மூன்று முகங்கள்: கவனத்திற்குரிய குறிப்புகள்

Date:

  • கருணாகரன்

யாழ்ப்பாணத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் மூன்று பேரைப் பற்றிப் பலரும் பலவிதமான நகைச்சுவைகளைச் சொல்லுகிறார்கள். அதற்குத் தோதாகத்தான் அந்தப் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். ஒருவர் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர். அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முந்திய சந்திரசேகர் வேறு. இப்பொதுள்ள சந்திரசேகர் வேறு. இப்பொழுது ஏராளம் நளினங்களும் பொருந்தாக்கூறுகளும் சந்திரசேகரிடம் ஒட்டிக் கொண்டுள்ளன. அல்லது அதையெல்லாம் இவ்வளவு காலமும் எங்கேயோ மறைத்து வைத்திருந்திருக்கிறார் சந்திரசேகர். இப்போது அவையெல்லாம் பாம்புக்குட்டிகளாகவும் ஜந்துகளாகவும் வெளியே தலையைக் காட்டுகின்றன.

அண்மைக்காலத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள், வெளியிடத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள், தேர்தல் மேடைகள் போன்றவற்றில் எல்லாம் சந்திரசேகரின் நாக்கும் நீள்கிறது. நளினமும் கூடுகிறது. ஆனால், இப்பொழுதுதான் சந்திரசேகர் மிக நிதானமாகவும் பொறுப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இப்போது அவர் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர். இரண்டு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர். ஆளும் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிதி. இவ்வளவு பொறுப்பான பதவி நிலைகளில் இருந்து கொண்டு ஒருவர் எழுந்தமானமாகப் பேசவோ நடந்து கொள்ளவோ கூடாது. மட்டுமல்ல, அப்படிச் செய்யவும் முடியாது. பந்தா காட்டுவதெல்லாம் வேறு. விமர்சனங்களையும் தாற்பரியங்களையும் சொல்வது வேறு.

சந்திரசேகர் எதிர்த்தரப்பினரின் மீது விமர்சனங்களைச் சொல்லக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எத்தகைய காட்டமான விமர்சனங்களையும் முன்வைக்கலாம். அதைச் சொல்வதற்கு நாகரீகம் உண்டு. பண்புண்டு. அதை மீறினால் அது அசிங்கம். அவ்வாறே எதைப்பற்றிய அபிப்பிராயங்களையும் தாராளமாகச் சந்திரசேகர் சொல்லலாம். அவற்றை நக்கலாகவோ கீழ்மைப்படுத்தியோ சொல்வது பொருத்தமானதல்ல. ஆளும் தரப்பில் அமைச்சராக இருக்கிறேன் என்பதற்காக எதையும் எப்படியும் திமிராகச் சொல்லலாம் என்றால், எதிர்காலத்தைக் குப்பை மேட்டில்தான் தேட வேண்டும். வரலாறு எத்தனையோ அதிகார சக்திகளைக் கண்டு புன்னகைத்திருக்கிறது.

சந்திரசேகரோடு நெருங்கிப் பழகுவோர், NPP மீது பற்றும் பாசமும் நம்பிக்கையும் வைத்திருப்போர், சந்திரசேகரின் நண்பர்கள் இவ்வளவு நாளும் இதைப்பற்றியெல்லாம் அவருக்குச் சொல்லாமல் இருப்பது தவறு. அப்படிச் சொல்லியிருந்தால் சந்திரசேகர் மக்கள் சிரிக்கின்ற இப்படியான சீரழிவு நிலைக்கு வந்திருக்க மாட்டார்.

இப்போதாவது தன்னைச் சுதாகரித்துக் கொண்டார் என்றால், கீழிறங்கியிருக்கும் மதிப்பையும் ஆதரவையும் கூட்டிக் கொள்ளலாம். காலம் ஒன்றும் தூரமாகச் செல்லவில்லை. இப்போதும் அவருக்குச் சந்தர்ப்பம் உண்டு.

இதேவேளை வேறு சிலவற்றையும் சந்திரசேகருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் சொல்ல வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழியையொட்டிய போராட்டத்திற்கும் நல்லூரில் திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வுக்கும் சந்திரசேகர் சென்றிருக்கிறார். இரண்டு இடங்களிலும் சிலர் முன்னின்று சந்திரசேகரைத் தடுத்திருக்கிறார்கள். இரண்டு சம்பவங்களிலும் தடுத்தவர்களின் நடவடிக்கைகளும் ஆதிக்க மனோநிலையும் தவறானவை. இவ்வாறான இடங்களுக்கு வருகை தரும் யாரையும் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. போராட்டம் செய்வதோ அஞ்சலி செலுத்துவதோ யாருடைய உடமையும் இல்லை. அது எல்லோருக்கும் உரியது. எனவே சந்திரசேகரைத் தடுத்தது தவறு. கண்டனத்துக்குரியது. முட்டாள்தனமானது.

