யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளில் சீன முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக முடிவெடுத்துள்ளன. இது தொடர்பில் தூதரக மட்டத்தில் சந்திப்புக்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு இன்று (14) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சுன்னாகம் தவிசாளர் தர்சன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோ சார்பில் விந்தன் கனகரட்ணம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன், மற்றும் ஜனநாயக போராளிகள், அனந்தி தரப்பினர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வை முன்னிட்டு வெளிநாட்டு தூதரகங்களுடன் அவசர சந்திப்புக்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக சர்வகட்சி பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது.
இரா.சம்பந்தன் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர், க.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதன்போது, அனந்தி சசிதரனின் தரப்பின் கொள்ளை பரப்பு செயலாளர் என கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவர், “அக்காவையும் அந்த குழுவில் இணைக்க வேண்டும். அக்காவும் இணைக்கப்பட்டாலே அந்த குழு முழுமையடையும்“ என வலியுறுத்தினார்.
தூதரக சந்திப்புக்களில் அதிகமான பிரதிநிதிகள் இடம்பெற தேவையில்லையென ஏனைய கட்சிகள் கூறினாலும், கொள்ளை பரப்பு செயலாளர் விடாக்கண்டனாக நின்றார். இறுதியில், அனந்தியின் பெயரும் அதில் இணைக்கப்பட்டது.
கூட்டு கட்சிகள் சார்பில் ஊடகங்களுடன் பேச, விடயங்களை கையாள, சுரேஷ் பிரேமச்சந்திரனும், சீ.வீ.கே.சிவஞானமும் நியமிக்கப்பட்டனர்.
அத்துடன், யாழ்மாவட்டததிலுள்ள 3 தீவுகளில் ஆரம்பிக்கப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை சீன நிறுவனங்களிற்கு வழங்குவதை எதிர்ப்பதென்றும் முடிவானது.
இது குறித்து தூதரக மட்டங்களில் சந்திப்பை நடத்தி, எதிர்ப்பை தெரிவிப்பதென்றும் முடிவானது.