♦கருணாகரன்
தமிழரசுக் கட்சிக்குள் நடக்கின்ற உள்முரண்பாடுகளும் உட்கட்சிப் பிரச்சினைகளும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. கட்சிக் கூட்டங்களின்போது நடக்கின்ற அடி, தடி, சண்டைகள், கூச்சல், குழப்பங்கள் வழமையாகி விட்டன. ஒரு கூட்டத்தைக் கூட அமைதியாக நடக்க முடியாது என்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.
இதைச் சரியாகக் கையாள முடியாத நிலையில் நீதிமன்றம் வரை சென்றுள்ளது கட்சி. போதாக்குறைக்கு மாவை சேனாதிராஜாவின் மரணச் சடங்கு தொடக்கம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுவரும் மனித எலும்புக் கூடுகள் தொடர்பாக நடந்த ‘அணையா விளக்குப் போராட்டம்‘ வரையில் தமிழரசுக் கட்சியின் ஆட்கள் சந்தி சிரிக்கும்படியாக நடந்து கொள்கிறார்கள்.
இப்படியான சூழலில் இவர்கள் பயன்படுத்துகின்ற ஒரே ஆயுதம் துரோகி – தியாகி என்ற கறுப்பு வெள்ளை பிரிகோட்டு அரசியல்தான். அதாவது ஜனநாயக அடிப்படைகளுக்கு எதிரான அரசியல். இதில் ஒரு தரப்புத்தான் கூடுதலாகப் பிரச்சினையை உருவாக்குகிறது. ஜனநாயக விழுமியங்களை மறுக்கும் அந்தத் தரப்புத் தன்னைத் தியாகிகளாக – புனிதர்களாக – அடையாளப்படுத்த முற்படுகிறது.
அதற்காக மறுதரப்பைத் துரோகியாகக் காட்டிக் கொள்கிறது. தியாகிகளாகவும் புனிதர்களாகவும் தம்மைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் தரப்பு, ஏறக்குறைய அடாவடியாக நடந்து கொள்கிறது. அதற்காக மிரட்டல் பாணியில் மெல்லிய அளவில் வன்முறையையும் பயன்படுத்த முயற்சிக்கிறது. அதுதான் மாவையின் மரண வீட்டில் நடந்ததும் செம்மணி – அணையா விளக்குப் போராட்டத்தின்போது நடந்ததுமாகும்.
இந்தப் போக்கிற்கு கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள சிறிதரன், குகதாசன், சிவமோகன் ஊக்கிகளாக – பின்னணியில் இருந்துள்ளனர். இது தொடர்பாகக் கட்சி ஏதாவது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்டால், இந்தக் குழப்பக்காரர்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை, என்ற மாதிரிக் காட்டித் தப்பிக் கொள்கிறார்கள். அதேவேளை அதே குழப்பக்காரர்களையே தம்முடைய அரசியல் வலுவாக்கிகளாகப் பக்கத்தில் வைத்திருக்கின்றனர்.
இதில் இப்பொழுது சிவமோகன் சற்றுப்பின் வாங்கியிருக்கிறார். தமிழரசுக் கட்சியில் தன்னுடைய செல்வாக்கை இதற்கு மேல் இப்போதைக்கு உயர்த்திக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொண்டதால், சிவமோகன் அடக்கி வாசிக்கிறார். (வவுனியாவில் கட்சியின் கூட்டங்களைக் குழப்ப முற்பட்டதோடு, கட்சியின் தலைமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் வரை சென்றவர் சிவமோகன்). குகதாசனின் எல்லை மட்டுப்படுத்தப்பட்டது. அதனால் அவர் திருகோணமலையுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார். உச்சத்தில் நின்று ஆடுவது சிறிதரனின் தரப்பினர் மட்டுமே.
அந்தக் கும்பல் முன்பு கிளிநொச்சியில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த ருசியோடு இப்பொழுது யாழ்ப்பாணத்திற்கும் தன்னை விரிவாக்க முயற்சிக்கிறது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழரசுக் கட்சி, புளொட் போன்றவையெல்லாம் இணைந்திருந்தபோதே, கிளிநொச்சியில் அவை செயற்படுவதற்கான வெளியை சிறிதரன் அளிக்கவில்லை. சிறிதரனைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றாலும் சரி, தமிழரசுக் கட்சி என்றாலும் சரி, தன்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதே அவருடைய நிலைப்பாடு.
