-கருணாகரன்
“ஆட்சி மாற்றம் புதுமைகள் பலவற்றைச் செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஓராண்டுக்குள் எத்தனையோ நற்காரியங்கள் எல்லாம் நடந்து விட்டன. (NPP) அரசாங்கம் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல சிக்ஸர்களை அடித்தே தீரும் என்று ஒரு பக்கத்தில் மகிழ்ந்து பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
“இதெல்லாம் சும்மா வெறும் உல்லடாதான். அடிப்படையான மாற்றங்கள் என்று எதுவும் நடக்கவில்லை. பயங்கரவாதச் சட்டத்தை எடுக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை நடத்தவில்லை. அரச திணைக்களங்களில், ஆணைக்குழுக்களில், அமைச்சரவையில் இன விகிதாரமோ இன சமத்துவமோ பேணப்படவில்லை. சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினைகளில் சாதகமான உணர்நிலைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. பொருட்களில் விலை குறையவில்லை. ஊழலும் பணித்தாமதங்களும் நிர்வாக நடைமுறைகளும் மாற்றமடையவில்லை…” என்று இன்னொரு தரப்பினர் நெடும்பட்டியலை விரிக்கிறார்கள்.
நடப்பு அரசாங்கம் (NPP) சில மாற்றங்களைச் செய்துள்ளதுதான். ஆனால், அது மட்டுப்படுத்தப்பட்டதே. அடிப்படையான மாற்றங்களை நிகழ்த்தாத வரையில் எதுவும் மாற்றங்களாக இருக்கப்போவதில்லை.
இந்த நாடு 75 ஆண்டுகளுக்கு மேலாக இருண்ட யுகத்தையே உற்பத்தி செய்தது. சட்டங்கள், நீதி முறைமைகள், ஆட்சிக்கட்டமைப்புகள், நிர்வாக முறைமைகள் எல்லாம் இருண்ட யுகத்துக்கான பாதைகளாகவே அமைந்தன. இவ்வளவும் சில சிறிய உயர் குழாத்தினரின் தவறான உளச் சிக்கல்கள் காரணமாகவும் நலன்களுக்காகவுமே நடந்தன. அதாவது தமது சுய இருப்புக்கும் விருப்பக்குமான நாட்டையே பலியிட்டனர். அதற்கு மக்களின் ஒப்புதலை ஒவ்வொரு தேர்தலின்போதும் பெற்றுக் கொண்டனர். மக்களும் இந்தச் சூதினைப் புரிந்து கொள்ளாமலும் புரிந்தும் புரியாத மாதிரியும் தமது ஆதரவைக் கொடுத்து அங்கீகரித்தனர்., இந்தத் தறவான ஆட்சிப்போக்கினை ஆதரித்தனர். இதன் மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட – ஜனநாயக ஆட்சி என்ற தகுதியை சர்வதேச ரீதியாகவும் இந்தத் தவறானவர்கள் பெற்றுக் கொண்டனர். அப்படிப் பெற்றுக் கொண்ட தகுதியை – அதிகாரத்தை – வைத்துக்கொண்டு, தமக்கான அதிகாரத்தை – ஆட்சித் தகுதியை வழங்கிய மக்களுக்கே தாராளமாக அநீதியை இழைத்தனர்.
இவ்வாறிருக்கும் ஒரு நாட்டை வெறுமனே மேடைப்பேச்சுகளிலும் பாராளுமன்ற உரைகளிலும் ஊடகச் சந்திப்புகளிலும் சொல்லப்படும் வார்த்தைகளின் மூலம் மாற்றி அமைத்து விட முடியாது. அவை உண்மையான விருப்பங்களாக இருக்கலாம். இங்கெல்லாம் கொட்டித் தீர்க்கப்படும் அல்லது சொல்லப்படும் வார்த்தைகளை விட பொருத்தமான – அவசியமான நடைமுறைகளையே அரசாங்கம் உருவாக்க வேண்டும். அதுவே மாற்றத்துக்கான ஆட்சியாக இருக்கும்.
இதை விளக்குவதற்கு ஒரு எளிய – உண்மையான சம்பவத்தை உதாரணப்படுத்தலாம்.
கடந்த வாரம் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட தமிழ்ப்புத்தகங்களை இலங்கைச் சுங்கப்பகுதி தடுத்து வைத்துள்ளது. சொல்லப்பட்ட காரணம், “இந்தப் புத்தகங்களில் கொலைகளைப் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருக்கு. இதை அனுமதிக்க முடியாது. இதை நாங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்புவோம். அவர்கள் பரிசீலித்த பின்புதான் உங்களுக்கு முடிவு என்ன என்று சொல்ல முடியும்..” .
புத்தகங்களையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தார் அங்கிருந்த அதிகாரி. ஏதோ வெடிகுண்டுப் பார்ஷல் என்பது போல மெல்லிய பதட்டம் அவரிடம் ஏற்பட்டதைக் கண்டேன்.
