உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார்.
விபின்-நிக்கி திருமணத்தின்போது பெண் வீட்டார் சொகுசு கார், பல சவரன் நகை உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இருப்பினும், அது போதாது என கூறி ரூ.36 லட்சம் பணம் கேட்டு நிக்கியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்த பின்னணியில், நிக்கி இன்ஸ்டகிராமில் வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். இதற்கு கணவர், மாமியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிக்கியின் சகோதரியும் அதே குடும்பத்தில்தான் திருமணம் செய்துள்ளார். தனது சகோதரியுடன் இணைந்து அழகு நிலையம் ஒன்றை திறக்க நிக்கி திட்டமிட்டார். இதற்கு கணவர், மாமியாரின் அனுமதி கிடைக்கவில்லை. தமது குடும்பத்தில் பெண்கள் இன்ஸ்டா ரீல் பதிவிடுவது, வேலை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக கணவரும், மாமியாரும் கூறியுள்ளார்.
அழகுநிலையம் திறப்பது பற்றி மாமியாரிடம் நிக்கி பேசியதால், கோபமடைந்த கணவர், தனது தாயாருடன் சேர்ந்து நிக்கியை தீ வைத்து கொன்றுள்ளார்.
விபின் தனது தாயுடன் சேர்ந்து கொண்டு நிக்கியை அடித்து துன்புறுத்தியதுடன் அவர் மீது திரவம் ஊற்றி லைட்டரால் தீ வைத்து எரித்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் அவரது 6 வயது மகன் கண் முன்னே நடந்துள்ளது.
நிக்கி தாக்கப்பட்டு தரையில் உதவியற்று உட்கார்ந்திருப்பதும், பின்னர் திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீட்டிலிருந்த நிக்கியின் சகோதரி இதனை வீடியோ எடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுவன் கூறுகையில், “எனது தந்தை, தாத்தா பாட்டியுடன் சேர்ந்து எனது அம்மாவை அடித்து துன்புறுத்தினர். பின்னர் ஏதோ திரவம் ஒன்றை அம்மா மீது ஊற்றி லைட்டரால் தீ வைத்தனர்’’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
நிக்கியின் இறப்புக்கு காரணமான விபின் உடனடியாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில், நேற்று போலீஸின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த விபினை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவரது காலில் குண்டடிபட்டது.
இதையடுத்து, மருத்துவமனையில் விபின் சேர்க்கப்பட் டுள்ளார். மருத்துவமனை வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விபின் குடும்பத்துக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது என போலீஸார் தெரிவித்தனர்.
நிக்கி அடிக்கடி கணவனால் தாக்கப்படுவதும், பின்னர் பிறந்த வீட்டுக்கு செல்வதும், கணவர் தரப்பு சமரசம் செய்து அழைத்து செல்வதும் வழக்கமான நிகழ்வாக இருந்துள்ளது.