இதை உடைப்பதற்கு ரெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் தங்களுக்கு ஆதரவான தரப்பினரின் ஊடாகக் கொஞ்சம் முயற்சித்துப் பார்த்தன. இதற்காக சுரேஸ் பிரேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் கிளிநொச்சியில் நேரடியாகக் களத்தில் இறங்கிக் கொஞ்சக் காலம் செயற்பட்டனர். அதற்கான பிரதிநிகளையும் நியமித்திருந்தனர்.
இவர்களை எதிர்கொள்வதற்காக (தடுப்பதற்காக) சிறிதரனும் அவருடைய அணியினரும் பயன்படுத்திக் கொண்ட ஆயுதம், ‘இது (கிளிநொச்சி) விடுதலைப்புலிகளின் கோட்டை. இதற்குள் தமிழ்த்தேசியத்துக்கு எதிரான ஆட்களுக்கு இடமில்லை. கூட்டமைப்புக்குள் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்றவை இருந்தாலும் அவர்களுடைய கடந்த காலம் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானது. எனவே அவர்களுக்கெல்லாம் இங்கே இடமில்லை… தாங்கள் மட்டுமே தமிழ்த்தேசியத்தின் உண்மையான சக்திகள். தாங்கள் மட்டுமே விடுதலைப்புலிகளின் தொடர்ச்சி…‘ என்பதாக இருந்தது.
மேலும், ‘கிளிநொச்சியில்தான் புலிகளின் தமிழ்த் தேசிய அரசியல் அடையாளம் துலக்கமாக இருந்தது. அதாவது தமிழ்த்தேசியத்தின் உச்ச நிகழ்ச்சிகள் அனைத்தும் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் உட்பட) கிளிநொச்சியில்தான் நடந்தேறின. உலகம் கிளிநொச்சியையே தமிழரின் அரசியல் மையமாகப் பார்த்தது. அப்படியான கிளிநொச்சியை மாற்றாளர்களிடம் கையளிக்க முடியாது‘ என்றெல்லாம் கதையளந்தார்கள்.
இதை வலுப்படுத்திக் கொள்வதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களை மதிப்பளித்தல், போரிலே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மீது கரிசனை காட்டுதல் தொடக்கம் விடுதலைப்புலிகள் பின்பற்றிய கரும்புலிகள் நாள், திலீபனை நினைவு கூருதல், பூபதியை நினைவு கொள்ளல், மாவீரர் நாளைக் கொண்டாடுதல் போன்றவற்றையெல்லாம் அதே சாயலோடு அனுஸ்டித்தனர்.
இன்னொரு பக்கமாக, இதற்குச் சவாலை உருவாக்கும் விதமாக கஜேந்திரன்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை கிளிநொச்சியில் பலப்படுத்துவதற்கு முயற்சித்தனர். அதற்காக கிளிநொச்சி நகரில் பணிமனையைத் திறந்ததோடு, காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம் தொடக்கம் விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான தரப்பு தாமே என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.
இதற்கான கட்டமைப்பை உருவாக்கி, அதற்குரிய ஆட்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், அப்படி நியமிக்கப்பட்டவர்களும் சிறிதரன் அணியை மிஞ்சி நிற்கக் கூடிய ஆளுமையோடு செயற்படவில்லை. ‘முகத்தை முறிக்க முடியாது‘ என்ற மாதிரி சிறிதரன் கும்பலுடன் சமரசம் செய்தும் ஒத்துப்போயும் அடங்கி நின்றும் தம்மைச் சுருக்கிக் கொண்டனர். இதனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கிளிநொச்சியில் வலுப்பெற முடியவில்லை.
