மஹவ காட்டுப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 26 ஆம் திகதி பிற்பகல் மஹவ காட்டுப் பகுதியில் காருக்குள் எரிந்த நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பல பொலிஸ் குழுக்களின் கீழ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, உயிரிழந்த நபர் தனது காரில் பயணித்தபோது சந்தேக நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்று (29) தொரடியாவ மற்றும் மஹவ பகுதிகளில் 1.4 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 27 வயதுடைய மஹவ மற்றும் பிலெஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
தீக்காயங்களால் உயிரிழந்த வர்த்தகர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதன் பின்னர் எரிக்கப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
மரணித்தவர் குருநாகல் மில்லாவ பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
காட்டுப் பகுதியில் ஒரு வாகனத்திற்குள் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஜீப்பின் முன் இருக்கையில் எரித்துக் கொல்லப்பட்ட நபரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
அந்த நபர் காணாமல் போனதாக அவரது மனைவி கடந்த 25 ஆம் திகதி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மனைவியின் முறைப்பாட்டில், உயிரிழந்த நபர் சம்பவத்தன்று தலை முடியை வெட்டுவதற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.