வீதியில் தனியாகச் சென்றுக்கொண்டிருந்த குடும்ப பெண்ணின் கண்களில் மிளகாய்த் தூளை வீசி, தாலியை அபகரித்துச் சென்ற திருடனை மக்கள் மடக்கிப்பிடித்து, நையப்புடைத்தது, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்காடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு (13) இடம்பெற்றது.
கடையொன்றில் பொருளைக் கொள்வனவு செய்து விட்டு, கடைக்கு பின்னாலிருந்த தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணின் கண்களில், மிளகாய்த்தூளை வீசி விட்டு, தாலியை அபகரித்த திருடன், மதில் மேலால் பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளான்.
இருப்பினும், தாலியைப் பறிகொடுத்த பெண், தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஒன்றுதிரண்ட பொதுமக்கள், அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
அதன்போது, மறைந்திருந்த திருடன், மக்களிடம் மாட்டிக்கொண்டான்.
அவனை துவைத்தெடுத்த மக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
அவனிடமிருந்து தாலியை மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.