ஆக, விடுதலைப் புலிகளின் பிரதிகளாகத் தாமே செயற்படுகின்றோம் என்ற ஒரு மாயத் தோற்றத்தை சிறிதரனின் தரப்பினர் மக்களிடையே வெற்றிகரமாக உருவாக்கியது. மறுவளமாக ‘தமக்கு அப்பால் உள்ள சக்திகள் அனைத்தும் போலிகள், தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவை, துரோகத்தனமானவை‘ என அடையாளப்படுத்தியது. இந்தப் போக்கை கிளிநொச்சியில் நீங்கள் இப்போதும் பார்க்கலாம்.
போரின் பாதிப்பை அதிகமாகச் சந்தித்த மக்கள் என்ற வகையிலும் விடுதலைப்புலிகளுடன் நீண்டகால நெருக்கத்தைக் கொண்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் கிளிநொச்சி மக்களிற் பெரும்பாலானோர், இந்த உணர்ச்சிகரமான அரசியற் பேச்சுகளில் கவரப்பட்டனர்.
குறிப்பாக கிளிநொச்சியின் இளைய தலைமுறையினருக்கு (1990 களின் பின்னரானவர்களுக்கு) வெளிச்சூழலைப் பற்றியோ, கடந்த கால வரலாற்றைப் பற்றியோ, பிற சக்திகளின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றியோ தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கவில்லை. அவர்கள் நேரில் பார்த்ததும் அறிந்ததும் விடுதலைப்புலிகளைப் பற்றியவைகளையே. என்பதால் புலிகளின் மீதான அபிமானத்தைத் தவிர்த்து, அவர்கள் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கத் தயாரில்லை.
இது கிளிநொச்சிக்கு மட்டுமல்ல, முல்லைத்தீவுக்கும் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நகருக்கு வெளியேயான பரப்புக்கும் பொருந்தும். மட்டுமல்ல, அரசியலின் நெளிவு, சுழிவுகள், அதனுடைய அடிப்படைகள், புறச் சூழல், வெளியுலகப் போக்கு எதைப்பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் இந்தத் தரப்பிடம் (தலைமுறையிடம்) இன்னமும் வளர்த்தெடுக்கப்படவில்லை.
ஆக, யார் விடுதலைப்புலிகளை ஆராதிக்கிறார்களோ, அவர்களைக் கேள்வியின்றி ஏற்றுக் கொள்வதும் ஆதரிப்பதுமே நிலவரமாக உள்ளது. இதைத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டார் சிறிதரன். புலிகளை ஆதரிக்கும் தரப்பின் பேராதரவு தனக்கே உண்டென்று காட்டத் தொடங்கினார். இது புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் அபிமானிகளையும் ஆதரவாளர்களையும் சிறிதரனின் பக்கமாகத் திருப்பியது. புலம்பெயர் நாடுகளுக்குப் பறந்து கொண்டிருந்தார் சிறிதரன். அவர்களுடைய நிதிவளம் சிறிதரனை மேலும் வலுப்படுத்தியது. விளைவாக ஏறக்குறைய ஒரு முடிசூடா மன்னன் போல தமிழ்த்தேசியவாத அரசியலில் எழுச்சியடைந்தார். இதுவே தமிழரசுக் கட்சிக்குள்ளும் தலைமையைக் கைப்பற்றிக் கூடிய நிலையைச் சிறிதரனுக்கு உருவாக்கியது.
கிளிநொச்சியைத் தன்னுடைய கோட்டை என்பதாகப் பரப்புரை செய்தார். அந்தக் கோட்டைக்குள் தன்னுடைய அனுமதியின்றி எதுவும் நடக்க முடியாது. யாரும் செல்வாக்குச் செலுத்த இயலாது என்பதோடு ‘நாட்டாமை‘ என்றும் ‘ஜமீன்‘ என்றும் தன்னைச் சொல்லக் கூடியமாதிரியும் நடந்து கொண்டார்.
இதற்குத் தோதாக அவருடன் ஒரு சூதான அணி (கும்பல்) சேர்ந்து கிளிநொச்சியிலும் கிளிநொச்சிக்கு வெளியிலும் உருவாகியது. இவர்கள் தீவிரத் தேசியவாதத்தைக் கையில் எடுத்துள்ளனர். தமது அதிகாரத்துக்குட்பட்ட பிரதேச சபைகளின் நூலகங்களில் தமக்கு உடன்பாடற்ற புத்தகங்கள், பத்திரிகைகளைக் கூட அனுமதிக்க முடியாது என்று தடுக்கும் அளவுக்கு இந்தக் கும்பலுடைய தீவிரம் (ஜனநாயகப் புரிதல்) உள்ளது.
