கடந்த உள்ளூராட்சி தேர்தலின் முன்னதாக உருவாகிய தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்குமிடையில் உருவாகிவரும் பிளவு ஆழமடைந்து வருவதாக அறிய முடிகிறது.
தமிழ் தேசிய பேரவையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முன்னதாக கொள்கையளவில் இணக்கம் காண நடத்திய பேச்சுக்களில், 13வது திருத்தம் சிக்கலான விவகாரமாக இருந்தது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளும் இந்திய அரசு என்ன சொன்னாலும் மறு மூச்சும் இல்லாமல் செய்யும் தரப்புக்கள். பதிலுக்கு மூச்சுக்கூட விடமாட்டார்கள்.
13வது திருத்தத்தை மந்திரம் போல திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்கும் தரப்பு அது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13வது திருத்தத்தை முழுமையாக நிராகரிக்கும் தரப்பு. இரு தரப்பும் கொள்கையளவில் இணங்கிய போது, 13வது திருத்தத்தை இப்போதைக்கு பெரிதுபடுத்தாமல் இருப்பது என்ற எழுதப்படாத உடன்படிக்கையின் அடிப்படையில், “13வது திருத்தத்தை இறுதியான தீர்வாக கருதவில்லை“ என உடன்படிக்கையில் குறிப்பிட்டு, கையொப்பமிட்டனர்.
எதிர்எதிர் நிலைப்பாடுகளையுடைய இரண்டு தரப்பும் கூட்டணி வைத்த போதே, கூட்டணியின் ஆயுள்காலம் பற்றிய சந்தேகம் எழுந்திருந்தது. எனினும், இரண்டு தரப்புமே ஏதாவதொரு கூட்டணி வைத்தாலே தேர்தல் அரசியல் போட்டியில் நீடித்திருக்கலாமென்ற யதார்த்தத்தை புரிந்தால்- கூட்டணி சிறிதுகாலம் நீடிக்கலாமென கருதப்பட்டது.
எனினும், உள்ளூராட்சி தேர்தல் முடிந்த கையோடு, இப்போது கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது.
இதற்கு காரணமாக அமைந்துள்ளவர்- சுரேஷ் பிரேமச்சந்திரன்.
சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஏற்பாட்டில் அண்மையில் யாழில் நடந்த 13வது திருத்தம் பற்றிய கலந்துரையாடல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்த கலந்துரையாடலை நடத்த வேண்டாமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிடம் நேரடியாகவே கேட்டிருந்தது. எனினும், சுரேஷ் தரப்பு விடாப்பிடியாக கூட்டத்தை நடத்தியுள்ளது.
இந்த கூட்டம் நடப்பதற்கு முன்னர் இரு தரப்பும் சந்தித்து பேச வேண்டுமென்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டுப்பார்த்தது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் அதையும் செய்யவில்லை.
தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிகளுக்கிடையில் கூட்டணி இறுதி உடன்பாடு எட்டப்பட்ட சமயத்தில், சுரேஷ் பிரேமச்சந்திரன் நடந்து கொண்ட விதம் பற்றி அப்போதே செய்தி வெளியிட்டிருந்தோம். 13வது திருத்தத்தை முன்வைத்து நடந்த பேச்சின் போது- இரு தரப்பும் கூட்டணி வைக்க முடியாது என்பதை போல- வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக- சுரேஷ் பேசிக்கொண்டிருந்தது அங்கிருந்த அனைவரையும் அசூசைக்குள்ளாக்கிக் கொண்டிருந்துள்ளது.
அந்த பேச்சில் கலந்து கொண்டிருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு கட்சியின் இரண்டாம் நிலை தலைவர் ஒருவர்தான் குறுக்கிட்டு, “13வது திருத்தத்தை இறுதி தீர்வாக கொள்ளவில்லையென்ற வாசகத்தை உடன்படிக்கையில் சேர்க்கலாம்“ என்ற யோசனையை சொன்னார். அது நல்ல யோசனையென கஜேந்திரகுமாரும் ஆமோதித்தார். அதுகூட சுரேஷூக்கு கோபத்தை ஏற்படுத்தி- “(குறிப்பிட்ட இரண்டாம்நிலை தலைவரின் பெயரை விளித்து) நாங்கள் இஞ்ச கதைச்சுக்கொண்டிருக்கிறோம் அல்லவா“ என்ற தொனிப்பட கோபப்பட்டிருந்தார்.
குறிப்பிட்ட இரண்டாம் நிலை தலைவரின் தலையீடு இல்லாவிட்டால்- இரு தரப்பும் அன்று கூட்டணி வைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த கூட்டணி அமைந்ததால்தான் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் நிறுத்திய 3 உள்ளூராட்சி வேட்பாளர்கள் வெற்றியடைந்தார்கள். வன்னியிலும் 2,3 பேர் வெற்றியடைந்தார்கள்.
உள்ளூராட்சி தேர்தல் முடிந்த கையோடு, ஈ.பி.ஆர்.எல.எவ் 13வது திருத்தம் பற்றிய கலந்துரையாடலை நடத்தியதே, கூட்டணியை சிதைக்க வேண்டுமென்ற உள்நோக்கத்துடனா என்ற சந்தேகமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. 13வது திருத்தம் பற்றிய ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டத்தில் பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்களுக்கு உடன்பாடு இல்லை. ரெலோ முழுமையாக இந்த கூட்டத்தை தவிர்த்துக் கொண்டது. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டாலும், பெரும்பாலான பிரமுகர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நடவடிக்கையில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசிய பேரவையுடன் விரைவில் சந்திப்பு நடக்கலாமென எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கு முன்னதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டத்தை கூட்டி, ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
13வது திருத்தம் பற்றிய ஈ.பி.ஆர்.எல்.எவ் நடத்திய கலந்துரையாடலில் 50 பேருக்குட்பட்டவர்களே கலந்து கொண்டனர். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்காரர்கள். மீதிப்பேர் பங்காளிக்கட்சிக்காரர்கள் மற்றும் அவர்கள் சார்புடையவர்கள். இப்படியான கூட்டங்களால் என்ன சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என ஈ.பி.ஆர்.எல்.எவ் நினைக்கிறது என தெரியவில்லை. மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இப்படியொரு கூட்டம் வைக்கப்படுகிறதென ஈ.பி.ஆர்.எல்.எவ் காரர்கள் சொன்னாலும்- இப்படியொரு கூட்டம் நடந்த விடயமே அரசுக்கு தெரிந்திருக்காது. உள்ளூர் மக்களுக்கும் தெரிந்திருக்காது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி இப்பொழுது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது. வடக்கில் தனித்து போட்டியிட்டு, ஒரு உள்ளூராட்சிசபையில் எதிர்க்கட்சியாக வரக்கூடிய நிலைமையில் கூட அந்த கட்சி இல்லை. அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயம் வேறாக இருக்கையில்- 13வது திருத்தம் பற்றி கூட்டம் நடத்துகிறார்கள் என்றால்- அவர்களின் நோக்கம் சிக்கலானது என பங்காளிகளே சந்தேகிப்பதில் தவறில்லையல்லவா.
13வது திருத்தம் பற்றி யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் நடத்தியுள்ள கூட்டத்தினால் இப்பொழுது 2 விடயங்கள் மாத்திரம் நிகழ்ந்துள்ளது. முதலாவது- தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல்களின் அளவு அடுத்தடுத்த வாரங்களுக்குள் நடக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பங்காளிகளுக்கிடையிலும், தமிழ் தேசிய பேரவையுடனுமான கூட்டங்களில் தெரிந்து விடும்.