இரண்டு இடங்களிலும் சந்திரசேகர் அரசியல் ஆதாயம் தேடிச் சென்றாரா இல்லையா என்பதல்லப் பிரச்சினை. அரசாங்கத்தின் முக்கியமான ஒரு பிரதிநிதி இந்த இடங்களுக்கு நேரில் சென்றிருக்கிறார். அது ஊன்றிக் கவனிக்கப்படவும் அதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும். ஏற்கனவே ஆட்சியிலிருந்த தரப்புகள் எல்லாம் இவ்வாறான விடயங்களில் எதிர்மாறாகவே, தடைகளை விதிப்பனவாகவே நடந்து கொண்டன. திலீபன் நினைவு நிகழ்வுகள் பல இடங்களில் தடுக்கப்பட்டன. அல்லது நெருக்கடி கொடுக்கப்பட்டன. அப்படித்தான் மனிதப் புதைகுழிகளை மூடி மறைப்பதற்கே ஏனைய ஆட்சியாளர்கள் மும்முரமாக இருந்தனர். இந்த ஆட்சியில் மட்டும்தான் இரண்டுக்கும் ஆதரவளிக்கப்படுகிறது.

என்றால் ஒரு தலைமேல் மாற்றம் நடந்திருக்கிறது என்றே அர்த்தமாகும். இங்கே NPP அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுகிறதா? அதற்கு அதிகப் பிரசங்கித்தனமாக நற்சான்றிதழ் கொடுக்கப்படுகிறதா? என்று யாரும் ஆவேசமாகக் கேட்கலாம். அல்லது இந்த இடங்களுக்குச் சந்திரசேகரன் நேர்மையான முறையில்தான் வந்தாரா? என்றும் கேள்வி எழுப்பக் கூடும்.

எதுவாக இருந்தாலும் மக்களுக்கு முன்பாக – பகிரங்கமாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் வந்து கலந்து கொள்கிறார் என்றால், இந்த விடயங்களை அரசாங்கம் அனுமதிக்கிறது. ஏற்றுக் கொள்கிறது என்றே அர்த்தமாகும். அந்த வகையில் இது முதற்கட்ட வெற்றியே. மட்டுமல்ல, சந்திரசேகரைக் கேள்விக்குட்படுத்த வேண்டியது NPP யே தவிர, நாங்கள் அல்ல. NPP யின் அனுசரணையோடுதான் சந்திரசேகரின் விஜயம் நடந்தது என்றால், அதையிட்டு எதிர்த்தரப்புகள் (சிங்களத் தரப்புகள்) கேள்விகளை எழுப்பும். அதையெல்லாம் புரிந்து கொண்டே NPP யும் சந்திரசேகரும் இவ்வாறான இடங்களுக்கு வருகை தரும் தீர்மானத்தை எடுத்திருப்பதாகவே தெரிகிறது. அதை உரியமுறையில் கையாண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் போராட்டத்துக்கு வலுவையும் சேர்த்துக் கொள்ள முடியாமல் உள்ளது தமிழ்ச் சமூகம். இங்கே தமிழ்ச் சமூகம் என்று ஏன் பொதுவாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோரைக் குறித்து விழிக்கப்படுகிறது என்றால், இதுவரையில் சமூகமாக இத்தகைய செயல்களுக்கான எதிர்வினைகள் ஆற்றப்பட்டதில்லை. அங்கங்கே சமூக வலைத்தளங்களில் உதிரிகளாக சில அபிப்பிராயங்கள் வைக்கப்படுகின்றனவே தவிர, உருப்படியாக எவரும் இதைக்குறித்து அறிக்கைகளையிடவோ பேசவோ இல்லை.

இதேவேளை இந்த விடயங்களில் எந்தப் பக்கத்தில் பார்த்தாலும் தமிழ் மக்களுக்குச் சாதகமான விதமாகவே நிலைமை இருந்தது. அதை மூடர்கள் கெடுத்து விட்டார்கள். புலிகளாக இருப்பது வேறு. புலிகளாகப் பாவனை செய்வது வேறு. இங்கே நடந்திருப்பது புலிகளைப்போலப் பாவனை (நடிப்பு) செய்திருப்பதே. இதற்குப் பின்னணியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அணிதான் இருந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால், இதொன்றும் புதிதல்ல. இதைக்குறித்து மக்கள் சிந்தித்தால் – அவதானமாக இருந்தால் சரி.