தாம் கையில் எடுத்துள்ள இந்தத் தீவிர (முட்டாள்தனமான) அரசியல் வெற்றியைத் தருமா? அதனுடைய நடைமுறைச் சாத்தியங்கள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. அதைப்பற்றிய கவலைகளும் இல்லை. நாம் வலியுறுத்துகின்ற அரசியலுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கவும் தயாரில்லை. அதாவது கட்டமைப்புகளை உருவாக்கி, மக்களின் நலனுக்கும் மேம்பாட்டுக்குமாகப் பாடுபடுவதற்கும் அரசியல் ரீதியாக அரசுடன் மோதுவதற்கும் தயாரில்லை. ஆனால், தம்மைப் புலிகளைப் போலப் பாவனை செய்கின்றனர் (They act like tigers).
ஆனால், இந்த தரப்பும் சரி, சிறிதரனும் சரி, விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அந்த இயக்கத்தின் போராளிகள், மாவீரர்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களையும் மெய்யாகவே மதித்துப் போற்றுவதாக இருந்தால், தம்மை முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களையே முதன்மைப்படுத்தியிருப்பார்கள். அவர்களுக்கே வாய்ப்புகளையும் இடங்களையும் அளித்திருப்பர்.
உதாரணமாக சிறிதரன் நான்காவது தடவையாகவும் தானே பாராளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டிருக்கிறார். அடுத்த தடவையும் தானே போட்டியிட வேண்டும் என்று முயற்சிக்கிறார். பதிலாக இனியாவது அதிலிருந்து விலகி, அவர் முன்னிறுத்துகின்ற போராளிகளிலிருந்து ஒருவரை அல்லது மாவீரர் குடும்பத்திலிருந்து ஒருவரை அல்லது மாற்றுத் திறனாளி ஒருவரை நிறுத்தி, ஆதரவளித்து அவரை வெற்றியடைய வைக்க வேண்டும். அதைச் செய்வாரா?
அதைப்போல, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போராளிகளுக்கும் போரின்போது மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்டவர்களுக்கும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடமளித்திருக்க வேண்டும். இதை சிறிதரனும் செய்யவில்லை. அவருடன் நிற்கும் கும்பலும் செய்யவில்லை. இனிமேலும் செய்யப்போவதில்லை.
அதாவது கடந்த காலத்தில் போராட்டத்துக்கும் தமிழ்த்தேசியத்துக்கும் பங்களிப்புச் செய்தவர்களையும் அவற்றை வலுவாக்கம் செய்தவர்களையும் தமது தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள விளைகின்றனரே தவிர, அவர்களுக்கான இடத்தை வழங்க மறுக்கின்றனர். என்பதால்தான் இது ஒரு பகிரங்கமான ஏமாற்று. நாடகம். நடிப்பு என்று துணிவோடு குறிப்பிட வேண்டியுள்ளது.
சிறிதரனுக்கும் சிறிதரனின் அணியில் உள்ள கட்சி முக்கியஸ்தர்களுடைய பின்புலத்துக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பே இல்லை. த. குருகுலராஜா, ப. அரியரத்தினம், சிவமோகன், அ. வேழமாலிகிதன், ஜீவராசா, குமரகுரு, யதீஸ்வரன், விக்ரர் சாந்தி, வீரவாகுத்தேவர், சிறிரஞ்சன், குலேந்திரன் என ஒரு நீண்ட பட்டில் இது. இவர்களெல்லாம் புலிகள் இல்லாத சூழலில்தான் அரசியல் அரங்கிற்கு வந்தவர்கள்; வரக்கூடியதாக இருந்தவர்கள்.