இந்தப் பொன்னான வார்த்தைகளைக் கேட்க உண்மையில் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. முன்னிருந்த அதிகாரியைப் பார்த்துச் சிரித்தே விட்டேன். அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையில் தன்னை இழக்காரமாக எண்ணித்தான் சிரிக்கிறேனா? என்றொரு எண்ணம் ஓடியதாகப் பட்டது. முகத்தில் அசடு வழிந்தது.
அவரை மேலும் குழப்பாமல், “கொலைகள் நடந்தால் அதைப் பற்றி எழுதாமல், வேறு எதைத்தான் எழுதுவது? உங்களுக்கு ஒருவர் தேவையற்ற முறையில் அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுடைய வலியைப் பற்றி வெளியே சொல்வீர்களா இல்லையா? அதற்கான நீதிக்காக நீங்கள் பொலிஸிலோ நீதிமன்றிலோ முறையிடுவீர்களா இல்லையா? அதைப்போலத்தான் இங்கே கொலைகள் நடந்ததால், அதைப் பற்றி எழுதப்பட்டிருக்கு. அதற்கான ஆதரங்களோடுதான் அதெல்லாம் எழுதப்பட்டிருக்கு. அந்த ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகத்தை விரித்துப் பாருங்கள். அந்தக் கொலைகள் நடந்தபோது வந்திருந்த பத்திரிகைச் செய்திகளும் இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் புத்தகம் முழுவதையும் படித்துப் பாருங்கள்… அப்பொழுது உங்களுடைய இதயம் என்ன சொல்ல விரும்புகிறதோ அதைச் சொல்லுங்கள்… மற்றது, இது – இந்தக் கொலைகள் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பொழுது ஒரு புதிய ஆட்சி வந்திருக்கு. நாட்டில் மாற்றங்களும் நீதி வழங்கல்களும் நிகழ்த்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நீதிக்காக இந்தக் குரலை இங்கே முன்வைத்திருக்கிறார்கள். இதில் என்ன தவறிருக்கு?“ என்று கேட்டேன்.
அவருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. “ஆம், நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், எங்களால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அரச உத்தியோகத்தர்கள். அரசாங்கத்தின் உத்தரவையும் கட்டளையையும்தான் செய்ய முடியும். எங்களுக்கு உள்ள அறிவுறுத்தலின்படி இப்படியான புத்தகங்களோ, பொருட்களோ வந்தால், அதை நாங்கள் படைத்துறைக்குத்தான் பாரப்படுத்த வேண்டும். அவர்கள் (military of defence) தான் இதைப் பற்றி இறுதி முடிவைச்சொல்ல வேணும். இல்லையென்றால் என்மீதுதான் கேள்விகள் வரும். நான்தான் அதற்கான பதிலைச் சொல்ல வேணும். இதற்குத் தனியே முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. நீங்கள் சொல்வதைப்போல, ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், கட்டளைகள் – உத்தரவுகள் எதுவும் மாறவில்லையே! நாங்கள் என்ன செய்ய முடியும்..?“ என்று சொன்னார்.
தான் அப்பாவி. இதற்கு மேல் தன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல, ஒரு பரிதாபகரமான தோற்றத்தைக் காண்பித்தார்.
“அரசாங்கம், பல அறிவிப்புகளைச் செய்திருக்கு. படைகளை விலக்குவதாக. ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக. (பயங்கரவாதச் சட்டத்தைப் பற்றி அப்பொழுது எனக்குச் சட்டென நினைவு வந்தது) மாவீரர் துயிலுமில்லங்களில் நிலைகொண்டிருக்கும் படையினர் கூட விலக்கப்படுவார்கள்.. என்றெல்லாம். ஆனால், நீங்கள் இந்தச் சாதாரண புத்தகங்களையே தர மாட்டோம் என்று தடுத்து வைத்திருக்கிறீர்கள்… இது எவ்வளவு அநியாயம்? என்று அவரிடம் கேட்டேன்.
”ஐயா, நீங்கள் பேசுவது அரசியல். நாங்கள் இங்கே செய்வது நிர்வாகம். நான் அரசாங்கத்தின் உத்தரவைத்தான் செய்ய முடியும். என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு சிங்கள அதிகாரி. முன்பு இப்படி இங்கே (யாழ்ப்பாணத்தில்) வந்து என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்ய முடியாது. எனக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த அநீதிகள் எல்லாம் கவலையைத்தான் தருகின்றன. இந்த நூலகம் (யாழ்ப்பாண நூலகம் இருந்த திசையைச் சுட்டி) எரிக்கப்பட்டதும் இங்கே உள்ள மக்கள் கஸ்ரப்பட்டதும் எல்லாம் வேதனையே. ஆனால், நாங்கள் சமாதானமாக – சந்தோசமாக இருப்போம்… நீங்கள் இந்தப் படிவத்தில் கையெழுத்து இடுங்கள். நாங்கள் இந்தப் புத்தகங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு (MOD) அனுப்புகிறோம். அங்கிருந்து பதில் வந்ததும் உங்களுக்குத் தகவல் சொல்கிறோம்…“ என்றார்.