இதேவேளை சந்திரசேகர் பார்க்க வேண்டிய பல பணிகள் அவசிய – அவசர நிலையில் உண்டு. அவற்றலி அவர் கவனத்தைச் செலுத்தலாம். அவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நிவாரணத்தை அளிக்கலாம். அதுதான் சந்திரசேகரின் முதற் தெரிவுகளாக இருக்க வேண்டும். அதைச் செய்வதை விடுத்து, இப்படி புதைகுழிகளைத் தேடியும் நினைவிடங்களை நாடியும் செல்ல வேண்டியதில்லை. கால நேரம் கனிந்து வரும்போது மிகச் சாதாரணமாகச் சென்று குறித்த இடங்களைப் பார்வையிடலாம். யாரும் குறை சொல்லப்போவதுமில்லை. ஆனால், இந்த (NPP) அரசாங்கம் தமிழ்ச் சமூகத்தின் உணர்வோடு நெருங்கிச் செயற்பட விரும்புகிறது. தமிழ்மக்களுடைய நியாயமான போராட்டங்களோடு நிற்கிறது என்பதைச் சந்திரசேகரனோ அரசாங்கமோ வெளிப்படுத்த விரும்பினால், அதைச் செயற்பாட்டில் காட்டுவதே பொருத்தமானது. படைமுகாம்கள் பல விலக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியை அகழ்வதற்கு அனுமதித்து, அதற்கான நிதி அளிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்துவதற்கும் நினைவு கூருவதற்கும் ஏற்படுத்தப்பட்டிருந்த இடைஞ்சல்கள் நீக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த வீதித்தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இவையெல்லாம் பாராட்டுக்குரியவை.

இதேவேளை 10 ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் அரசியல் பொறுப்பில் உள்ளார் அமைச்சர் சந்திரசேகர். இப்பொழுது யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராகவும் உள்ளார். இருந்தாலும் யாழ்ப்பாணத்தையோ தமிழ்ச் சூழலையே சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளார் என்றே தோன்றுகிறது. யாழ்ப்பாணத்தைப் புரிந்து கொண்டிருந்தால் அதற்கு ஏற்றமாதிரிப் புத்திசாதுரியமாக நடந்து கொண்டிருப்பார். சிரிப்பதற்கு இடமளிக்க மாட்டார்.

இதைப் பற்றியெல்லாம் சந்திரசேகர் எந்தளவுக்கு சிரத்தை எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. எடுத்துக் கொள்வார் என்றால் முன்னேற்றமுண்டு.

அடுத்தவர், அதே கட்சியில் (NPP) யில் உள்ள இளங்குமரன். பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நாள் தொடக்கம் இளங்குமரன் ஊடகங்களிலும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் மக்களின் முன்பாகவும் தெரிவிக்கும் கருத்துகள் பல கோமாளித்தனமானவை. அதற்காக ஏனைய கட்சிகளில் உள்ளவர்கள் தெரிவிப்பதெல்லாம் புனிதக் கருத்துகளா? அவை ஏற்புடையவையா? என்று கேட்டால், அவற்றிலும் ஏராளம் சிரிக்கத்தக்க விடயங்கள் உள்ளன என்றே கூற வேண்டும். ஆனாலும் அதையெல்லாம் மிஞ்சியதாகவே இளங்குமரனின் கருத்துகள் உள்ளன. இளங்குமரன் வாயைத் திறக்காமல் விட்டாலே போதும் என்று (NPP) ஜே.வி.பியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கவலையோடு சொன்னார். சாண் ஏற முழம் சறுக்கும் விதமாக இளங்குமரன் நடந்து கொண்டிருக்கிறார் என்று வேறு சொன்னார் அவர்.

மூன்றாவது ஆள், சிரிப்புக் காட்டுவதற்கென்றே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். எப்போது எதைப் பேசுவார்? என்று யாராலுமே மதிப்பிட முடியாது. இந்தப் பக்கம் நிற்கிறாரா? அந்தப் பக்கம் நிற்கிறாரா என்பதையும் கண்டு பிடிக்கேலாது. காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு. இரவில் ஒரு பேச்சு என்ற மாதிரி அதிரடியாக எதையோ சொல்லித் தன்மீது கவனத்தைக் குவிப்பதே அவருடைய கரிசனை. இப்படியெல்லாம் நடந்து கொள்வது யாரென்று சொல்வதற்கிடையிலேயே உங்களுக்கு அவர் யார் என்பது புரிந்திருக்கும். இருந்தாலும் அவரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதுதான் அருச்சுனா.

இந்த மூவரிடமும் ஒரு பொதுக் குணவியல்பைக் காணலாம். தங்களை நோக்கிய ஒரு கவனக் குவிப்பை உண்டாக்குவதே இவர்களுடைய நோக்கமாகவும் செயற்பாடாகவும் உள்ளது. மூன்று பேருக்கும் விடயங்கள் தெரியாது என்றில்லை. அதற்கப்பால் தமது செயற்பாடுகளை அவர்கள் தெரிந்து கொண்டே செய்கிறார்கள். இது ஒரு வகையான நோய். இதைச் சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களோடு வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அது சூழற்கேடு. சூழற்கேடு எதையும் எந்தச் சமூகமும் அனுமதிக்க்க் கூடாது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு...

CTC மீதான விமர்சனங்கள்- சிறு பதில்

“CTC புலிகளின் முன்னணி அமைப்பு” CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய...

சமூக ஊடகங்களில் பரவும் அதிர்ச்சிக் காணொளி: 7 இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் தாக்குதல் தொடர்பாக ஏழு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்