மட்டுமல்ல, புலிகள் தங்களுடைய காலத்தில் பின்பற்றிய சூழல் பாதுகாப்பு, பண்பாட்டு வளர்ச்சி, கட்டமைப்புப் பணிகள், மக்கள் நலத்திட்டங்கள், பின்தங்கிய மக்களுக்கான முன்னுரிமை, பெண்களுக்கான
இடம் போன்ற பல சிறப்புச் செயற்பாடுகளில் ஒன்றைக் கூட இவர்கள் செய்யவுமில்லை. பதிலாக சூழலைச் சிதைக்கும் வகையில் சட்டவிரோத மணல் அகழ்வு, காடழிப்பு, மது விற்பனை, ஊழல், பாரபட்சம், பண்பாட்டுச் சீரழிப்பு எனச் சமூகப் பாதிப்புகளை உருவாக்குகின்றனர்.
கூடவே தேர்தல் வாக்கு அறுவடைக்கு ஏற்றமாதிரி, அதிக சிரமமும் செலவும் இல்லாத நினைவு கூருதல்களை மட்டும் செய்து மக்களைத் திசை திருப்புகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட மக்களை – அப்பாவிகளை – இலகுவில் ஏமாற்றிக் கொள்ள முடியும். பகடைக்காய்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தீர்மானம் மட்டுமே உண்டு.
கிளிநொச்சியில் நடந்து வரும் இந்தத் தீய போக்கினை, கூட்டமைப்பாக இருந்த காலத்திலேயே சம்பந்தன், மாவை சேனாதிராஜா, விக்கினேஸ்வரன் போன்றவர்கள் கேள்விக்குட்படுத்தாமல், கட்டுப்படுத்தாமல் ஆதரித்தனர். அவர்கள் மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியில் பெரும்பாலானோரும் ஆதரித்தனர்.
காரணம், தமிழரசுக் கட்சிக்குப் பலம் சேர்க்கப்பட வேண்டும். அந்தப் பலம் எந்த வழியில் கிடைத்தாலும் சரி என்பதாக இருந்தது. இந்தப் போக்கினுடைய பாதமான எதிர்கால விளைவுகளைப் பற்றி அவர்கள் அப்போது சிந்திக்கவில்லை.
அந்த முள் வளர்ச்சியடைந்து இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைமையையே பதம்பார்க்க முற்பட்டிருக்கிறது. செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலத்தில் தங்களுக்கு எதிரான தரப்புகளைத் துரோகிகளாக அடையாளப்படுத்தும் பாரம்பரியத்தைத் தொடக்கி வைத்த தமிழரசுக் கட்சி, இப்பொழுது தனக்குள்ளேயே துரோகிகள் என்று குற்றம்சாட்டி விலக்கம் செய்யும் அளவுக்கு வந்துள்ளது.
முன்பு தேர்தல் மேடைகளில் தவிர்க்க முடியாமல் கூட்டமைப்பு என்ற பேரில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் என எல்லோரும் சேர்ந்து நின்றாலும், மேடைக்கு வெளியே – மக்களிடம் வேறுபாட்டையே வலுப்படுத்தியது சிறிதரனின் தரப்பு. அதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைமை இடமளித்தபடியாற்தான் இப்பொழுது வளர்த்தவர்களின் மார்பிலே பாய அது முற்பட்டிருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே கட்சிக்குள்ளே தியாகிகளும் உள்ளனர். துரோகிகளும் உள்ளனர் என்பதுதான்.
சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதே கூட்டமைப்புள் மட்டுமல்ல, தமிழரசுக் கட்சிக்குள்ளும் குழப்பங்களும் முனகல்களும் இருந்தன. அப்பொழுதும் துரோகி – தியாகிக் கதைகள் இருந்தன. ஆனால் அதெல்லாம் இந்தளவுக்கு வெளிப்படையாக முட்டி, மோதும் அளவுக்கு இருக்கவில்லை. சம்பந்தன் தன்னுடைய ஆளுமையினால் அவற்றை முடிந்தளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
இப்பொழுது சூழல் வேறாகி விட்டது. தமிழரசுக் கட்சியின் தலைமையைக் கைப்பற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சிறிதரனுக்கு சுமந்திரனே முதலாவது எதிரியாக உள்ளார். சுமந்திரனுடைய நடவடிக்கைகளையும் வியூகங்களையும் எதிர்கொள்வதில் சிறிதரனுக்கு வலுவான நெருக்கடிகள் உண்டு.
பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சுமந்திரன் சந்தித்தபோது, ‘ஒரு தொல்லை முடிந்தது‘ என்று உள்ளுர மகிழ்ச்சியடைந்தார் சிறிதரன். ‘இனிச் சுமந்திரனுடைய அரசியல் முடிவுக்கு வந்து விடும். கட்சிக்குள்ளும் அவருக்கான இடம் இல்லாமற் போய் விடும்‘ என சிறிதரனும் அவருடைய கும்பலும் நம்பினார்கள்.
ஆனால், தன்னுடைய திறமைகளாலும் துணிச்சலான நடவடிக்கைகளாலும் சிறிதரனுடைய கணிப்பை மாற்றி அமைத்து விட்டார் சுமந்திரன். ஒரு ஆண்டுக்குள்ளேயே கட்சியைத் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சிறிதரன் தலையெடுக்க மட்டுமல்ல, வாலையே ஆட்ட முடியாத அளவுக்குச் செய்து விட்டார் சுமந்திரன்.
‘சுமந்திரனுடைய (தந்திரமான) செயற்பாடுகளுக்கெல்லாம் இடமளிக்கிறார் பதில் தலைவர் சிவஞானம்‘ என்பது சிறிதரனுக்கும் அவருடைய அணிக்கும் சகித்துக் கொள்ள முடியாத கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனுடைய விளைவுகளே சுமந்திரன் தரப்பை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கீழிறக்கம் செய்யும் விதமாக எழுதுவதும் பொதுவெளியில் சுமந்திரன், சிவஞானம் போன்றோரை எதிர்ப்பதுமாகும். அப்படியான ஒன்றே செம்மணி – அணையா விளக்குப் போராட்டத்தில் சீ.வி.கே. சிவஞானத்தையும் சாணக்கியனையும் சிறிதரன் அணி விரட்டியதாகும்.
ஆனால், சுமந்திரனும் சிவஞானமும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் என்ற வகையில் தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் உள்ளடக்கத்தில் புதிதாக ஒன்றுமே இல்லாத வெற்று டப்பாவான அந்தக் கட்சியை, தமிழ் மக்களின் முதல் நிலைக் கட்சியாக மட்டுமன்றி, இலங்கையின் இரண்டாவது, மூன்றாவது பெரிய கட்சியாகவும் இன்று சுமந்திரன் – சிவஞானம் அணி முன்னிறுத்தியுள்ளது. (இதற்கு முன் 1970 களுக்குப் பின் அரசியல் அரங்கில் காணாமல் போயிருந்த தமிழரசுக் கட்சியை 2004 இல் கிடைத்த வாய்ப்போடு முன்னிலைக்குக் கொண்டு வந்திருந்தார் சம்பந்தன். அப்போதும் சம்பந்தனுக்கு எதிராக – அவருடைய தனித்த முடிவுகளுக்கு எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்திருந்தன). தலைமைப் பொறுப்பு என்பது கட்சியையும் அது முன்னெடுக்கும் அரசியலையும் முன் கொண்டு செல்வதேயாகும்.
இதற்காக அவர்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தொடக்கம் முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி, சுயேச்சைக் குழுக்கள், ஐக்கிய மக்கள் சக்தி எனப் பல்வேறு தரப்புகளோடும் பல வகையில் அரசியல் தொடர்புகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் துரோகிப்பட்டம் வரையில் சுமக்க வேண்டிய நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகவே கட்சிக்காகத் துரோகிப்பட்டத்தையும் ஏற்கத் தயார் என்ற நிலையிலேயே இருவரும் செயற்பட்டு வருகின்றனர். இதனால் தனிப்பட்ட ரீதியில் தமக்கு ஏற்படும் பாதிப்புகளையும் பின்னடைவுகளையும் இவர்கள் ஏற்றுள்ளனர். அது ஒருவகைச் சுமை ஏற்றலே. ஆனாலும் தமக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்கின்றனர்.
