க்க வேண்டும். புரிந்துகொள்ளாத நிலை, இவ்வளவு நாள் பழகியுமா… அது சரி, ஜோதிடம், காந்தர்வ மணம், எனும் காதலுக்குத் தடை சொல்வதில்லை என்பதோடு, காதலிப்பவர்களுக்குப் பொருத்தம் பார்க்க ஜோதிடர்களுக்கு அனுமதியும் இல்லை. இது தான் உண்மை. அப்படிபட்டவர்களுக்கு திருமணத்தைக் கோவிலில் (அது கோவில் / தேவாலயம் /மசூதி இப்படி எங்கு வேண்டுமானாலும்), அவரவர்களுக்கு விருப்பத்திற்கிணங்க திருமணம் செய்வது மட்டுமே நல்லது. அதன் பிறகு அவரவர் வசதி, விருப்பப்படி தம்பதிகள் அழைப்பை RECEPTION) நடத்தலாம்.

3. பெற்றோர் நிச்சயித்த திருமணம் ஆகட்டும், தாமே விரும்பி ஏற்கும் மணவாழ்வாகட்டும், அவர்களுக்குள் மன ரீதியாக மற்றும் உடல் ரீதியாக எவ்வாறு பொருந்துகிறது என்பதனை ஜோதிடம் எனும் மகரிஷிகளால் அருளிய ஜோதிட அறிவியல் பல வழிமுறைகளை நமக்கு அளித்துள்ளது. இவற்றை திருமணத்திற்குப் பிறகு காண்பதால் என்ன பலனை அடைய முடியும். வீணாகிப்போன வாழ்வு தான் மிஞ்சும்.

தம்பதியருக்குள் ஏற்படும் பிரச்னைகள்

1. உடல் ரீதியான பிரச்சினைகள்
ஆண், பெண் இருவருக்கும் உண்டான அதிக காமம், ஆண்மை இல்லாமல் இருத்தல், பெண்ணுக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லாதிருத்தல்,

2. மன ரீதியான பிரச்னைகள்
பேராசை, கோபம், புதிய உறவினர்களை பிடிக்காமல் போதல்..

3. பொருளாதார பிரச்னைகள்
வசதி அதிகம் / குறைவு, வேலை இன்மை, ஒரு வருமானத்திற்கு மேல் வரும் நிலையில் தலை கால் புரியாமல் ஆட நினைத்தல்..

4. மாமியாரால் வரும் பிரச்னைகள்
தானும் ஒரு காலத்தில் ஒரு மாமியாருக்கு, மருமகளாக இருந்தோம் என்ற நிலையினை மறத்தல்.. தனது மகனை, மருமகள் அதிக ஆசை காட்டி தனி குடித்தனம் செல்ல வழி வகுத்துவிடுவாளோ எனும் பயம்..

5. நாத்தனாரால் வரும் பிரச்னைகள்
வாழ்நாள் முழுவதும் தமது அண்ணன், தமக்கே எல்லாம் செய்ய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு.. பெரிய சொத்து உள்ள குடும்பத்தில், எங்காவது அசலில் அண்ணன் தமது பையனுக்கு அல்லது பெண்ணுக்கு திருமண வரன் பார்த்துவிட்டால், சொத்து கைமீறி போய்விடுமோ எனும் பயம்..

6. குழந்தை இன்மையால் வரும் பிரச்னைகள்
கணவன், மனைவி இவ்விருவருள் யாரிடம் பிரச்னை என்பதை அறியாமல், ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வாழ்வைச் சீரழித்துக்கொள்ளுதல்..

7. வேறு பெண் / ஆண் உடன் தொடர்பு உண்டானதால், வரும் பிரச்னைகள்
அதீத காமம், பொருளாதார நிலை , அண்டை அயலார் வீட்டில் நெருங்கிப் பழகுதல் , போன்ற பலவாறு பிரச்னைகள் நீண்டு கொண்டே போகும்.

8. அலுவலக பிரச்னை
நல்ல நண்பர்கள் அற்ற சூழல், மறைமுக எதிரி, அலுவலக நண்பரை அதிகமாக எல்லை மீறிய நட்பால், தம் வீட்டில் பழகவிடல்..

9. அனைத்தும் தெரிந்திருந்தும், தமது ஜனன கால ஜோதிடத்தில் புதன் அஸ்தங்கம் போன்றவற்றால், தனித்திறனை இழத்தல், அதனால் சரியான முடிவு எடுக்காதிருத்தல், அனைத்தும் தெரியும் என இறுமாப்புடன் இருத்தல்.. சரியாக பணியாற்ற முடியாமல் போகுதல், நிரந்திர வருமானம் தடைபடுதல் போன்றவை, பிரிவினைக்குக் காரணமாகும்.

