மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், நாளை (15) பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாக தமிழ்பக்கம் தகவல் பெற்றது.
மாநகர முதல்வரின் இந்த சந்திப்பு தொடர்பில், மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்களும் அறிந்திருக்கவில்லை. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிற்கான இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொறுப்பாளர் பொ.செல்வராசாவும் அறிந்திருக்கவில்லை.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்துடன் பேசும்போது, ஜெனிவா தொடர்பான நடவடிக்கை மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் என்பவற்றின் பின்னர் ராஜபக்ச அரசாங்கம் தமிழத் தேசியக் கூட்டமைப்பு மீது ஒரு வன்போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு தமக்கு புதிராக இருப்பதாக தெரிவித்தார்.
நாளைய சந்திப்பில் முதல்வர் மட்டும் கலந்து கொள்கிறாரா அல்லது வேறும் சிலரும் கலந்து கொள்கிறார்களா என்பது தெரியவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மஹிந்த ராஜபக்ச குடும்பத்துடன் மிக நெருக்கமானவர். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொள்வதற்கு ஓரிரு நாள் முன்னதாக, மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்சவை அவர் சந்தித்து பேசியிருந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த தொடர்புகள் ஊடாக, நாளை மட்டு முதல்வர் சந்திக்க வாய்ப்பிருப்பதாக தெரிய வருகிறது.
மட்டக்களப்பு முதல்வரிற்கும், மாநகர ஆணையாளருக்கும் இடையில் அண்மைக்காலமாக தீவிர பனிப்போர் இடம்பெற்று வருகிறது. ஆணையாளர் பிள்ளையான் தரப்பின் சார்பாக செயற்பட்டு, முதல்வரின் நடவடிக்கைகளிற்கு முட்டுக்கட்டையிடுவதாக, கூட்டமைப்பு வட்டாரங்களிற்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
பிரதமர் தரப்புடன் பேசி, ஆணையாளர் விவகாரத்தை சீர்செய்ய இந்த சந்திப்பு நடக்கலாமென கருதப்படுகிறது.