ஏனென்றால், அரசியலில் அதிகாரமும் தொடர்ச்சியும் அவசியம் எனச் சுமந்திரன் – சிவஞானம் அணி கருதுகிறது. அப்படி அதிகாரமும் தொடர்ச்சியும் தமிழரசுக்கட்சிக்கு இருக்க வேண்டும் என்றால், அது விட்டுக்கொடுப்புகளையும் ஏற்றுக் கொள்ளல்களையும் கொண்ட சமரசங்களைப் பின்பற்ற வேண்டும் என நம்புகிறது.
இது தவறானது எனத் தமிழரசுக் கட்சியில் கருதுவோர், அது பற்றி கட்சியின் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். கட்சிக்குள் எதிர்த்துப் போராட வேண்டும். குறைந்த பட்சம் இப்படித்தவறான தலைமை வேண்டாம் என்று கூட ஒரு உட்கட்சிப் போராட்டத்தை – தலைமை நிராகரிப்பையாவது செய்யலாம். அதுதான் சரியானது.
என்பதால்தான் அணையா விளக்குப் போராட்டத்தைச் சிதைக்கும் விதமாக சிறிதரன் அணி குழப்பங்களை உண்டாக்கியதைப் பலரும் எதிர்த்துக் கண்டித்திருப்பதோடு, “உங்களுடைய கட்சிப் பிரச்சினையை மாட்டின் றோட்டில் (தமிழரசுக் கட்சியின் தலைமை அங்கேதான் உள்ளது) வைத்துக் கொள்ளுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்திருப்பதுமாகும்.
ஆனால் மாட்டின் றோட்டில் அதைச் செய்வதற்கு எவருக்கும் துணிவில்லை. மட்டுமல்ல, துரோகிகளாகக் காட்டப்படும் சுமந்திரனும் சிவஞானமும் (முன்பு சம்பந்தனும்) கட்சிக்குச் சேர்த்த பலத்தையும் நலன்களையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் தாராளமாகவே அனுபவிக்கின்றனர். முந்திய அரசாங்கங்களோடும் ஆட்சியாளர்களோடும் பகிர்ந்து கொண்ட அனுகூலங்கங்களையும் கேள்வியின்றிப் பெற்றுக் கொண்டனர்.
ஆக இங்கே பிரச்சினை கொள்கையோ கோட்பாடோ அல்ல. அதிகாரப் போட்டியே பிரச்சினையாகும். அதற்காக ஆடப்படும் ஆட்டமே இந்தத் துரோகி – தியாகி என்ற கண்ணாமூச்சியாகும். இது இன்னும் தொடரத்தான் போகிறது.
அது தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்கும் நிலைக்குள்ளாகியிருக்கிறது. ஏனென்றால், சரி தவறுகளுக்கு அப்பால் தமிழ்ச்சமூகத்தின் பெரிய கட்சியாக – மக்கள் ஆணையைப் பெற்ற கட்சியாக தமிழரசுக் கட்சியே இப்போது இருப்பதால், இந்தக் கவலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், யதார்த்தமோ ஒரு கண்டிப்பான வைத்தியராகும். அது தீவிரநிலைப்பட்ட சக்திகளுக்கு ஒருபோதுமே இடமளிப்பதில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடக்கம் சதாம் குசேய்ன், கேணல் கடாபி, ஆனந்தசங்கரி வரையில் அனைவரையும் தோற்கடித்தது. அது அப்படித்தான் செய்யும்.
நெகிழ்ச்சியும் ஜனநாயகத்துக்கு இடமளிக்கும் பண்பும் கொண்ட தலைமைகளையே இன்றைய அரசியல் உலகம் வெற்றியீட்ட வைக்கும். அது முழுமையான வெற்றி அல்லத்தான். இதைப் புரிந்து கொண்டவர்கள் வெற்றியடைவர். மறுப்போர் வரலாற்றுத் தோல்வியைப் பெறுவர். இந்தப் புரிதல் இருந்தபடியால்தான் JVP தன்னை நெகிழ்த்தி, NPP யாக்கி, ஆட்சியைக் கைப்பற்றியது – வெற்றியீட்டியது.
வரலாற்றையும் சூழலையும் புரிந்து, தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் கிளிநொச்சியில் தொடங்கிய சிறிதரனின் அரசியல், செம்மணிப் புதைகுழியில் முடிவடையும்.
00