இதனை 90 முதல் 95 சதவீதம் வரையிலான தனி நபர் மன நிலையால் / சூழலால் வர இருக்கும் பிரச்னைகளை முன்னதாகவே அறியும் செயல் தான்; ஜோதிட அறிவியல் மூலம் தீர்வு காண்பதென்பது இயலக்கூடிய ஒன்றே…

இந்திய கலாசாரப்படி, ஒவ்வொரு தனி மனிதரும் ஆண், பெண் இருபாலரும் திருமணப் பந்தம் ஒரு முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. அவ்வாறான அங்கீகாரத்தில், ஏற்பட்ட துணையை, விவகாரத்தால், பிரிந்து மற்றும் விவாகரத்தின்றி பிரிந்து வாழ்ந்துவரும் ஜாதகங்களை முன்கூட்டியே அறியக்கூடியதைப் பற்றியும், கிரக அமைப்புகளைப் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

பிரிவினை விதங்கள்

1. கிரகங்களால் ஏற்படும் பிரிவினைகள்
2. கிரக சேர்க்கையால் ஏற்படும் பிரிவினைகள்
3. கோட்சாரம் தரும் பிரிவினைகள்
4. தசை/ புத்தி தரும் பிரிவினைகள்
5. ராசி தரும் பிரிவினைகள்
6. பாவகம் ரீதியாகத் தரும் பிரிவினைகள்

பிரிவதில் ஏற்படும் வகைகள்

1. தற்காலிகமாகப் பிரிவது
2. தாமாகவே, நிரந்தரமாகப் பிரிவது
3. சட்டப்படி நிரந்தரமாக பிரிவது
4. மனக்கசப்பில் பிரிவதும், இணைவதும் – மறுதிருமணம் செய்து கொள்ளுதலும்.

1. உடல் ரீதியான பிரச்னைகள்.. (ஆண்மை மற்றும் பெண்மை குறைபாடு)

பொதுவாக ஒரு ஜாதகத்தில் மூன்றாம் இடம் என்பது, வீரிய ஸ்தானம் ஆகும். இந்த ஆண்மை / பெண்மை குறைவென்பது அனைத்து ராசியினருக்குமே சில கிரக அமைப்புகளால், சேர்க்கையால், பார்வையால், மொத்தத்தில் ஏதேனும் ஒரு கிரக தொடர்பால் ஏற்படும். அது சரி, ஆண்மை / பெண்மை பலம் மிக்க கிரகங்கள் என்றால், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகும். ஆண்மை / பெண்மை குறைவுக்கு காரணமான கிரகங்கள் என்றால், புதன், சனி, கேது ஆகும். இந்த மூன்று நட்சத்திரங்கள் பலம் மிக்க செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களுக்கு சாரமாக அமையும் போது ஆண்மை / பெண்மை பலம் குறைகிறது. அதேபோல் 3 ஆம் பாவக அதிபதி அஸ்தங்கம் ஆனாலோ, ராகு / கேதுக்களால் பாதிக்கப்பட்டாலோ, இருபகை கிரகங்களுக்கு இடையில் இருந்தாலோ, செவ்வாய், சுக்கிரன் இவ்விருவரும் சம சப்தமாக இருந்து ராகு / கேதுக்களால் பாதிக்கப்பட்டாலோ ஆண்மை / பெண்மை பலம் குன்றுகிறது. அதனால் பொருத்தம் பார்க்கும் போது இதனை சரியாக ஆய்ந்து பலன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அவசரம் காணுதல் கூடாது. மேலும் தோஷ சாம்யம் அல்லது பாவ சாம்யம் என்பதனை சரியான ஜோதிடர் மூலம் அறிந்துகொள்ளுதல் அவசியம். இல்லையேல் நிச்சயம் பிரிவினை எந்த காலத்திலும், நேரத்திலும் தம்பதியினரிடையே ஏற்படும்.

2. மன ரீதியான பிரச்னைகள்

ஒரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் சூரியன், சந்திரன் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், மற்றும் சனி ஆகும். அதாவது ஆதிபத்தியம் என்றால், ஒரு வீடு கொண்ட கிரகம், இரு வீடு கொண்ட கிரகம். ஒரே கிரகம் வெவ்வேறு நிலைகளில் அது நல்லதையோ அல்லது கெட்டதையோ செய்யும் நிலைக்கு, ஜாதகத்துக்கு ஜாதகம் வேறுபடும் நிலையில் இருக்கும்.

