முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் மீட்கப்படும் எச்சங்கள், சிங்கள பௌத்தத்திற்குரியது, தமிழர்கள் அதை உரிமைகோர அனுமதிக்கப் கூடாது என்ற பிரச்சாரம் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் தீவிரம் பெற்றுள்ளது.
பௌத்த இனவெறியர்களும், சில தேரர்களும், ஊடகங்களும் இதில் முன்னிலை வகிக்கிறார்கள். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் தொல்லியல் சான்று தகவல்களை வெளியிடுபவர்களை இனவெறியர்கள் என்றும் அந்த பிரச்சாரங்களில் பகிரங்கமாக குறிப்பிடப்பட்டு வருகிறது.
இன்றைய ஞாயிறு சிங்கள இதழொன்றில், வடக்கு கிழக்கிலுள்ள சிங்கள பௌத்தர்களின் வரலாற்று தடங்களிற்கு தமிழ் பின்ணியை ஏற்படுத்தும் இனவாத முயற்சிக்கு, யாழ் பல்கலைகழகத்திலுள்ள சில இனவெறி பேராசிரியர்கள் தத்துவார்த்த பின்னணியை வழங்குகிறார்கள், ஒரு வரலாற்று பேராசிரியர் அதில் முன்னணி வகிக்கிறார் என பகிரங்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குருந்தனூர் ஆதிசிவன் ஐயனார் ஆலய பகுதி தமிழர்களினால் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் அழியும் நிலைமையில் இருந்த போது, தானே அதை அடையாளம் கண்டு பாதுகாக்க நடவடிக்கையெடுத்ததாக உரிமை கோரும் கலகமுவவை சேர்ந்த பௌத்த பிக்குவொருவர், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அங்கு பௌத்த வழிபாட்டிடத்திற்கான கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளார்.
அதற்காக நிதி திரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மன்னர் 4ஆம் உதயவின் காலத்து கல்வெட்டு ஒன்று அங்கு கண்டறியப்பட்டதாக முன்னதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது 10ஆம் நூற்றாண்டிற்குரிய கல்வெட்டு ஆகும்.
அண்மையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்ச்சியில் கண்டறியப்பட்ட எச்சம் தாரா லிங்கம் என சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
எனினும், தொல்லியல்துறையினர் அதை மறுக்கிறார்கள். 1, 2 ஆம் நூற்றாண்டுகளிற்குரிய பழங்கால ஸ்தூபியின் தூணே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
குருந்தனூர் ஒரு சிங்கள பௌத்த பின்னணியுடைய இடம் என கூறும் தரப்பினர், கடந்த சில நாட்களாக கூறும் தகவல்களின் தொகுப்பை கீழே தருகிறோம்.
அங்கு ஒரு வழிபாட்டிடம் இருந்ததாக கூறி, அதன் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை கிழக்கு திசையில் அகழ்வாராய்ச்சி முடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு அகழியில் அகழ்வாராய்ச்சிகளில் விகாரையின் பண்டைய தோற்றம் தொடர்பான பல தகவல்களை கண்டுபிடித்துள்ளன.
மூன்று அடுக்கு வழிபாட்டிட கட்டடக்கலை அங்கு அடையாளம் காணப்பட்டதாகவும், விகாரையின் மொத்த உயரம் தற்போது சுமார் 03 மீட்டர் மற்றும் 50 சென்டிமீட்டர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ருவன்வெலி சாயவும் 3 அடுக்கு அமைப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு அகழ்வாராய்ச்சியில் ஒரு பூ இருக்கை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பல துண்டுகளாக உடைந்துள்ளது.
வடக்கு திசை ஆராய்ச்சியின்படி, அங்குள்ள விகாரையின் முற்றத்திற்குரிய தகவல்கள் கிடைத்துள்ளன.
எண்கோண கல், விகாரை வழிபாட்டிடங்களுடன் தொடர்புடையது. ஆரம்பத்தில் மரத்தில் இது உருவாக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அது கல்லில் உருவாக்கப்பட்டது. இந்த எண்கோண கல் இந்திரகீல மற்றும் கஜஸ்தம்ப என்று பௌத்த இதிகாசங்களில் குறிப்பிடப்படுகிறது.
மகிந்தனின் வருகைக்கு பின்னர் குருந்த வழிபாட்டிடம் பற்றிய தகவல்கள் சிங்கள அதிகாசங்களில் உள்ளது. புராதன சிங்கள காவியமான குருந்த காவியம், குருந்தனூரில் இருந்தே எழுதப்பட்டது.
சிங்கள இதிகாசங்களில் குருந்த வாசியென நபர்கள் அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு சிங்களவர்கள் வாழ்ந்தது புலனாகிறது.
இரண்டாம் பராக்கிரமபாகு மன்னரால் (1236 – 1270) அழிக்கப்பட்ட கலிங்க மாகனின் கோட்டைகளில் ஒன்று இந்த வழிபாட்டிடத்திற்கு அருகில் அமைந்திருந்தது.
மாக வம்சத்தைச் சேர்ந்த சாவக சந்திரபானு இலங்கை மீது படையெடுத்து தனது முகாமை இங்கு நிறுவினார் என்று கூறப்படுகிறது.
குருந்தமலையின் தெற்கே தண்ணிமுறிப்பு குளம், வடக்கே குருந்தன்குளம் ஆகியன உள்ளன. இந்த இரண்டு குளங்களும் பண்டைக்காலத்திற்குரியவை என குறிப்பிடுகிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தை கையில் கொண்டுள்ள சிங்களவர்களும், அரசியல் உரிமை கோரி நிற்கும் தமிழர்களிற்குமிடையிலான வரலாற்று உரிமை கோரல் ஒன்றை, தற்போதைய கட்டமைப்புக்களால் நிறுவுவது சாத்தியமற்றது. அதற்கான திறந்த மனநிலையுடைய கட்டமைப்புக்கள் எதுவும் இல்லையென்பதே கசப்பான உண்மை.