இப்பொழுது நான் அண்ணாந்து அந்தப் பணிமனையின் கூரையைப் பார்த்துச் சற்றுச் சத்தமாகவே சிரித்து விட்டேன். அதிகாரி சற்றுப் பயந்தது போலத் தெரிந்தது. வியப்புடன் என்னைப் பார்த்தார்.
ஆமாம், நாங்கள் சமாதானமாக, சந்தோசமாக இருப்பதற்கான சிறந்த ஆலோசனை….
“அப்படியென்றால் அரசாங்கத்தரப்பினரால் சொல்லப்படுகின்ற மாற்றங்கள் எதுவுமே நடக்கவில்லையா?..“ என்று கேட்டேன்.
“ப்ளீஸ்.. இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதீர்கள். அதுதான் நான் சொன்னேன், நான் ஒரு சாதாரண உத்தியோகத்தன் என்று. நான் எதையும் தீர்மானிக்க முடியாது. அரசியல்வாதிகள் அப்படித்தான் சொல்வார்கள். அவர்கள் அதையெல்லாம் எங்களுக்கு எழுத்தில் – உத்தரவாகத் தந்தால் நாங்கள் அதை உங்களுக்குச் சேவையாகச் செய்வோம்.. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது… ஏனென்றால், என் மீதான கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும். எந்தத் தலைவர்களும் அதைச் சொல்ல வர மாட்டார்கள்… “ என்று எழுந்து விட்டார்.
உதவியாளரை அழைத்து, அவ்வளவு புத்தகங்களுக்குமான ஒரு படிவத்தை நிரப்பி, என்னிடம் கையெழுத்தைப் பெறுமாறு பணித்தார். அவருடைய பதட்டத்தைக் கண்ட அந்தப் பணியாளர், இயந்திரம்போல மிக வேகமாக அதையெல்லாம் செய்து என்னிடம் ஒப்பத்துக்காகப் பத்திரத்தை நீட்டினார்.
நான் ஒரு புன்னகையுடன் அவரைப் பார்த்தேன். “அப்படியென்றால், எதுவுமே மாறவில்லை. யுத்த கால நிலவரம்தான் இப்போதும். அப்போதும் MOD தான். இப்போதும் MOD தான். அப்படித்தானே!” என்று அதிகாரியைப் பார்த்துக் கேட்டுக் கொண்டு, படிவத்தை வாங்கினேன்.
அவர் எதுவுமே சொல்லவில்லை. சிரிக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல் நெளிந்தார்.
பிரிக்கப்பட்ட பொதியில் புத்தகங்களை உள்ளிட்டு, மீளவும் பொதியாக்கி, To the MOD என்று எழுதினார் உதவிப் பணியாளர்.
“ஆட்கள் மாறியிருக்கிறார்களே தவிர, ஆட்சி மாறவில்லை“ என்றேன்.
‘அதேதான்‘ என்பது போலச் சிரித்தார் அதிகாரி. முகத்தில் ஒரு சிநேகபாவம் தோன்றியது. “உங்களுக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திருக்கிறேன்” என்றார்.
“நல்ல பதில் அல்ல. புத்தகங்கள்தான் கிடைக்க வேண்டும்” என்றேன்.
இலங்கையின் பாதுகாப்புத்துறையையும் ஆட்சி முறையையும் பற்றிப் பழம் தின்று விதையைப் போட்டவர்கள் அல்லவா நாங்கள்!
இந்தச் சூழலை மேலும் விளங்கிக் கொள்வதற்கு அரசியற் சூழலை அவதானித்துக் கருத்துரைப்பவர்களில் ஒருவரான சண்முகநாதன் புவி என்பவர் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கே முன்வைக்கலாம். ‘ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் மீது உங்கள் கைகளை வைத்துமே சத்தியம் செய்யும் போதே நீங்கள் தோற்றுவிட்டீர்கள். இரத்தம் தோய்ந்த இந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மாற்றுங்கள்…
நீங்கள் (NPP) எந்த அதிகாரத்தையும் இதுவரை வெற்றிகொள்ளவே இல்லை. யேசுநாதர் தன்னை அறைந்த சிலுவையை தூக்கி சுமந்தது போல உங்களை வேட்டையாடிய ஜே. ஆர். ஜெயவர்த்தவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை தூக்கி சுமக்கின்றீர்கள் என்பதே எளிமையான உண்மை.‘
ஆம், அதைச் சுமக்கும் வரையில் எந்தப் பாரச் சிலுவைகளும் இறக்கப்படப்போவதில்லை என்பதே உண்மை.