சந்திரன் உடல் மற்றும் மனதிற்கு அதிபதியாகிறார். ஒருவரின் ஜாதகத்தில், சந்திரன் கெடும்போது உடலும், மனமும் கெடுகிறது. மற்ற கிரகங்கள் கெட்டால், அது தரும் பாதிப்பு மட்டும் தான் ஒரு ஜாதகர் பெறுவார். ஆனால், சந்திரன் கெட்டால், ஒருவரின் ஜாதகத்தில் பாதி பலன்களே மாறிவிடும். மனம் தான் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அசைபோடும். அதனால், மன ரீதியான பிரச்னைகள் நிச்சயம் வெளித்தோன்றும். வாழ்க்கை – கசக்கவும், கிழிந்த கந்தை துணி போலவும் ஆகும்.

அது மட்டுமல்லாமல், மனம் எனும் ஆத்மா சரியான முடிவு எடுக்க உதவும். ஆனால், அறிவினால் எடுக்கும் முடிவு தவறாக போவதற்கு நிச்சயம் காரணமாகும். இதனை சர்வாஷ்டக பரல்களை கொண்டும் காண முடியும். அதாவது லக்கினம் பெற்ற பரல்கள் அதிகமாகவும், 4 ஆம் இடம் பெற்ற பரல்கள் குறைவாகவும் இருப்பின் அந்த ஜாதகர் ஆத்மா ரீதியாக நடப்பவர் ஆகிறார். அதனால், அவரின் முடிவுகள் சரியாக இருக்கும். அதுவே 4ஆம் இடம் அதிக பரலைப் பெற்றும் லக்கினம் குறைவான பரலைப்பெற்றதாயின் அந்த ஜாதகர், அறிவு சொல்படி நடப்பவராகவும், அவரின் முடிவுகள் நியாயம் அற்றும் இருக்கும்.

3. பொருளாதார பிரச்னைகள்

ஆடம்பரத்திற்கும், அதிகப்படியான சந்தோஷத்திற்கும் காரண கிரகமாக சுக்கிரன் இருப்பதால், தமது தகுதிக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை இழந்தவர்களும், குடும்பத்தைப் பிரிந்தவர்களை காணலாம். விவாகரத்தானவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டிருப்பதைக் காண முடியும். சுக்கிரனுடன் ராகு / கேது இருப்பது அல்லது சுக்கிரனுக்கு திரிகோணத்தில் ராகு / கேது இருப்பது தம்பதியினருள் பிரச்னைகள் மட்டும் ஏற்படுத்துவது இல்லை, பிரிவினைகளையும், அவமானத்தையுமே ஏற்படுத்தியே விடுகிறது. பொதுவாக பாவக ரீதியில் பார்க்கும் போது 2-5-7-11 பாவகங்கள் தொடர்புபடும் போது நிச்சயம் காதல் மலரும், அது திருமணம் வரை போய் சேருமா அல்லது தடை ஏற்படுமா என்பதனை காணமுடியும். அதாவது இந்த பாவக தொடர்பில் ஒருவர் ஜாதகத்தில் (அதாவது ஆண் / பெண் ) 8 தொடர்பு வரும் போது நிச்சயம் இருவீட்டாரிடையே சண்டை சச்சரவு ஏற்பட்டுவிடும். அதனையும் மீறி திருமணம் எப்படியாவது நிகழ்ந்துவிட்டால், திருமணத்திற்குப் பிறகு பிரிவினைக்குத் தள்ளிவிடும்.

இதில் 12ஆம் பாவம் தொடர்புபடும் போது காதல் தோல்வியில் ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள் என்றே கொள்ளமுடிகிறது. ஏனெனில் அது (12ஆம் பாவம்) விரையப் பாவமாகிறது. விரையம் பணம் மட்டுமல்ல, அன்பான உறவுகளையும் தான் என எடுத்துக்கொள்ளவேண்டி வருகிறது. காதல் திருமணம், பொதுவாகவே – நிச்சயம் பொருளாதார சீர்குலைவையும், அவமானத்தையுமே தருவதாக அமைகிறது. இதில் தாங்கும் பக்குவம் இத்தகைய தம்பதியினரிடையே இருப்பின், பிற்காலத்தில் வளமுடன் வாழ்க்கை அமையலாம்.

– ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மங்கு சனி, பொங்கு சனி- நன்மைகள்

Pagetamil

சிவராத்திரி தோன்றக் காரணம்

Pagetamil

பிறந்த எண்களுக்குரிய கிரகங்கள்.

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!