திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள முஸ்லீம் நகரை சேர்ந்த கஜேந்திரன் – சவுந்தரி தம்பதியின் மூத்த மகள் லோகேஸ்வரி (24). பி.ஏ (பொருளாதாரம்) முடித்த இவருக்கும், பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பன்னீர் (37) என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 27-ம் தேதி காட்டாவூர் கிராமத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு முன்னதாக லோகேஸ்வரி குடும்பத்தினரிடம், பன்னீர் குடும்பத்தினர், 10 பவுன் வரதட்சணை கேட்டுள்ளனர். அப்போது, லோகேஸ்வரி குடும்பத்தினர் 5 பவுன் தருவதாக உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து, திருமணத்தின்போது, லோகேஸ்வரி குடும்பத்தினர் 4 பவுன் நகை வரதட்சணையாகவும், சீர் வரிசை பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சீதனமாகவும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர், வரதட்சணையில் பாக்கியுள்ள ஒரு பவுன் நகையை பெற்றோரிடம் வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சூழலில், மறுவீட்டுக்காக நேற்று முன் தினம் பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த லோகேஸ்வரி, கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, தகவலறிந்த பொன்னேரி போலீஸார், லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, லோகேஸ்வரியின் பெற்றோர், ஒரு பவுன் நகைக்காக கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் லோகேஸ்வரி தற்கொலை நடந்துள்ளதாக பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
லோகேஸ்வரியின் கணவர் பன்னீர், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய போலீஸார் பன்னீர், மாமியார் பூங்கோதையை நேற்று கைது செய்தனர். தலைமறைவான லோகேஸ்வரியின் மாமனார் ஏழுமலை, நாத்தனார் நதியா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.